2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தோல்வியடைந்தது 'டட்லி-செல்வா' ஒப்பந்தம்

Thipaan   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 29)

 'வெறுங்கனவாகிப் போன மாவட்ட சபைகள்'

மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கையும், அது பற்றிய சிங்களத் தலைமைகளின் அணுகுமுறையும் தமிழரசுக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. மீண்டுமொருமுறை இந்த நாட்டின் அரசாங்கத்தினால் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் தமிழரசுக் கட்சியினரிடையே ஏற்பட்டது. தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எழுதரப்புக் கூட்டணியில் தொடர்வதற்கான எதிர்ப்பு தமிழரசுக் கட்சியினுள் உருவானது. தமிழரசுக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் இணைந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு வழங்கப்பட்டது.

1968 ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்ற சிம்மாசன உரையில் 'மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலுக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட மாவட்ட சபைகளை ஸ்தாபித்தல் பற்றியதொரு வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதுபற்றிச் சொல்லப்பட்ட விமர்சனங்கள், கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னரே அதுபற்றிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டது.

1968 ஓகஸ்ட் 12ஆம் திகதி, சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் அன்றைய செயலாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 'நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் ஆதரவளிப்போம்' என்று குறிப்பிட்டார். கட்சியின் அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரதமர் டட்லியுடன் பேச்சுவார்த்தையொன்றை தமிழரசுக் கட்சியின் தலைமைகள் நடாத்தின.

குறித்த  பேச்சுவார்த்தையில் முருகேசன் திருச்செல்வம் அமைச்சராகத் தொடர்வார் எனவும், அத்தோடு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவு அளிப்பதற்குப் பதிலாக தகுதிப்படியான ஆதரவளிக்கும் எனவும் முடிவானது. 'மாவட்ட சபைகள்' என்ற 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் மூலக்கூறு வெறுங்கனவாகியே போனது. இதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவில்லை.

இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும்  ஏறத்தாழ ஒன்றரை வருடங்களே இருந்த நிலையில், 'சிங்கள-பௌத்த' பேரினவாதத்தின் பலத்தைச் சவாலுக்குட்படுத்த அன்றைய அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஏமாற்றப்பட்டார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை மாறாக தகுதிப்படியான ஆதரவு வழங்குவதாகக் கூறியது. தமிழரசுக் கட்சியின் சார்பில் அமைச்சரான முருகேசன் திருச்செல்வமும் பதவி விலகவில்லை.

இந்த நம்பிக்கைத் துரோகத்துக்குப் பின்னும் டட்லி தலைமையிலான அரசாங்கம் தனக்கு மிகுதியுள்ள ஏறத்தாழ ஒன்றரை வருடகால ஆயுளைப் பூர்த்தி செய்ய தகுதிப்படியான ஆதரவை வழங்க தமிழரசுக் கட்சி முன்வந்தமையும், அமைச்சரான திருச்செல்வம் பதவி விலகாமையும், தமிழரசுக் கட்சித்தொண்டர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியது. குறிப்பான இளைஞர்கள்

மத்தியில் இது கடும் அதிருப்தியை உருவாக்கியது. ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைமை வடக்கு - கிழக்கில் இன்னும் செய்யக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலதைச் செய்து முடிக்க இயலுமா எனச் சிந்தித்தது. திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம், திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தைப் புனித பிரதேசமாகப் பிரகடனஞ்செய்தல் உள்ளிட்ட மேலும் சில அபிவிருத்தித் திட்டங்களைச் செய்விக்க தமிழரசுக் கட்சி முனைந்தது.

'திருக்கோணேஸ்வர புனித பூமி விவகாரம்'

இந்து முக்கியஸ்தர்களும், இந்து அமைப்புக்களும் திருக்கோணேஸ்வரக் கோவில் அமைந்துள்ள ‡பிரட்றிக் கோட்டை வளாகத்தை இந்துக்களுக்குரிய புனித பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோளொன்றை பிரதமர் டட்லி சேனநாயக்கவிடம் முன்வைத்தனர். சமயக்குரவராகக் கருதப்படும் நாயன்மார்களினால் பாடல்பெற்ற கீர்த்தியும் அருளும் மிகுந்த பழம்பெருங் கோவிலான திருக்கோணேஸ்வரம், இந்துக்களின் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் நியாயமானதே. அந்நியர் ஆட்சிக்காலத்தில் அவர்களால் கடும் அழிவினைச் சந்தித்த கோவில். ஆகவே, புனித பிரதேசம் என்ற பாதுகாப்பை சுதந்திர இலங்கையில் இந்துக்கள் எதிர்பார்த்ததில் தவறேதும் இல்லை. அநுராதபுரம் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களிலும் பௌத்த புனித பிரதேசங்கள் இருக்கும் போது, அவ்வுரிமையையும், பாதுகாப்பையும் இந்துக்களும் எதிர்பார்த்தமை நியாயமே. பிரதமர் டட்லி சேனநாயக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் திருச்செல்வத்துக்கு கூறினார்.

உள்ளூராட்சி அமைச்சராக இருந்த திருச்செல்வம், இவ்விடயம் பற்றி ஆராய குழு ஒன்றை நியமித்தார். இந்நியமனமானது 1968 ஓகஸ்ட் 27 வர்த்தமானி அறிவித்தலில் வெளியானது. இது நடந்து சில நாட்களுக்குள்ளாகவே தம்மங்கடுவ நாயக்க தேரரான மங்கலே தர்மகீர்த்தி ஸ்ரீ தமஸ்கஸாரே

ஸ்ரீ சுமேதங்கார என்ற பௌத்த பிக்கு இவ்விடயம் தொடர்பிலான தனது கடும் எதிர்ப்பை பிரதமர் டட்லி சேனநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

'சிங்கள-பௌத்த' பேரினவாதிகளை எதிர்க்கமுடியாதவராக டட்லி சேனநாயக்க இருந்தார். அதனால்தான் அவரால் 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது போனது. குறிப்பாக பௌத்த பிக்குகளை அதிருப்திப்படுத்த அவர் தயாராக இருக்கவில்லை. அமைச்சர் திருச்செல்வத்தின் குறித்த நடவடிக்கை முற்கொண்டு செல்லப்பட்டால் குறித்த பிரதேசமானது 'சிங்களம்' மற்றும் 'பௌத்தர்' அல்லாதவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்ற காரணத்தைக் கூறி உடனடியாக அமைச்சர் திருச்செல்வத்துக்கு, குறித்த நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு பிரதமர் டட்லி உத்தரவிட்டார்.

'பதவி விலகினார் அமைச்சர் திருச்செல்வம்'

திருக்கோணேஸ்வர புனித பூமி விவகாரத்தைப் பிரதமர் டட்லி கையாண்ட விதம், தமிழ் மக்களிடமும் தமிழரசுக் கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமைச்சர் திருச்செல்வம் இதனால் கடும் அதிருப்தியடைந்தார். 'மாவட்ட சபைகள்' விடயத்திலேயே கடும் நம்பிக்கைத் துரோகத்தை சந்தித்திருந்த தமிழரசுக்கட்சி, அதன் பின்னரும் அரசாங்கத்தில் தொடர்ந்தமைக்கு காரணம், தமிழர் பிரதேசங்களில் செய்ய்பபட வேண்டிய வேறேதும் காரியங்களைச் செய்வதற்காகவே. ஆனால், பிரதமர் டட்லியின் அணுகுமுறை அதனைச் சாதிப்பதற்கு இடமளிக்கவில்லை. 1968 நவம்பரில், கடும் அதிருப்திக்குப் பின், முருகேசன் திருச்செல்வம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய திருச்செல்வம் செனட் சபையில் உரையாற்றிய போது, 'பௌத்த பிக்குவொருவரின் எதிர்ப்பின் பேரில் நடவடிக்கை எடுத்த பிரதமர், இந்நாட்டின் இந்துக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளை உதாசீனம் செய்துவிட்டார்' என்று குறிப்பிட்டார்.

'தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியது தமிழரசுக்கட்சி'

பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு கடிதம் எழுதிய தமிழரசுக்கட்சியின் சா.ஜே.வே.செல்வநாயகம், தமிழரசுக் கட்சியானது டட்லி சேனநாயக்க தலைமையிலான 'தேசிய அரசாங்கத்திலிருந்து' வெளியேறுவதாகக் கூறினார். தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காவிட்டால், இயங்கத்தகு பெரும்பான்மையொன்று இல்லாது போகும் என்று டட்லி சேனநாயக்க அறிந்திருந்தார்.

அவர், செல்வநாயகத்திடம் நீங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் 'இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்?' என்று கேட்டதாக செல்வநாயகத்தின் வாழ்க்கைச் சரித நூலில், அதனை எழுதிய அவரது மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அதனுடைய மாக்ஸிஸத் 'தோழர்களும்' ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் என்பதையே பிரதமர் டட்லி சேனநாயக்க அந்தக் கேள்வியினூடாக முன்வைத்தார். அந்த ஆபத்தை செல்வநாயகம் உணர்ந்திருந்ததால் அரசாங்கத்துக்கான ஆதரவை தமிழரசுக் கட்சி தொடர்ந்து வழங்கச் சம்மதித்தது என ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார்.

எந்தச் சிங்களத் தலைமையையும் நம்பமுடியாது என்ற நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தார்கள். சிங்களத் தலைமைகளோ ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு 'சிங்கள-பௌத்த' பேரினவாதததுக்;கு சாமரம் வீசும் நிலையே காணப்பட்டது. 1969 ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சி வரிசையிலிருந்து மாறி, எதிர்க்கட்சி வரிசையில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றமர்ந்தார்கள்.

ஆனால், தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு அதன் ஆயுட்காலம் முடிவடிடையும் 1970 மார்ச் வரை 'விமர்சனத்துக்குட்பட்ட ஆதரவை' வழங்கியது. அதாவது ஆளுந்தரப்பையோ, எதிர்த்தரப்பையோ சாராத, எதிரணி வரிசையில் அமர்ந்துள்ள ஒரு சுதந்திரக் குழுவாக, டட்லி தலைமையிலான அரசாங்கத்துக்கு 'விமர்சனத்துக்குட்பட்ட ஆதரவை' தமிழரசுக் கட்சி வழங்கியது.

இதன்மூலம், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், காங்கேசன்துறையில் ஒரு துறைமுகம், தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகளின் முழுமையான அமுலாக்கம் எனச் சிலவற்றையாவது சாதிக்க முடியுமா என்ற நப்பாசை தமிழரசுக் கட்சிக்கு இருந்தது. காங்கேசன்துறை துறைமுகத்துக்கான அடிக்கல்லை பிரதமர் நட்டதோடு சரி, அதற்கு மேல் அந்தத் திட்டம் நகரவில்லை. தமிழ் மக்களின் எந்தவோரு எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை விமர்சித்தவர்கள், தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகியதாகக் காட்டிக்கொண்டது ஒரு தேர்தலை முன்னிறுத்திய நாடகம் என்றனர். அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதை தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் கூட விரும்பியிராத நிலையில், தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே தமிழரசுக் கட்சியானது அரசாங்கத்திலிருந்து விலகியதாகக் காட்டிக் கொண்டதோடு, 'விமர்சிக்கப்பட்ட ஆதரவு' என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த, தமிழ் மக்களை ஏமாற்றிய டட்லி சேனநாயக்க அரசாங்கம் தனது முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய ஆதரவளித்தது.

இதன் மூலம் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை ஏமாற்றியது என விமர்சகர்கள் சிலர் கருத்துரைத்தனர். செல்வநாயகமோ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை விட, டட்லி சேனநாயக்க மேல் என்ற எண்ணங்கொண்டிருந்தார்.

ஸ்ரீமா மற்றும் அவரது 'தோழர்களிடமிருந்து' எமக்கு எதுவித திருப்திகரமான நன்மையும் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குத் துளியேனும் இல்லை என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார். இந்தக் காலப்பகுதியில் செல்வநாயகத்தின் உடல்நிலையும் மிகமோசமடைந்திருந்தது, ஆனாலும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து அவர் பின்வாங்கவில்லை என ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார்.

இத்தோடு 'டட்லி-செல்வா' என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையும் தோல்வி கண்டது. 'பண்டா-செல்வா', 'டட்லி-செல்வா' ஆகியவற்றின் தோல்வி தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை உணர்த்தியது. சிங்களத் தலைமைகள் ஒரு போதும் 'சிங்கள-பௌத்த' பேரினவாதிகளை அதிருப்திப்படுத்தும் எந்தவோரு தீர்வையும் தமிழ் மக்களுக்குத் தரப்போவதில்லை.

இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் தனி நாடு கேட்கவில்லை, சமஷ்டி ஆட்சியைக் கூடக் கோரவில்லை மாறாக தமிழ் மொழிக்கான சம அந்தஸ்தையும், ஆகக் குறைந்ததொரு அதிகாரப் பரவலாக்கலையுமே வேண்டினர். அதனைக் கூடச் செய்வதற்கு சிங்களத் தலைமைகள் தயாராக இருக்கவில்லை. 1970 மார்ச் 25 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக தனது முழு ஆயுளையும் பூர்த்தி செய்தது. ஆனால், ஏமாற்றமடைந்தது என்னவோ தமிழ் மக்கள்தான்.

வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி ஏப்ரல் 23 ஆகவும், தேர்தல் திகதியாக மே 27ஆம் அறிவிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் 1970 ஜூன் 7ஆம் திகதி அன்று கூடும் என அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின.

தமிழ் மக்கள் மிக மோசமானதொரு காலப்பகுதிக்குள் தாம் நுழையப் போகிறோம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

(அடுத்தவாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X