X

X

திலங்க சுமதிபாலவின் உச்சக்கட்ட நகைச்சுவை

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன மீதான இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அண்மைய விமர்சனம், அதிக புருவங்களை உயர்த்தியிருந்தது. உலக இருபதுக்கு-20 தொடரில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல ஜெயவர்தன செயற்படவுள்ளமையே, சுமதிபாலவின் பிரச்சினையாக இருந்தது.

மஹேல ஜெயவர்தனவை 'துரோகி" என்று நேரடியாக அழைக்காமை மாத்திரமே, சுமதிபாலவின் விமர்சனத்தில் இருந்த ஒரே குறை. அதைத் தவிர, மஹேலவின் நேர்மை, அவரது நாட்டுப் பற்று, தொழில் மீதான அவரது நற்பண்பு என, அனைத்தையும் சுமதிபால கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும், உலக இருபதுக்கு-20 தொடரில் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமது போட்டி அணியொன்றுக்கு மஹேல பயிற்சி வழங்குவது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய சுமதிபால, 'ஓய்வுபெற்று சில மாதங்களில், மற்றோர் அணியால் உலகக் கிண்ணத்துக்காக உள்வாங்கப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்திருந்தார். கழகம், மாகாணம், ஐ.பி.எல் போன்றதோர் அணி, பிராந்திய அணி போன்றவை வித்தியாசமானவை எனத் தெரிவித்த அவர், இது உலகக் கிண்ணம் எனவும், தற்போது விலகிய வீரரொருவர், மற்றைய நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியல்ல எனவும் தெரிவித்த அவர், மற்றோர் அணிக்கு ஆதரவு வழங்கவோ அல்லது பயிற்சி வழங்கவோ, ஓய்வின் பின்னர் 24 மாதங்களாவது காத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தார். இலங்கை அணியின் இரகசியங்களை, மற்றைய அணிக்கு வழங்குவது பிழை என்பதே, சுமதிபாலவின் விமர்சனம்.

மஹேல மீதான சுமதிபாலவின் இந்த விமர்சனம், விநோதமானது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து மஹேல ஓய்வுபெற்று, ஏறத்தாழ ஒரு வருடமாகிறது. இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று, எதிர்வரும் ஏப்ரலுடன் 2 வருடங்களாகின்றன. ஆகவே, சுமதிபால விரும்பும் 24 மாதங்கள், ஓரளவு பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.

24 மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்றாலும், முன்னாள் வீரரொருவரைக் கட்டுப்படுத்தும் எந்தவோர் உரிமையும், சுமதிபாலவுக்குக் கிடையாது. அத்தோடு, சுமதிபாலவின் விமர்சனத்தின் மோசமான பகுதி என்னவெனில், இலங்கை அணியின் இரகசியங்களை மஹேல சொல்லிக் கொடுக்கப் போகிறார் என, அவராகவே சுமதிபால முடிவெடுத்துக் கொடுக்கிறார். மஹேலவை நன்றாக அறிந்தவர்கள், மஹேலவின் நடத்தை மீது கேள்விகளை முன்வைப்பதில்லை. ஆனால், சுமதிபாலவோ, சந்தேகத்தைக் கூட வெளியிடாமல், நேரடியாகவே குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்.

அடுத்து, ஊதியமெதனையும் பெறாமல், ஒரு வருடமாகக் கடினமாக உழைத்து மஹேல தயாரித்த மாகாணமட்ட கிரிக்கெட் தொடரை, சுமதிபால தலைமையிலான கிரிக்கெட் சபை பதவியேற்றதும், நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. முன்னாள் வீரர்களை மதிக்கின்ற சபையானால், தூரநோக்கில் சிந்தித்து, அந்தத் தொடரை நடத்தியிருக்க வேண்டாமா? நிர்வாக அரசியலுக்காகவே அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது என்பது, சிறு பிள்ளைக்கும் கூட தெரிந்த உண்மை.

இலங்கை அணியின் இரகசியங்களை மஹேல சொல்லக்கூடுமென்றால், ஐ.பி.எல் போன்ற தொடர்களில் விளையாடும் இலங்கை வீரர்கள், தங்கள் நாட்டு வீரர்களைக் காட்டிக் கொடுக்க முடியாதா? தனக்கு யோர்க்கர் பந்துவீசச் சொல்லிக் கொடுத்தது மலிங்க தான் என்கிறார் இந்தியாவின் ஜஸ்பிறிட் பும்ரா. அதைப் போன்றே, இரகசிய விடயங்களை இலங்கை வீரர்கள் வழங்க முடியாதா? அவர்கள் விரும்பினால் அவர்களால் முடியும். ஆனால், அவர்கள் செய்யப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, அவர்கள் அவ்வாறு செய்தாலும், கிரிக்கெட் சபை கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால், வீரர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை, இலங்கை கிரிக்கெட் சபை பெற்றுக் கொள்ளுமல்லவா? பணம்.!

இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த மஹேல, தன்பக்க நியாயங்களைச் சிறப்பாக வழங்கியிருந்தார். இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே பயிற்றுநராக இருந்த கிரஹம் போர்ட், தற்போது இலங்கைப் பயிற்றுநராக உள்ள நிலையில், அவ்வணியைச் சேர்ந்த ஜேஸன் றோய் பற்றிய தகவல்களை அவரால் பகிர முடியாதா எனவும் மஹேல கேள்வியெழுப்பியிருந்தார். அத்தோடு, 2 வருடங்களுக்கு முன்னரே இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளதாகவும், அப்போதிருந்த வீரர்களும் தங்கள் நுணுக்கத்தை மாற்றியிருப்பார்கள் எனத் தெரிவித்த மஹேல, 2 வருடங்களுக்கு முன்னர் இருந்த நுணுக்கமே இப்போதும் பயன்படுத்தப்படுகிறது என்றால், அணித் திட்டமிடலில் ஏதோ தவறு எனவும், வீரர்களைப் பற்றி ஆராய்வதற்கு, இங்கிலாந்து அணியில் ஆய்வாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சுமதிபாலவின் இந்த நடவடிக்கை, முன்னாள் காதலியை/காதலனைக் கட்டுப்படுத்த விரும்பும் முன்னாள் காதலனின்/காதலியின் செய்கை போன்றது தான். ஏனெனில், இலங்கையின் முன்னாள் வீரர்களை அரவணைத்து, அவர்களுக்கான ஊதியத்தை வழங்கி, அவர்களை அணியோடு வைத்துக் கொள்வதற்கு இவர்களால் முடியாது. ஆனால், அவர்கள் செய்வதையெல்லாம் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேல், சூதாட்ட நிலையங்கள் கொண்ட மாபெரும் சங்கிலியொன்றுக்கு உரிமையாளர் எனக் குற்றஞ்சாட்டப்படும் திலங்க சுமதிபால, மஹேல போன்றதொரு வீரரின் எண்ணங்கள் தொடர்பாகவும் நடத்தை தொடர்பாகவும் கேள்வியெழுப்புவது தான், உச்சக்கட்ட நகைச்சுவை.

 

 


திலங்க சுமதிபாலவின் உச்சக்கட்ட நகைச்சுவை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.