Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை (26), சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது.
கடந்த 18 வருடங்களாக, கால்பந்தாட்ட உலகை ஆளும் கூட்டமைப்பின் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், எந்தவொரு பீபா நடவடிக்கையிலும் ஈடுபட எட்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதியீடு செய்யவுள்ளார்.
மேற்படி பீபா தலைவருக்கான வாக்கெடுப்பில், பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 209 அங்கத்துவ நாடுகளும் தலா ஒவ்வொரு வாக்குகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இரகசிய வாக்களிப்பு நிலையத்தில் அவை தமது வாக்குகளை அளிக்கவுள்ளன.
இத்தேர்தலில், இரண்டில் மூன்று பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெறுமிடத்து, அதாவது 139 வாக்குகளை பெறுமிடத்து, அவர் முதலாவது சுற்றில் வெற்றி பெறுவார். இல்லாவிடின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இடம்பெற்று, அதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவர் தலைவராகத் தெரிவுசெய்யப்படுவார்.
இத்தேர்தலில், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கியன்னி இன்பன்டினோ, 2010 உலகக்கிண்ணத்தை ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான டோக்யோ செக்ஸ்வேல், பீபாவின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் ஜெரோம் சம்பெய்ன், பீபாவின் முன்னாள் உப தலைவரான இளவரசர் அலி பின் அல்-ஹுஸைன், பீபாவின் உபதலைவரும் ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவருமான ஷெய்க் சல்மான் பின் ஏப்ராகிம் அல்-கலீபா ஆகியோர் தலைவர் பதவிக்காக போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை, இத்தலைவருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் மாற்றங்களை இளவரசர் அலி பின் அல்-ஹுஸைன் கோரியிருந்த நிலையில், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தேர்தல் திட்டமிடப்பட்டது போன்று நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .