நாளை ஈரானில் தேசியரீதியில் தேர்தல்கள்
25-02-2016 12:29 PM
Comments - 0       Views - 20

ஈரானின் மாபெரும் தேர்தல்கள், நாளை இடம்பெறவுள்ளன. ஈரானிய மக்கள், தங்களது நாடாளுமன்றத்துக்கும் நிபுணர் சபைக்குமான உறுப்பினர்களை, நாளை தெரிவுசெய்யவுள்ளனர்.

ஈரான் நாடாளுமன்றத்தில் 290 ஆசனங்கள் காணப்படுகின்றன. அதேபோல், நிபுணர் சபை, அந்நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமெனெயை, மேற்பார்வை செய்யும் தகுதியைக் கொண்டிருக்கிறது. எனவே, நாளை இடம்பெறவுள்ள தேர்தல்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

ஏனைய ஜனநாயக நாடுகளைப் போலல்லாது, முழுமையான ஜனநாயகம் இல்லாத நிலைமையே ஈரானில் காணப்படுகிறது. அந்த நாட்டில் மாற்றங்களை மேற்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள், தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து இல்லாது செய்யப்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நாளைய தேர்தல்களில், 6,229 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 586 பேர் (9 சதவீதம்) மாத்திரம் பெண்களாவர்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை, ஜனாதிபதி ஹஸன் றெளஹனி முன்னெடுத்ததைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற முதலாவது தேர்தல் என்பதால், அதன் விளைவுகள் வெளிப்படுத்தப்படக்கூடிய தேர்தலாக இது அமையலாம் எனக் கருதப்படுகிறது.

உயர்தலைவர் அயதுல்லா அலியும், மேற்கத்தேய நாடுகளுக்கெதிரான வேட்பாளர்களுக்கு ஈரானியர்கள் வாக்களிப்பார்கள் என எண்ணுவதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"நாளை ஈரானில் தேசியரீதியில் தேர்தல்கள் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty