2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

கலப்புத் திருமணம்: இனச்சுத்திகரிப்பு முயற்சியா?

Thipaan   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவராகச் செயற்படுவார் என்று பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டவுடனேயே சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் கடந்த 19ஆம் திகதி நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தெரிவித்த கருத்து, தமிழ் மக்கள் மத்தியில் பாரதூரமானதொரு விவகாரமாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கலப்புத் திருமணங்கள் மூலம், அமைதியை ஏற்படுத்தலாம் என்ற கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார். சாதி, மத, இன அடையாளங்களுக்கு அப்பால், கலப்புத் திருமணங்களைச் செய்வதன் மூலம், நாட்டின் அமைதியை ஏற்படுத்தலாம் என்று அவர் கூறியிருந்தார்.

தனது கருத்தை வலியுறுத்துவதற்காக விஞ்ஞான ரீதியாக அடுத்த சந்ததி வீரியம் பெற்றதாக விளக்கும் என்று நியாயப்படுத்தவும் முயன்றார், வரலாற்று ரீதியாக விளக்கம் கொடுக்கவும் முற்பட்டார். இன, மத, சாதிக் கலப்பின் மூலம், பிறக்கும் குழந்தைகள், ஏனைய குழந்தைகளை விட புத்திசாலிகளாக இருப்பார்கள் என்றும், கலத்தல் என்பது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விளைவுகளின்படி நன்மைகளைத் தரவல்லது என்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியிருந்தார்.

தமிழ்ச் சமூகம், கல்வியின் மீது அதிக நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டது என்பதால், ஆளுநரின் இந்தக் கருத்து தமிழ் மக்களை குறிவைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் இருந்த முன்னைய அரசர்கள் தென்னிந்தியாவில் உள்ள அரச குடும்பத்தினருடன் தான் திருமணத் தொடர்புகளை வைத்திருந்தனர் என்றும் அவர் கூறியிருந்தார். இதன்மூலம் அவர் கூறவந்தது, சிங்கள இனம் தூய்மையானது அல்ல என்பதை மட்டுமல்ல. அதற்கும் அப்பால், தமிழ் இனமும் அவ்வாறானதே என்பதையும் தான். தானும் ஒரு கலப்பு மனிதன் தான் என்று குறிப்பிட்டதன் மூலம், கலப்பு என்ற விடயம் பற்றி போதிக்கும் தகைமை தனக்கு இருக்கிறது என்பதையும் வலியுறுத்த முனைந்தார்.

ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கலப்பு திருமணம் பற்றி கூற வந்திருக்கின்ற விடயம், மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டது.

சாதி ரீதியான கலப்பு, மத ரீதியான கலப்பு, இன ரீதியான கலப்பு இந்த மூன்றையும் வலியுறுத்தித் தான் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனாலும், ஆளுநரின் அடிப்படைக் கருத்து இனக்கலப்பு பற்றியதாகவே இருந்தது. ஏனெனில், இலங்கையில் தற்போது காணப்படும் இனப்பிரச்சினைக்கு சாதி ரீதியான பிரச்சினைகளோ, மத ரீதியான பிரச்சினைகளோ காரணம் அல்ல.

சாதி ரீதியான கலப்பு என்பது, ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்ட ஒன்று தான். மத ரீதியான கலப்பும் அப்படித் தான்.

அது தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் இடம்பெறுகிறது. தானும் ஒரு கலப்பு மனிதன் என்று ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டது அந்த வகையினது தான். ஆனால், இனங்களுக்கிடையிலான கலப்பு என்ற விடயம் தான், முக்கியமானதும் சிக்கலானதுமாகும்.

இரண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் இருக்கின்ற போது, அதனால், அமைதியின்மை நிலவுகின்ற போது, இனக்கலப்பு என்ற விடயம் அசாதாரணமானது. அதைவிட, இனக்கலப்பு ஒன்றின் ஊடாக அமைதியை உருவாக்குவது என்ற திட்டமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும்.

சிங்கள இனம் தூய்மையானதல்ல, கலப்பு இனம் என்ற வரலாற்று உண்மையை, ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் அதனைச் சிங்கள சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?

அதேவேளை, தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் தம்மைக் கலப்பினத்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்றோ, அவ்வாறு இருக்க வேண்டும் என்றோ வேறு எந்த இனத்தவர்களும் எதிர்பார்க்கக்கூடாது.

ஒவ்வொரு இனமும், தமது இனத்தின் தூய்மையை, அடையாளத்தை, கலாசாரத்தை, பழக்கவழக்கங்களைப் பின்பற்றவே விரும்பும்.

அதற்கான உரிமைகள் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். அந்த உரிமைகளை, மறுப்பதற்கோ, அல்லது மாற்றியமைப்பதற்போ யாருக்கும் அதிகாரம் கிடையாது.

இலங்கையில் அமைதியற்ற நிலை தோன்றக் காரணம், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளும், ஆக்கிரமிப்புகளும் தான்.

தமிழர்கள் தமது உரிமைகள் பறிக்கப்பட்ட போதும், தமது இனத்தின் அடையாளங்கள் சிதைக்கப்பட்ட போதும், தமது நிலங்கள் அபகரிக்கப்பட்ட போதும், தமது வாழ்வியல் உரிமைகள் நசுக்கப்பட்ட போதும் தான், போராடத் தலைப்பட்டனர்.

அப்படியான நிலையில், இனக்கலப்பின் ஊடாக அமைதியை உருவாக்க முடியும் என்ற ஆளுநரின் கருத்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகிறது. ரெஜினோல்ட் குரே மட்டுமல்ல, இந்தக் கலப்பு விடயத்தை முன்னரும் பல இராணுவ அதிகாரிகளும், அமைச்சர்களும் கூடக் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் பெண் எடுக்கப் போவதாகவும், தமிழ் பெண்களை திருமணம் செய்து, இன ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதாகவும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில், இராணுவத்தினர் அதிகளவில் இரத்தம் கொடுப்பதை மையப்படுத்தி,இராணுவ அதிகாரியொருவர் இப்போது, யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் எவரிடம் தூய்மையான தமிழ் இரத்தம் ஓடவில்லை, சிங்கள இரத்தம் தான் ஓடுகிறது என்று முன்னர் கிண்டலாக கூறியதையும் மறக்க முடியாது. அதாவது, தமிழ் மக்களுடன் திருமணக் கலப்பை ஏற்படுத்தி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்ற எண்ணம் தான், சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருக்கிறது.

தமிழர்கள் கேட்கின்ற உரிமைகளைக் கொடுக்க மனமற்றவர்கள், அதற்கு இதுபோன்ற குறுக்குவழியொன்றைத் தான் தேடுகின்றனர்.

தமிழர்களுக்கான இனஅடையாளங்கள், தொலைக்கப்பட்டு விட்டால், அவர்கள் தமக்கான உரிமைகளைக் கோரும் பலத்தை இழந்து போவார்கள் என்றுதான் அவர்கள் சிந்திக்கிறார்கள்.

தமிழர்களிடம், சமஷ்டி அதிகாரத்தை வழங்கவே தயங்குகின்ற சிங்கள அரசியல் தலைமைகள், தமிழர்களுடன் தமது வாழ்க்கையை சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்கு எவ்வாறு இணங்குவார்கள்?

எத்தகைய கலப்புத் திருமணங்களும் இயல்பாக நடைபெறும் போது அவை எதிர்ப்புக்குரியவையாக இருக்க முடியாது. இனரீதியான கலப்புத் திருமணங்கள் கூட இயல்பானதாக, திட்டமிட்டதாக அல்லாமல் நடக்கும் போது, அதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

ஆனால், இனக்கலப்பு ஏற்பட வேண்டும் என்று, திட்டமிட்டு செயற்படுத்துவதை இனச்சுத்திகரிப்பாகவே கருத வேண்டும்.

இனச்சுத்திகரிப்பு என்பது தனியே ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களைப் படுகொலை செய்தல், அவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தில் இருந்து துரத்துதல், அடையாளங்களைச் சிதைத்தல் மட்டுமல்ல. அந்த இனத்தின் தூய்மையையும் தனித்துவத்தையும் கெடுப்பதும் அதில் அடங்கும்.

உலக வரலாற்றில், இனத் தூய்மையைக் கெடுப்பதற்கு இதுபோன்ற பல வழிகள் கையாளப்பட்டிருக்கின்றன.

போர்களின் போது, ஆண்கள் கொல்லப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும், பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு இனத் தூய்மையைக் கெடுப்பதும், ஒரு திட்டமிட்ட செயற்பாடுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

சீனாவில் ஜப்பானியர்கள் இதனைச் செய்தனர். யூகோஸ்லாவிய போரிலும் இத்தகைய வழிமுறை கையாளப்பட்டது. ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இத்தகைய வழிமுறை காட்டுமிராண்டித்தனமாக பயன்படுத்தப்பட்டது.

திட்டமிட்டு, ஓர் இனத்தின் அடையாளம் தனித்துவம், என்பனவற்றைச் சிதைத்து, அதனை இல்லாமல் செய்வதே இதன் நோக்கம். போரின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு அது.

ஆனால், வடக்கு மாகாண ஆளுநர் முன்மொழியும் இனக்கலப்பு என்பது இன்னொரு வகையான இனச்சுத்திகரிப்பு.  இது, அமைதியின் பெயரால் முன்மொழியப்பட்டுள்ள இனச் சுத்திகரிப்பு.

இந்த இரண்டின் மூலமும், நடக்கப் போவது ஒன்று தான். இனத்தின் தனித்துவ அடையாளங்கள் இல்லாமல் செய்வதே இரண்டினதும் பொது நோக்கம்.

சிங்கள இனம் தனது இனத்தின் தனித்துவத்தை காப்பாற்ற விரும்புகிறதா இல்லையா என்பதை, சிங்களவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், தமிழர்கள் தமது இனத்தின் அடையாளத்தையும், தனித்துவத்தையும், தூய்மையையும் கட்டிக்காக்கக் கூடாது என்று கூறும் உரிமை வேறெந்த இனத்தவருக்கும் கிடையாது.

சிங்கள இனத்துடன் கலப்பு உறவை ஏற்படுத்திக் கொண்டவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருக்கிறார். அவர் இதனை ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளாவிடினும், ஆளுநரின் கருத்துக்கு அவர் அளித்துள்ள பதில், தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளதை மறுக்க முடியாது.

முதலில் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுங்கள், அதற்குப் பின்னர், கலப்பு உறவு பற்றி யோசிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அவர் இதனைக் கூறியது, ஆளுநரின் முன்பாக மட்டுமல்ல, ஜனாதிபதியின் முன்னிலையிலும் கூடத் தான்.

தமிழர்களுக்கு உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர்கள், அவ்வாறு உரிமைகளை மறுப்பதற்கான ஓர் உபாயமாக இதனைக் கையாள முற்படக் கூடாது என்பதற்காகத் தான், முதலமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கலாம்.

எவ்வாறாயினும், அரசியல் மட்டங்களிலும், தமிழ் மக்கள் மத்தியிலும், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வடக்கின் புதிய ஆளுநர், இந்தக் கலப்பு விவகாரத்தினால்- அந்த அந்த எதிர்பார்ப்பை தானே நொருக்கி விட்டார் என்று தான் கூற வேண்டும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X