Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 18 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்குபெறும் ஐந்தாவது அணியைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் சுற்று, நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளும் இத்தொடரின் பிரதான சுற்றில் விளையாடவுள்ள நிலையில், ஐந்தாவது அணியாக, துணை அங்கத்துவ நாடொன்று விளையாடவுள்ளது.
அவ்வணியைத் தெரிவுசெய்வதற்கான போட்டிகளே நாளை ஆரம்பமாகவுள்ளன. இறுதி ஓர் இடத்தைப் பிடிப்பதற்காக, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், ஹொங் கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
தரப்படுத்தலினதும் திறமை வெளிப்பாடுகளினதும் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் அணிக்கே அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அவ்வணி, பங்களாதேஷையும் முந்திக்கொண்டு, தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் காணப்படுகிறது. எனவே, பிரதான சுற்றுக்கு அவ்வணி தெரிவானால், ஏனைய அணிகளுக்குச் சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளில் முதற்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு அமீரக அணியும் பங்கேற்கவுள்ளன. இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஹொங் கொங் அணிக்கும் ஓமான் அணிக்குமிடையிலான போட்டியில், இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக் கிண்ணப் போட்டிகள் இம்முறை, இருபதுக்கு-20 போட்டிகளாக விளையாடப்படவுள்ள நிலையில், விறுவிறுப்பான போட்டிகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷில் இடம்பெறவுள்ள இப்போட்டிகளின் பிரதான சுற்று, எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
13ஆவது தடவையாக இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளின், நடப்புச் சம்பியனாக, இலங்கை அணி காணப்படுகிறது. அவ்வணி, பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியில், லஹிரு திரிமான்னவின் சதத்தின் உதவியோடும் லசித் மாலிங்கவின் 5 விக்கெட்டுகளின் உதவியோடும் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதன்படி, ஆசியக் கிண்ணத்தை, இந்திய அணியும் இலங்கை அணியும் தலா 5 தடவைகள் இப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .