Shanmugan Murugavel / 2016 மார்ச் 08 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழப்பங்களுக்குப் பெயர்போன கிரிக்கெட் சபைகளான பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஆகியவற்றுக்குப் போட்டிபோடும் வகையில் அண்மைய சில ஆண்டுகளாகச் செயற்பட்டுவரும் இலங்கை கிரிக்கெட் சபை, உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னைய தினத்திலும் கூட, குழப்பங்களாலும் அதிரடி நடவடிக்கைகளாலும் அதிர்ச்சியை வழங்கியது.
இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணி, இன்று மாலை புறப்படவுள்ள போதிலும், அக்குழாமில் இடம்பெறும் வீரர்கள் தொடர்பான உறுதியான முடிவு, இன்று காலை வரை தெரிய வந்திருக்கவில்லை.
இந்த மாற்றங்களின் முதற்படி, நேற்று பின்னிரவில் ஏற்படுத்தப்பட்டது. அதுவரை காலமும் தேர்வாளர்களாக இருந்த 5 பேர் கொண்ட குழு கலைக்கப்பட்டு, இலங்கையின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா தலைமையிலான புதிய குழுவொன்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவால் நியமிக்கப்பட்டது.
புதிய குழுவில், முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொமேஷ் களுவிதாரண, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான ரஞ்சித் மதுரசிங்க, லலித் களுபெரும ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழு, ஏப்ரல் 30ஆம் திகதிவரை செயற்படுமென, அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் தகவலின்படி, 2016/17 பருவகாலத்துக்கான தெரிவுக்குழுவாக இது அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு, இரவிரவாகக் கூடிய ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், இன்று காலை அறிவிக்கப்பட்டன. இதில், முன்னைய குழாமின் தலைவராகச் செயற்பட்ட லசித் மலிங்கவின் பதவி விலகல் கோரிக்கை ஏற்கப்பட்டது. புதிய தலைவராக, அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டதோடு, உப தலைவராக டினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னைய குழாமில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்லவும் சுழற்பந்து வீச்சாளரான ஜெப்றி வன்டர்சேயும் நீக்கப்பட்டு, துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவும் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில், முன்னைய குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்படாமை, அதிக கேள்விகளை எழுப்பியிருந்த நிலையிலேயே அவர் சேர்க்கப்பட்டதோடு, காயத்திலிருந்து குணமாகி, முதற்தரப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட நிலையிலேயே சுரங்க லக்மால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .