பணிகளை இலகுபடுத்தும் ஜோன், ஜெயந்தனின் SenzMate

-முருகவேல் சண்முகன்

எதிர்பாரா வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பமானது, தற்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அத்துறைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளை இலகுவாக்குகின்றன.

எவ்வாறெனினும், அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டைச் சேர்ந்தவர்களே ஒவ்வொரு துறையிலும் பணிகளை இலகுவாக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்துகையில், அவர்களின் நாட்டிலுள்ள தொழிற்துறைகளுக்கு மேற்படி தொழில்நுட்பங்கள் கிடைப்பதில்லை. மாறாக, அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கே மேற்படி தொழில்நுட்பங்கள் கிடைக்கின்றன.

இந்நிலையிலேயே, எமது ஈழ நாட்டின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்ற, தற்போது, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியிலாளர்களான ஜோன் நிராஜ் அன்ரன்  கிறைசிஸ், தர்மகுலசிங்கம் ஜெயந்தன் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் SenzMate எனும் இலங்கையைத் தளமாகக் கொண்ட IoT (Internet of Things) தீர்வு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிறுவனத்தின் மூலமாக, தொழில் முயற்சிகளுக்கான முழுமையான தீர்வுகளை, நூறு சதவீதமான உள்நாட்டு அறிவுடன், புத்தாக்கத்துடன் கூடிய அதிநவீன தீர்வுகளை இவர்கள் வழங்குகின்றனர்.

அடிப்படையில், Internet of Things (IoT) எனப்படுவது யாதெனில், பௌதீக உபகரணங்களின் வலையமைப்பு அல்லது இலத்திரனியல், மென்பொருள், உணரிகள், இணையைத் தொடர்பாடலுடன் இணைந்த பொருட்கள் மூலம் ஒன்றுக்கொன்று இணைந்திருப்பதும் தரவுகளை பரிமாறுவதும் ஆகும்.

கடந்த பதினைந்து வருடங்களில் ஏற்பட்ட இணையப் புரட்சி காரணமாக, ஊடகம், சில்லறை விற்பனை, நிதி சம்பந்தமான சேவைகள் போன்ற வணிகத்திலிருந்து நுகர்வோர் தொழிற்துறைகள் மாற்றமடைந்துள்ளன. இந்நிலையில், அடுத்த பத்து வருடங்களில், பூகோள உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியின் மூன்றில் இரண்டு மடங்கை கொண்டிருக்கும் தயாரிப்பு, சக்தி, விவசாயம், போக்குவரத்து மற்றும் ஏனைய கைத்தொழிற் துறைகளை, Internet of Things புரட்சியானது எதிர்பாரா அளவுக்கு குறைக்கவுள்ளது. இது தவிர, மனிதர்களும் இயந்திரங்களுக்குமிடையே புதிய தொடர்பாடல்கள் மூலம் மக்கள் எவ்வாறு வேலை செய்வார்கள் என்பதையும் அடிப்படையிலேயே மாற்றவுள்ளது.  

அந்தவகையில், SenzMate நிறுவனத்தின் Internet of Things frameworkகானது, Internet of Things தொடர்பாடலை இதுவரை யாரும் வழங்காத வகையில் வழங்குகின்றது. அதாவது, உங்கள் வியாபார நடைமுறைகளில் வினைவுறு திறனின் பல மடங்கு முன்னேற்றத்தை அடைவதற்கான Internet of Things இன் பிரதான சக்தியை SenzMate நிறுவனம் வழங்குகின்றது. இது தவிர,  எதிர்வரும் காலங்களில், புதிய Internet of Things தொழில்நுட்பங்களால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை பல துறைகளிலும் கண்டறிந்து, அவற்றுக்கான, மிகவும் புத்தாக்கமான திட்ட தீர்வுகளை, உள்நாட்டு வியாபாரங்களுக்காக தாங்கத்தகு விலையில் வழங்கவுள்ளது.

SenzMate நிறுவனம் ஆனது, ஊழியர் செலவீனத்தை பெருவாரியாக குறைக்கும் பொருட்டும், அதேவேளை, செயற்திறனையும் தயாரிப்புத் திறனையும் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் பொருட்டு Enterprise Monitoring System (EMS), Digital Irrigation Automation (DIA) ஆகிய இரண்டு புத்தாக்கமான தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

இதில், Enterprise Monitoring System (EMS) ஆனது, உங்கள் பணியிடங்களில் உள்ள வெவ்வேறு வகையான சுற்றுச்சூழல் நிலைமைகளை கண்காணிப்பதற்கான செயன்முறையை தானாகவே செயற்படுத்தும். சிறிய உள்நாட்டுச் சுற்றுச்சூழலில் தொழில் முயற்சி தீர்வுகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் இது இருப்பதால், இது உயர்ந்த கட்டமைக்கப்படக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது. தங்களின் சுற்றுச்சூழலை எந்நேரமும் கண்காணித்து, இடர்பாடான நேரங்களில் எச்சரிக்கை குறுஞ்செய்தியை பெறும் பொருட்டு, ஹொட்டல், food city, பண்டகசாலை, logistic நிறுவனங்கள், வைத்தியசாலைகள்/மருந்தகங்கள், பழம், மரக்கறி, மீன் ஏற்றுமதி தொழிற்துறைகளில் இதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம், மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் உணவுகளையும் மருந்துகளையும் பழுது ஏற்படுவதிலிருந்து பாதுகாக்க முடிவதுடன் அப்பொருட்களை உயர்தரத்தில் பேண முடிகிறது. இத்திட்டத்தின் மனித உள்ளீடுகளுடன் செயற்படும் பொறிமுறையானது நீக்கப்பட்டு தானாக இயங்குவதன் மூலம் குறிப்பிட்ட தொழிற்துறைகள் முன்னேற்றமடைகின்றன.

அடுத்து, Digital Irrigation Automation (DIA) ஆனது பண்ணைகளில் சுற்றுச் சூழல் நிலைமைகளை கண்காணிப்பதற்கு பயன்படும் தானியங்கி விவசாய  நீர்ப்பாசன திட்டமாகும். இத்திட்டமானது, வீட்டுத் தோட்டங்களில்இருந்து பாரியளவிலான பண்ணைகள் வரையில் பயன்படுத்தக்கூடியது. நாற்று மேடைகள், பச்சை வீடுகள், கோல்ப் மைதானங்கள், வீட்டுத் தோட்டங்கள், ஏற்றுமதி தரத்திலான பண்ணைகள் போன்றவற்றில் இதைப் பாவிக்க முடியும். இதன் மூலம், தோட்டங்களின் சுற்றுச்சூழல் நிலைமைகள், மண் நிலைமகள் எனபவற்றை அறிந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.

இந்நிலையிலேயே, யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான  Yarl IT Hubஇன் வளவாளர்களுடன் இணைந்து, விவசாயிகளுக்கு உதவி அளிக்கக்கூடிய தானியங்கி நீர்ப்பாசனத் திட்டமொன்றை ஜோன் நிராஜ் அன்ரன்  கிறைசிஸ்ஸும் தர்மகுலசிங்கம் ஜெயந்தனும் கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கியிருந்தனர்.

பின்னர், இதை மென்மேலும் மேம்படுத்திய ஜோன் நிராஜ் அன்ரன்  கிறைசிஸ்ஸும் தர்மகுலசிங்கம் ஜெயந்தனும், 2010ஆம் ஆண்டிலிருந்து பளையில் காளான் வளர்ப்புச் செய்யும் கனகரட்ணம் தயானந்தனின் பண்ணையில் பயன்படுத்தி, நாளொன்றுக்கு 200 கிராமாக இருந்த அவரின் உற்பத்தித்திறனை நாளொன்றுக்கு பத்து கிலோகிராமாக அதிகரித்துள்ளனர்.

காளான் வளர்ப்பின்போது மிகக் குறைந்தளவு மனிதத் தலையீடே இருக்க வேண்டும். ஏனெனில், மனிதலிருந்து ஏற்படும் தொற்றினால் அது பாதிக்கப்படும். எனினும் காளான் பண்ணையின் வெப்பத்தையும் ஈரப்பதனையும் கட்டுப்படுத்துவதற்கு நீரை தூவவோ அல்லது குளிர்மைப்படுத்தும் காற்றாடிகளை இயங்க வைக்கவேண்டும்.

இந்நிலையிலேயே, கடந்த ஜூலை மாதம் நிறுவப்பட்ட திட்டத்தின் மூலம் தானாகவே வெப்பநிலையும் ஈரப்பதனும் கட்டுப்படுத்தப்படுகிறது. தானாக இயங்கும் குளிர்மைப்படுத்தும் காற்றாடிகள், விசிறல் நீர்ப்பாசனத்தின் மூலம் சிறந்த கண்காணிப்பை காளான்கள் பெறுகின்றன. இது தவிர இத்திதிட்டத்தை மனிதனும் இயக்க முடியும் என்பதுடன், காளான் பண்ணையில் வெப்பநிலை, ஈரப்பதன் மாற்றமடையும் போது எச்சரிக்கை குறுஞ்செய்திகளை பெறமுடியும்.

இது தவிர, McLarens Hotels Limitedஇன் கண்டியிலுள்ள ஹொட்டல் Topazஇன் குளிரூட்டி அறையிலுள்ள வெப்பநிலையையும் ஈரப்பதனையும் கண்காணிக்கவும் IronOne Technologies (Pvt) Ltdஇன் Server அறையில், வெப்பநிலையையும், தீப்பற்றுகின்றதா எனவும் நீர்க்கசிவு ஏற்படுகின்றதா என கண்காணிக்கவும் SenzMate நிறுவனத்தின் Enterprise Monitoring System (EMS) பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, கால்டன் குழும நிறுவனங்களின் கிளைகளில் காணப்படும் தேநீர் தயாரிப்பு இயந்திரங்களில் எத்தனை தேநீர்கள் தயாரிக்கப்படுகின்றன, தேநீர் தயாரிப்பு இயந்திரங்களின் உள்ளீடுகள் போதுமானவையாக இருக்கின்றனவா என தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்கான திட்டத்திலும் SenzMate நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இது தவிர, டயலொக் அக்ஸைட்டா பி.எல்.சி, றுகுணு பல்கலைக்கழகம், இலங்கை கடற்படை ஆகிவற்றுடன் இணைந்து மொரட்டுவை பல்கலைக்கழகம்,  இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகளை ஆராய்கின்ற செயற்றிட்டத்தின் கீழ் இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில், வெவ்வேறு ஆழங்களில் வெப்பநிலை, உப்பின் தன்மை, காற்று வேகம் காற்று திசை என்பவற்றை அளவிடும் திட்டத்திலும் SenzMate நிறுவனம் பங்குபெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.   


பணிகளை இலகுபடுத்தும் ஜோன், ஜெயந்தனின் SenzMate

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.