X

X
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர்

-ச.விமல்

ஆசியக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இன்று ஆரம்பிக்கவுள்ளது. முதற் தடவையாக 5 அணிகள் பங்குபற்றும் தொடராக அமையவுள்ள அதேவேளை முதற் தடவையாக இருபதுக்கு-20 தொடராக நடைபெறவுள்ளது. 1986ஆம் ஆண்டு ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தினால் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சாஜாவில் நடாத்தப்பட்டது.  இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு இறுதியாக பங்களாதேஷில் இந்த தொடர் நடைபெற்றது. நான்கு நாடுகள் பங்குபற்றிய இந்த தொடரில் இந்த வருடம் ஆசியக் கண்ட நான்கு துணை அங்கத்துவ நாடுகளில் இருந்து ஒரு நாடு தெரிவுகாண் போட்டிகள் மூலம் தெரிவாகி ஐந்தாவது நாடாக இணைந்துள்ளது.

இந்திய, இலங்கை அணிகள் ஆதிக்கம் செலுத்திய போட்டி தொடராக இந்த தொடர் கடந்த காலங்களில் அமைந்துள்ளது. இரு அணிகளுள் தலா 5 தடவைகள் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி 2 தடவைகள் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை அணி 9 தடவைகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இந்தியா 8 தடவை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 4 தடவைகள் பாகிஸ்தான் அணியும் ஒரு தடவை பங்களாதேஷ் அணியும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. கடந்த கால ஆதிக்கங்கள் இலங்கை, இந்திய அணிகளிடம் இருந்தாலும் இம்முறை அதில் தளர்ச்சி காணப்படலாம். அல்லது சவால்கள் அதிகமாக இருக்கலாம். குறிப்பாக பங்களாதேஷ் அணி மிகப்பெரிய சவால்களை வழங்கலாம். கடந்த வருடத்தில் பங்களாதேஷ் சென்ற அணிகளை பங்களாதேஷ் வென்றுள்ளது. அதுவும் இம்முறை இருபதுக்கு-20 போட்டிகள் என்ற காரணத்தினால் எதனையும் இலகுவாக கூறமுடியாது.

இந்த தொடர் நிச்சயம் ஆசிய அணிகளின் உலக  இருபதுக்கு -20 தொடரின்  முன்னோடிப் போட்டியாக அமையவுள்ளது எனக்கூறலாம். இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் நிச்சயம் உலக இருபதுக்கு -20 தொடரின் ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக திகழும். இவ்வாறான பெரிய தொடர் ஒன்றுக்கு முன்னர் ஆசிய அணிகள் விளையாடும் தொடர் மேலைத்தேய அணிகளுக்கு சவால்களை வழங்கும் ஒன்றாகவும் அமையும். இந்த தொடரில் கிடைக்கும் போட்டித் தன்மை, அணிகளுக்கிடையிலான மன வலிமை என்பன நிச்சயம் அடுத்தக் கடத்தை நோக்கி நகர உதவும். ஆனால் மோசமான  முடிவுகள் அணிகளை இன்னமும் பின்னுக்கு தள்ளும் வாய்ப்புகளும் உண்டு. ஆனாலும் இந்த தொடரில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என கணிப்பிட முடியும்.

ஆசியக் கிண்ண கிரிகெட் தொடர் கேள்விக்குறியான நிலையில் இருந்தது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்த தொடரை நிறுத்துமாறு கோரி இருந்தது. 50 ஓவர்கள் தொடராக இல்லாமல், இருபதுக்கு -20 தொடராக நடாத்துவதாக ஆசியக்கிரிக்கெட் சம்மேளம் கோரியதை தொடர்ந்து அதற்க்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் இந்த தொடர் நடாத்தப்படுகின்றது. இந்தியாவில் உலக 20-20 தொடர் காரணமாக நடாத்துவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. பாகிஸ்தானில் நடாத்த முடியாது. சர்வதேசக்கிரிக்கெட் பேரவை அனுமதிக்காது. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் மாத்திரமே முடியும் என்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் இவ்வாறான போட்டிகளை நடாத்த தயாராக இல்லை என்ற நிலையும் உள்ளது. எனவே பங்களாதேஷ் மட்டுமே ஒரே தெரிவு. ஆனால்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்தி இருக்க முடியும். உலக இருபதுக்கு-20 தொடரை குறி வைத்து பங்களாதேஷில் நடாத்தப்படுகின்றது என்ற முடிவுக்கு வரலாம்.   பாகிஸ்தானே இம்முறை பங்களாதேஷ் இந்த தொடரை நடாத்த வேண்டும் என முன் மொழிந்தது. அதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. நீண்ட நாட்களாக போட்டிகள் இல்லாமல் இருக்கும் இலங்கையில் அடுத்த ஆசியக்கிண்ணம் நடைபெற்றால் ரசிகர்களுக்கு சந்தோசம் கிடைக்கும். புதிய நிர்வாக சபை அதற்கு முயற்சிக்கும் என நம்பலாம். 

 

அணி விபரம்

இலங்கை

லசித் மலிங்க (தலைவர்), அஞ்சலோ மத்தியூஸ் (உபதலைவர்), தினேஷ் சந்திமால், திலகரட்ன டில்ஷான், நிரோஷன் டிக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, மிலிந்த சிறிவர்தன, தசூன் சானக, சாமர கப்புகெதெர, நுவான் குலசேகரா, துஸ்மாந்த சமீர, திசர பெரேரா, சசித்திர  சேனாநாயக்க, ரங்கன ஹேரத், ஜெப்ரி வன்டர்சாய்

அனுபவமான அணியாகவே இந்த அணி தெரிகின்றது. பல புதிய வீரர்களை பரீட்சித்து பார்த்து இந்த அணி தெரிவு செய்யபப்ட்டுள்ளது. ஓரிரு வீரர்களே இந்த அணியில் அனுபம் குறைந்த வீரர்கள். எனவே இந்த அணியால் இந்த தொடரை வெல்ல முடியாது எனக்கூறிவிட முடியாது. துடுப்பாட்டம் இந்த அணியிடம் அதிக பலம் எனக் கூறலாம். 10 வீரர்கள் அல்லது 9 வீரர்கள் துடுப்பெடுத்தாடக்கூடியவர்கள். சகலதுறை வீரர்கள் அதிகம் காணப்படுகின்றனர். ஒருவர் கை விட்டாலும் இன்னுமொருவர் கைகொடுக்கும் நிலை உள்ளது. ஆரம்ப வரிசைகள் நிச்சயம் இல்லாமல் இருப்பதே துடுப்பாட்டத்தில் பலவீனம். திலகரட்ன டில்ஷானிடமிருந்து சிறந்த துடுப்பாட்டத்தை எதிர்பார்க்க முடியும். ஆனால் அவருடன் இணைந்து களமிறங்கப்போகும் நிரோஷன் டிக்வெல்ல சந்தேகத்துக்குரியவராக இருக்கின்றார். மூன்றாமிடத்தில் டினேஷ் சந்திமால் களமிறங்கும் வாய்ப்புகள் உளளன. ஷெஹான் ஜெயசூரியா மீண்டும் அணிக்குள் வந்திருப்பது அவருக்கு மூன்றாமிடத்தை வழங்கும் வாய்ப்புகளையும் தந்துள்ளது. அஞ்சலோ மத்தியூஸுக்கு ஐந்தாமிடம் நிச்சயம். ஷெஹான் மூன்றாமிடத்தில் களமிறங்கினால் சாமர கப்புகெதெர ஆறாமிடத்தில் களமிறங்குவார். இல்லாவிட்டால் நான்காமிடத்தில் களமிறங்குவார். அடுத்த இடம் மிலிந்த சிறிவர்த்தன. இலங்கை அணி மிலிந்த சிறிவர்தனவை தொடர்ந்தும் பின்வரிசை துடுப்பாட்ட வீரராக பாவிக்காமல் மத்திய வரிசை வீரராக பாவித்தால் அவரிடம் அதிக ஓட்டங்களை எதிர்பார்க்கலாம். திசர பெரேரா அடுத்த இடத்தில்  களமிறங்குவார்கள். சசித்திர சேனநாயக்க, ரங்கன ஹேரத்ஆகியோர் அடுத்த இடங்களிலும், லசித் மலிங்க, துஸ்மந்த சமீர ஆகியோர்  இறுதி இடங்களிலும்   களமிறங்குவார்கள். நுவான் குலசேகரா அணிக்குள் வந்தால் துடுப்பாடம், அவரின் அனுபவம் என்பன கை கொடுக்கும். லசித் மலிங்கவும், இலங்கை அணியும் இணைந்தே அந்த முடிவை எடுக்க வேண்டும்.  இந்த அணியின் முன் வரிசை, பின் வரிசை இரண்டையும் ஒப்பிட்டால் பின் வரிசையை அதிகம் நம்பி இருக்கலாம். ஆனால் இந்த அணிக்குள் துஸ்மந்த சமீர நிச்சயம் உள் வாங்கப்படும் வீரராக இலங்கை திலரட்ன டில்ஷானுடன் , திசர பெரேராவை களமிறக்கி கண் மூடி அடிக்கும் திட்டத்தை செய்தால் சிலவேளைகளில் கை கொடுக்கும் நிலை உள்ளது. ஒரு போதும் இலங்கை அணி அதனை செய்ததில்லை. செய்யப்போவதுமில்லை எனக்கூறலாம். இவர்களைத் தாண்டி அணிக்குள் வரப்போகும் வீரராக தசூன் சானக மட்டுமே உள்ளார். ஷெஹான் ஜெயசூரியாவை நீக்கி மேலதிக வேகப்பந்துவீச்சாளராக நுவான் குலசெகரவை இணைக்கும் நிலை ஒன்று இருந்தாலும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆசிய ஆடுகளங்களில் தேவையா என்ற நிலை உண்டு. அஞ்சலோ மத்தியூஸ், திசர பெரேரா ஆகியோர் முழுமையாக பந்து வீசினால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை நீக்கி விளையாட முடியும். இலங்கை அணியின் யுக்திகள் எவை என்பதனை போட்டி நடைபெறும் தினத்திலேயே அறிந்து கொள்ள முடியும். ஆரம்ப துடுப்பாட்ட சிக்கல் இல்லாவிடால் இலங்கை அணி சம்பியன் பட்டம் வெல்லும் அதிக வாய்ப்புகள் உள்ள அணியாக கூற முடியும்.

இந்தியா

மகேந்திர சிங் தோனி(தலைவர்) , ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விராத் கோலி, அஜிங்கையா ரெஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹட்ரிக் பாண்டையா, ரவீந்தர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், பவான் நேகி, புவனேஸ்வர்குமார்.

இந்தியா அணி தமது பலமான துடுப்பாட்ட வரிசையுடன் களமிறங்கவுள்ளது. கடந்த இலங்கை அணியுடனான குழுவில் இருந்து மனீஷ் பாண்டே நீக்கப்பட்டு விராத் கோலி மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இலங்கை அணியுடன் விளையாடிய அணியில் இருந்து ரஹானே மாத்திரம் விலகி விராத் கோலிக்கு இடம் வழங்குவார் என நம்பலாம். யுவராஜ் சிங் தனது மீள் வருகையை காட்ட சரியான போட்டி வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. இந்த தொடரில் இந்தியா அணி நான்காமிடத்தில் அவருக்கு துடுப்பாடும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம். தோனிக்கு உபாதை ஏற்பட்டுள்ளமையினால் ஓய்வு தேவைப்படும் என்ற அடிப்படையில் பார்த்திவ் பட்டேல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மொஹமட் ஷமி குழுவில் இணைக்கப்பட்ட போதும் உபாதை பூரண குணமடையாமையினால் அணியால் விலகியுள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சு கடந்த இரு தொடர்களிலும் பலமாக இருந்துள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. அஷ்வின், ஜடேஜா ஆகியோருடன் யுவராஜ், ரெய்னா ஆகியோரும் இணைந்து மேலதிக பலத்தை வழங்குகின்றனர். ஆஷிஸ் நெஹ்ரா, பும்ரா ஆகியோரும் இணைந்து நல்ல முறையில் பந்து வீசி வருகின்றனர். புவனேஸ்வர் குமார் அணியால் நீக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சு மட்டுமே இந்தியாவின் பலவீனமாக உள்ளது. ஆனாலும், நெஹ்ரா, பும்ரா கூட்டணி கடந்த தொடர்கள் போன்று பந்து வீசினால் இந்தியா முழுமையான பலமான அணி. இந்தியாவின் அதிக பலம் துடுப்பாட்ட ஆரம்பம். முதல் மூவரும் அபார போர்மில் இருக்கின்றார்கள் என்பது மத்திய வரிசை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக்கிண்ணத்தை வெற்றி பெற அதிக வாய்புகள் உள்ள அணியாக இந்திய அணியைக் குறிப்பிடலாம்.

பாகிஸ்தான்

ஷஹிட் அப்ரிடி, அன்வர் அலி, இப்திகார் அஹமட், இமாட் வசீம், குராம் மன்சூர், மொஹமட் ஆமிர், மொஹமட் ஹபீஸ், மொஹமட் இர்பான், மொஹமட் ஷமி, மொஹமட் நபாஸ், சப்ராஸ் அஹமட், ஷர்ஜீல்கான், சொஹைப் மலிக், உமர் அக்மால், வஹாப் ரியாஸ், பாபர் அஸாம்

ஷஹிட் அப்ரிடியின் தலைமியில் களமிறங்கவுள்ள இந்த அணி பார்வைக்கு புதிய அணியாக தென்படுகின்றது. அண்மைக்காலமாக தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணியை பலமான அணியாக இந்த தொடரில் கணக்கில் எடுக்கலாமா என்ற கேள்வியும் கூட இருக்கின்றது. ஆனால பலமானவர்கள் இந்த அணிக்குள் இருக்கின்றார்கள் என்பது இந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்ற தகவலையும் தருகின்றது. இறுதியாக விளையாடிய ஐந்து'போட்டிகளில் நான்கில் தோல்வி. அதிலும் இங்கிலாந்துடன் ஷார்ஜாவில் நடைபெற்ற தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி என்ற மோசமான நிலையில் பாகிஸ்தான் உள்ளது. பந்துவீச்சாளர்கள் ஓரளவு இவர்கள்தான் என்று சொல்லக் கூடிய நிலையில் உள்ளனர். துடுப்பாட்டத்தில் மொஹமட் ஹபிஸ், சொஹைப் மலிக் , ஷப்ராஸ் அஹமட், , உமர் அக்மால் ஆகியாரை தவிர்த்து யார் மற்றவர்கள் என்பதை சொல்லவது கடினம். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணியில் இடம் பிடித்து வந்த ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தலைவர் அஹமட் ஷெசாட் அணியால் நீக்கப்பட்டுள்ளார். மூன்றாமிலக்கத்தில் விளையாடி வந்த சொஹைப் மக்சூட் அணியால் நீக்கபப்ட்டுளார். இலங்கை போன்ற ஆரம்ப இஸ்தானங்கள் பிரச்சினை. மத்தியவரிசை சொஹைப் மலிக், உமர் அக்மல், ஷப்ராஸ் அஹமட், சஹிட் அப்ரிடி ஆகியோர் பலத்தை வழங்குவார்கள். பந்துவீச்சில் மொஹமட் ஷமி அணிக்குள் மீண்டும் இடம் பிடித்துள்ளார். வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர் ஆகியோர் பலமாக பந்து வீசக்கூடியவர்கள். போட்டிகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள். சஹிட் அப்ரிடி, சொஹைப் மலிக் ஆகியோர் சுழற் பந்து வீச்சாளர்கள். இமாட் வசீம் மேலதிக சுழற்பந்து வீச்சாளர்களாக செயற்படுவார். இந்த அணிதான் இறுதி அணி என திட்டவட்டமாக கூற முடியாது. பாகிஸ்தான் எப்போதுமே கணிப்பிடமுடியாத அணி. இம்முறை அதே நிலைதான் உண்டு. ஆனாலும் பங்களாதேஷ் அணியுடன் ஒப்பிடும் போது கூட என்ன நடக்கும் என்பதனை இலகுவாக கூற முடியாது.  

பங்களாதேஷ்

மஷ்ரபி மோட்டர்சா (தலைவர்), சகிப் அல் ஹசன்,  இம்ருல் கைஸ், மொஹமட் மிதுன், மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்கார், சபீர் ரகுமான், நசீர் ஹொசைன், முஷ்டபிசூர் ரகுமான், அல்-அமீன் ஹொசைன், டஸ்கின் அஹமட், அரபாத் சன்னி, அபு ஹைடர், நூருல் ஹசன்

பங்களாதேஷ் அணியின் முக்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் அணியில் இல்லாதது மிகப்பெரும் பாதிப்பு. 20-20 போட்டிகளில் அதிரடியான வீரர். அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வீரர். சகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் துடுப்பாட்டத்தில் பலமானவர்கள். கடந்த வருடத்தில் ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடரில் பங்காளதேஷ் அணி சிறப்பாக செயற்பட்ட அளவுக்கு இருபதுக்கு -20 போட்டிகளில் எதையும் சாதிக்கவில்லை. அண்மையில் சிம்பாவே அணியுடன் நடைபெற்ற தொடரிலும் இருபதுக்கு-20 என்ற சமநிலை முடிவே கிடைத்தது. பங்களாதேஷ் அணி பலமான, இலகுவாக வெல்ல முடியாத அணியாக மாறியுள்ள போதும் பலமான அணிகளை தோற்கடிக்க அவர்களால் இயலுமா என்பது கேள்வியாகவே உள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இம்ருல் கைஸ், சவுமியா சர்கார் ஆகியோர் களமிறங்குவார்கள். சபீர் ரஹ்மான் மூன்றாமிடத்திலும், மஹமதுல்லா நான்காமிடதிலும், சகிப் அல் ஹசன் அடுத்த இடத்திலும் துடுப்பாடுவார்கள். முஷ்பிகுர் ரஹிம் ஆறாமிடம். இவர்களை தாண்டி அடுத்த இரண்டு இடங்கள் கொஞ்சம் நிலை இல்லாத நிலைமையில் உள்ளது. மஸ்ரபி மோர்தாசா, அல் அமீன் ஹொசைன், முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் நிச்சய இடம் பிடிக்கக்கூடியவர்கள். போர்மிலும் உள்ளவர்கள். சுழற்பந்து வீச்சாளராக அணிக்குள் இணைக்கப்படும் வாய்ப்பு அரபாத் சன்னிக்கு மட்டுமே அதிகமாக உள்ளது. மாற்றமில்லாத தொடர்ச்சியான அணியாக இருந்து வருவது பலம். இவர்கள் நிச்சயம் இந்த தொடரில் முக்கிய அணிகளில் ஒன்றை வீழ்த்தி இலகுவாக இறுதிப் போட்டிக்குள் மற்ற அணிகள் நகரும் என்ற நிலையை உடைக்கும் வல்லமை கொண்ட அணி. 2012ஆம் ஆண்டு போன்று இறுதிப்போட்டிக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மூன்றாம் நிலை அணியாக கூறக்கூடிய நிலையிலேயே பங்களாதேஷ் அணி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்

அம்ஜாட் ஜவாட், அஹமட் ரசா, பஹாட் தாரிக், பர்ஹான் அஹமட், மொஹமட் நவீட், மொஹமட் செஷாட், முஹமட் ஹலீம், முஹமட் உஸ்மான், ஸ்வாப்னில் பட்டேல், காதீர் அஹமட், ரொஹான் முஷ்டபா, சக்லைன் காதீர், ஷைமன் அன்வர், உஸ்மான் முஸ்டாக், ஷகீர் மக்சூட்

ஐக்கிய அரபு அமீரக அணி முதற் தடவையாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கால் பதித்துள்ளது. ஆசியக் கிண்ண துணை அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்று இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. பெரியளவில் சவால்களை எதிரணிக்கு வழங்காத போதும் இருபதுக்கு-20 போட்டிகள் என்ற காரணத்தினால் தனி ஒருவர் கூட ஏதும் சவால்களை ஏற்படுத்த முடியும். 10 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அணி எவ்வாறு இருந்ததோ அதே போன்ற ஒரு நிலையிலும் கூட நாங்கள் பார்க்க முடியும். சிறிய அணிகள் பெரிய அணிகளுடன் விளையாடும் விதம் ரசிக்கக்கூடிய அளவிலும் இருக்கும். அவாறன போட்டிகளை பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர். அவ்வாறு இந்த அணி விளையாடும் போட்டிகளை பார்க்க முடியும்.

 

  பெப்ரவரி 24 - பங்களாதேஷ் எதிர்  இந்தியா

பெப்ரவரி 25 -ஐக்கிய அரபு ராட்சியம் எதிர்  இலங்கை

பெப்ரவரி 26 -ஐக்கிய அரபு ராட்சியம் எதிர் பங்களாதேஷ்

பெப்ரவரி 27 -பாக்கிஸ்தான் எதிர்  இந்தியா

பெப்ரவரி 28 -இலங்கை எதிர்  பங்களாதேஷ்

பெப்ரவரி 29 -ஐக்கிய அரபு ராட்சியம் எதிர் பாக்கிஸ்தான்

மார்ச் 01 -இலங்கை எதிர் இந்தியா

மார்ச் 02 -பாக்கிஸ்தான் எதிர்  பங்களாதேஷ்

மார்ச் 03 -ஐக்கிய அரபு ராட்சியம் எதிர் இந்தியா

மார்ச் 04 -பாக்கிஸ்தான் எதிர்  இலங்கை

மார்ச் 06 - இறுதிப் போட்டி

அனைத்துப் போட்டிகளும் இலங்கை நேரப்படி இரவு 7.00 இற்கு ஆரம்பமாகும். பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.


ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.