Shanmugan Murugavel / 2016 மார்ச் 04 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிராக மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரொன்றை விளையாடி வருகின்ற நிலையில், டேர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அவ்வணி சார்பாக விக்கெட் காப்பாளர் பீற்றர் நெவில்லும் புறச் சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸாம்பாவும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர். அணியின் சிரேஷ்ட சகலதுறைவீரர் ஷேன் வொற்சன் இப்போட்டியில் விளையாடியிருக்கவில்லை. மறுபக்கம், தென்னாபிரிக்க அணியில் சிரேஷ்ட வீரர்களான ஹஷிம் அம்லாவும் டேல் ஸ்டெயினும் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, அதிரடியான ஆரம்பத்தை பெற்றிருந்தாலும் பின்னர் தடுமாறி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ஞ், 4, ஆறு ஓட்டங்கள், 2, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 40 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஷ், 2, ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக, இம்ரான் தாகீர் 3, டேவிட் வீஸே, கஜிஸ்கோ ரபடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆரம்பத்திலேயே டீ வில்லியர்ஸ், டீ கொக்கின் விக்கெட்டுகளை இழந்தாலும் அணித்தலைவர் டூ பிளிஸ்சிஸ்ஸின் ஆட்டத்தினால் வேகமாக ஓட்டங்களை குவித்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அவ்வணி தோல்வியடையுமோ என்று எதிர்பார்த்த வேளையில் கைகொடுத்த டேவிட் மில்லரின் ஆட்டத்தினார் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து அவ்வணி வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக டேவிட் மில்லர், ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் மூன்று நான்கு ஓட்டங்கள், மூன்று ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 53 ஓட்டங்களையும் பப் டூபிளிஸ்சிஸ், 26 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 4, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 40 ஓட்டத்தையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் கூல்டர்-நைல் 3, மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டை கைப்பற்றினர். அன்ரூ டையேயும் ஒரு விக்கெட்டை கைப்பற்றியபோதும் ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.
போட்டியின் நாயகனாக டேவிட் மில்லர் தெரிவானார். இரண்டு அணிகளுக்கிடையேனான இரண்டாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை ஞாயிற்றுக்கிழமை (06), மாலை ஆறு மணிக்கு ஜொஹன்னெஸ்பேர்க்கில் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .