2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முருகன், சாந்தன், நளினி விடுதலை விவகாரம்: தமிழக - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகாரப் போட்டி?

Thipaan   / 2016 மார்ச் 07 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, தமிழக தேர்தல்க் களத்தில் மீண்டும் பிரசார வியூகமாக மாறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விவாதம் இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கும் மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துக்கும் சர்ச்சைக் களமாக மாறிவிட்டது. இந்த ஏழு பேரில் ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ் ஆகிய நால்வரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாக மார்ச் 2ஆம் திகதி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் இந்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மஹ்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், 'ஏழு பேரும், ஏறக்குறைய 24 வருடங்களாகச் சிறை வாசத்தை அனுபவித்து வருகிறார்கள். தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அளித்த மனுவை பரிசீலித்து, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றம் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறியிருப்பதால், இப்போது இந்த விடுதலை குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோருகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய நாடாளுமன்றத்திலேயே எதிரொலித்தது. தமிழக அரசின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று முதலில் தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை விட்டார். தமிழக தலைவர்கள் அனைவருமே இதே கருத்தைச் சொன்னார்கள். சிலர் மட்டும் 'தேர்தல் நாடகம் இது' என்று கூறினாலும், இந்த ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில், அ.தி.மு.கவினர், தமிழக அரசின் கடிதத்தை வலியுறுத்திப் பேசினர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ 'நாட்டின் பிரதமர் ஒருவரை கொன்றவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது' என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. அக்கட்சியின் சார்பில் உள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'விடுதலை செய்யக் கூடாது' என்று கடுமையாக எதிர்த்தார். இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தமிழக அரசின் கடிதம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அக்கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்தார்.

இந்த சலசலப்புக்கு என்ன பின்னணி, தமிழக சட்டமன்ற தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய பேச்சு அதிகம் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் திடீரென்று காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி அமைந்த பின்னர், இலங்கைத் தமிழர் பிரச்சினை மீண்டும் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதன் அடுத்த கட்டம்தான், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதம்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, 'ராஜீவ்காந்தி மரணம்' உணர்வோடு ஒன்றிப் போன விடயம். அதில் அக்கட்சி விட்டுக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. அதேவேளை, தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை, 'இந்த ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஏற்கெனவே, இலங்கை இறுதிப் போரின் போது கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழகத்தில் அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே முன் வைத்தன. அதைத் தொடர்ந்து கூறியும் வருகின்றன.

இப்போது கூட மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் வைகோவும் அடிக்கடி இந்தக் குற்றச்சாட்டை தி.மு.க மீது சுமத்தி வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி வைத்து விட்டது என்பதற்காக இந்த ஏழு பேரை விடுதலை செய்யக் கூடாது என்று கலைஞர் கருணாநிதியால் சொல்ல முடியாது. அதனால்தான் 'தமிழக அரசின் கடிதத்தின் மீது உடன் நடவடிக்கை எடுத்து ஏழு பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உடனே வேண்டுகோள் விடுத்தார் கலைஞர் கருணாநிதி.

ஆனால், இதற்குக் கடும் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதிவு செய்து விட்டார்கள். இந்த குழப்பத்தைத்தான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்பார்த்தார். அவர் விரித்த வியூக வலையில் காங்கிரஸ் விழுந்து விட்டது என்று கூற முடியாது.

ஆனால், தி.மு.க விழுந்து விட்டது என்பதைத்தான் இந்தக் கடித விவகாரம் அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்தால் டெல்லி அரசியலில் பா.ஜ.க பெரும் சோதனையை சந்திக்க வேண்டியிருக்கும். தமிழக அரசியலுக்காக 'டெல்லி அரசியலில்' தனக்குள்ள தேச பக்தி இமேஜை விட்டுக் கொடுக்க பா.ஜ.க முன் வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அரசியல் ரீதியான இப்பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று 19.2.2014 அன்றே, அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமைச்சரவை கூடி முடிவு எடுத்தது. அது சட்டமன்றத்திலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

'மூன்று தினங்களுக்குள் உங்கள் பதிலைச் சொல்லுங்கள். இல்லையென்றால் நாங்கள் 7 பேரையும் விடுதலை செய்வோம்' என்று அப்போது இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க அரசு கெடு வைத்தது. அதனால்தான் மத்திய அரசு அவசரமாக உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசின் முடிவுக்குத் தடை பெற்றது.

இந்த வழக்கு சி.பி.ஐ. அதாவது மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கு. அதனால் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது மத்திய அரசின் வாதம். 'அதெல்லாம் தேவையில்லை. நாங்கள் மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளோம். கருத்தைச் சொன்னால் போதும். நாங்கள் விடுதலை செய்து கொள்கிறோம்' என்பது மாநில அரசின் நிலைப்பாடு.

இந்த 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கா அல்லது மத்திய அரசுக்கா, மத்திய அரசிடம் ஆலோசனை செய்தால் போதுமா அல்லது மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமா, இப்படிச் சட்டச் சிக்கல்கள் எழுந்து மத்திய- மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலாக உருவெடுத்தது.

அந்தச் சூழ்நிலையில் வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்துக்குப் போனது. அங்கு அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு 'ராஜீவ் கொலை வழக்கு மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கு. அதனால் இந்த 7 பேரை விடுதலை செய்யும் முன்பு மாநில அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும்' என்று தெளிவாக கடந்த 2.12.2015 அன்று அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் இப்போது ஏழு பேரின் விடுதலையை மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. 'மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்' என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், தமிழக அரசின் சார்பில் இப்போதும் ஒப்புதல் கேட்கவில்லை. மத்திய அரசின் கருத்தை மட்டுமே கேட்டுள்ளார். அக்கடிதத்தில், '7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு முடிவு எடுத்து விட்டது.

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்' என்று கேட்கப்பட்டுள்ளது. டெக்னிக்கலாகப் பார்த்தால் இரண்டாவது முறையும் மாநில அரசு மத்திய அரசிடம் 'ஏழு பேரின் விடுதலைக்கு ஒப்புதல் கேட்கவில்லை. கருத்தை மட்டுமே கேட்டிருக்கிறது' என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகச் சொன்னால் 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் எங்களுக்குத்தான் இருக்கிறது என்பதில் தமிழக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும்; உறுதியாக இருப்பதையே இந்தக் கடிதம் எடுத்துக் காட்டுகிறது.

இந்த அதிகாரப் போட்டி, மீண்டும் இந்த ஏழு பேரின் விடுதலையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதே இன்றைய நிலை. எது எப்படியிருந்தாலும், தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடாகிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மீண்டும் ஒருமுறை இந்த ஏழு பேரின் விடுதலை, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நடைபெறப் போகும் மோதல்கள், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் ஏற்படப் போகும் கருத்து வேறுபாடுகள் எல்லாம் தமிழக அரசியல் களத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படவோ, அதிசயப் படவோ ஒன்றுமில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X