2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

முதலிடத்தில் இந்தியா: ஐந்தாமிடத்தில் இலங்கை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தரவரிசையின் முதலிடத்தையும், அவ்வணி உறுதிசெய்தது. இத்தொடரின் முதலாவது போட்டியை வென்று, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஐந்தாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

2ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து எனக் காணப்படும் இவ்வரிசையில், 6ஆவது இடத்திலிருந்து தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஹொங் கொங், நெதர்லாந்து, சிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன காணப்படுகின்றன.

அணிக்கான தரவரிசை தவிர, பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில், இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின், இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். சுனில் நரைன், தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறார்.
மூன்றாமிடத்தில் சச்சித்திர சேனநாயக்கவும், தொடர்ந்துவரும் இடங்களில் ஷகிட் அப்ரிடி, கிறேம் கிறீமர், மிற்சல் மக்லநகன், இம்ரான் தாஹிர், தவ்லட் ஸட்ரன், ரவீந்திர ஜடேஜா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தில் ஆரொன் பின்ச், முதலிடத்தில் காணப்படுகிறார். இத்தொடரில் பங்குபற்றியிருக்காத விராத் கோலி, தனத முதலிடத்தை இழந்து, இரண்டாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்துவரும் இடங்களில், அலெக்ஸ் ஹேல்ஸ், பப் டு பிளெஸிஸ், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸன், கிறிஸ் கெயில், ஹமில்ட்டன் மஸகட்ஸா, மொஹமட் ஷஷாத், குசால் பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர்.

சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில், ஷேன் வொற்சன், ஷகிப் அல் ஹசன், ஷகிட் அப்ரிடி, மொஹமட் ஹபீஸ், மார்லன் சாமுவேல்ஸ், ஜே.பி டுமினி, யுவ்ராஜ் சிங், அஞ்சலோ மத்தியூஸ், டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா ஆகியோர் காணப்படுகின்றனர்.

விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், இரவிச்சந்திரன் அஷ்வினின் சுழற்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்காத இலங்கை அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அஷ்வின், 4 ஓவர்களில் 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி, 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X