வடக்கின் மாபெரும் போர்: முன்னிலையில் யாழ். மத்தி
10-03-2016 05:21 PM
Comments - 0       Views - 187

- யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110ஆவது போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

முதலாம் நாளில் இரு அணிகளுமே கடுமையான போட்டி வெளிப்படுத்தியதோடு, சென். ஜோன்ஸின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள யாழ். மத்தி, சிறியளவிலான முன்னிலையைப் பெற்றுள்ளது.

யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டுப் பூர்த்தியும் இவ்வாண்டே என்பதன் அடிப்படையில், இப்போட்டி விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான பிரதம விருந்தினராக, 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கலந்துகொண்டார்.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியின் தலைவர் சி. அலன்ராஜ், தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, 75.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, இரண்டாவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் அ. ஜெரோஷன் 51, உப தலைவர் ச. கோமேதகன் 39 ஓட்டங்களைப் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களைத் தாண்டியிருக்கவில்லை. பந்துவீச்சில் வ. ஜதுசன் 4, ஆரம்ப வேகப்;பந்து வீச்சாளர் ம. நிலோஜன் 3, அணித்தலைவர் அ. கானாமிர்தன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென். ஜோன்ஸ் அணி, இன்றைய நாள் முடிவில் 26 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 26 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்தது.

துடுப்பாட்டத்தில் க. கபில்ராஜ் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகிறார். பந்துவீச்சில் ஹ. தீபன்ராஜ் 2 விக்கெட்டுகளையும் சி. தசோபன், அணித்தலைவர் சி. அலன்ராஜ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

"வடக்கின் மாபெரும் போர்: முன்னிலையில் யாழ். மத்தி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty