2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீண்டும் பிரதமரானார் ஸ்ரீமாவோ

Thipaan   / 2016 மார்ச் 14 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB(Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 31)

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்

பொதுத் தேர்தலில், ஸ்ரீமாவோ, ரத்வத்தை, டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் கூட்டணியான ஐக்கிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. 85.2 சதவீத வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

இது, ஒப்பீட்டளவில் மிக உயர்ந்த வாக்களிப்பு வீதமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 19 ஆசனங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி 6 ஆசனங்களையும் வென்றது. லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும், அவற்றின் வரலாற்றில் தேர்தலொன்றில் வென்ற அதிகபட்ச ஆசனங்களாக இது அமைந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, 130 வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்த போதும், வெறும் 17 ஆசனங்களையே வென்று, 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

ஆனால், தனி ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே அதிகளவான வாக்கு வீதத்தைப் பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, 37.9 சதவீத வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 36.9 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் வென்றன. 1965 தேர்தலோடு ஒப்பிடுகையில், தமிழரசுக் கட்சியின் ஆதரவு வீழ்ச்சியடைந்திருந்தது.

சா.ஜே.வே.செல்வநாயகமும் பின்னடைவைச் சந்திந்திருந்தார். தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.எம்.இராசமாணிக்கம் மற்றும் டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஆகிய இருவரும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களைத் தக்கவைத்துக் கொண்ட பொழுதும், அதன் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், யாழ்ப்பாணத் தொகுதியில் சிறியதோர் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தார்.

மிகப்பெரும் பெரும்பான்மைப் பலத்தோடு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் அவரது 'தோழர்களும்' ஆட்சிப்படியேறினார்கள். ஆனால், இம்முறை பெற்ற இந்தத் தேர்தல் வெற்றியானது, வெறும் அதிகாரம் சார்ந்ததொன்றாக இருக்கவில்லை, ஐக்கிய முன்னணி மக்களுக்கு முன் சமர்ப்பித்த புதிய அரசியல்யாப்பொன்றை இயற்றல், பௌத்த மதத்துக்கு அதற்குரிய இடத்தை வழங்குதல், ஜனநாயக-சோசலிஸ கட்டமைப்பொன்றை உருவாக்குதல், 'தனிச்சிங்கள' சட்டத்தை அமுல்படுத்துதல், 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளுக்கான மக்களாணையாகவும் இத்தேர்தல் வெற்றி அமைந்தது.

பிரதமரானார் ஸ்ரீமாவோ

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்றதும், 1970 ஜூன் 14ஆம் திகதியை 'மக்களின் வெற்றி தினம்' எனப் பிரகடனப்படுத்தினார். அந்தநாள், விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து கலாநிதி என்.எம்.பெரேராவை நிதி அமைச்சராகவும் கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வாவை பெருந்தோட்டத்துறை அமைச்சராகவும் பின்னர் கூடுதலாக அரசியலமைப்புக்கான அமைச்சராகவும், லெஸ்லி குணவர்தனவை தொடர்பாடல் அமைச்சராகவும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பீற்றர் கெனமனை வீடமைப்பு அமைச்சராகவும் நியமித்தார்.

தனிச்சிங்கள அமைச்சரவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீமாவோ, தமிழர் ஒருவரை அமைச்சராக்க எண்ணினார். செல்லையா குமாரசூரியர் என்ற பட்டய பொறியியலாளரை செனட் சபைக்கு நியமித்ததுடன், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமித்தார். பதியுதீன் முஹம்மட் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் அமைச்சர் ஒருவரை நியமித்தல் என்பதற்கு பின்னால் தேசியக் கட்சிகளின் ஓர் இராஜதந்திரம் இருந்தது. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்குப் பதிலாக, தம்முடைய கட்சியிலேயே தமிழ்ப் பிரதிநிதிகளை உருவாக்குவது, அதனூடாக, தமிழ்க் கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்க முயற்சிப்பது. இந்த இராஜதந்திரத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் கையாண்டிருக்கிறார். தொடர்ச்சியாக வந்த பல அரசாங்கங்களும் கையாண்டிருக்கின்றன. தாம், தமிழ் மக்களையும் அரவணைத்துப் போகிறோம் என்பதற்கான ஓர் அடையாளமாக இதைக் காட்ட விரும்பியது. அத்தோடு, தமிழ் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைத் தம்பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளும் நடந்தன.

தமிழ் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான எஸ்.தியாகராஜா மற்றும் அ.அருளம்பலம் ஆகியோரின் ஆதரவு பெறப்பட்டது. இவற்றைவிட, யாழ்ப்பாணத்தில் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த அல்‡பிரட் துரையப்பா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் முழுமையான அரசியல் பின்புலத்துடன் செயற்படும் அரசியல் தலைவராக யாழ்ப்பாணத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

இதே தந்திரோபாயத்தை 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கையாண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தினுடைய இந்த முயற்சிகள், அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் பலனளித்தன. ஆனால், நீண்ட காலத்தில் இவை தோல்வியடைந்தன. டட்லி சேனநாயக்க, சௌமியமூர்த்தி தொண்டமானை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்திருந்தார். அதையொப்பவே, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் இந்திய வம்சாவளி மக்களின் இன்னொரு முக்கிய பிரதிநிதியாக இருந்த அப்துல் அஸீஸை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தார்.

இந்தத் தந்திரோபயத்தின் அடிப்படை இதுதான்: அனைத்துத் தரப்பும் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. அனைத்துத் தரப்பும் எமது கொள்கைளை ஏற்கின்றன. ஸ்ரீமாவோ அரசாங்கம், தமிழ் பேசும் மக்கள் உள்ளிட்ட இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கெதிராகச் செய்த அத்தனை அநீதிகளும், சிறுபான்மையோரின் ஆதரவோடுதான் நடந்தன என்பதைக் காட்டுவதற்கான தந்திரோபாயம் இது.

எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில், கட்சித் தலைவரான டட்லி சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார். இதன் மூலம், அடுத்த தலைவர் ஜே.ஆர் தான் என்பது தெளிவானது. ஜே.ஆர், அதிகாரப் போட்டிக்கான தன்னுடைய பயணத்தை இங்கிருந்து ஆரம்பித்தார். படுதோல்வியைச் சந்தித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை ஜே.ஆர், தானாக ஏற்றுக்கொண்டார். தன்னுடைய தந்திரோபாயத்தைத் தீர்மானிக்கும் வரை எதிர்ப்பரசியலை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம், அதனால்தான் சிம்மாசன உரையில் ஒரு திருத்தத்தைக் கூட எதிர்க்கட்சித்தலைவராக அவர் முன்மொழியவில்லை.

இஸ்ரேல் தூதுவராலயம் மூடப்பட்டது

1969ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி, ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டது. இது, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக முஸ்லிம்கள் இதனை இஸ்ரேலின் கொடுஞ்செயலாகவே பார்த்தனர். இஸ்ரேலோ, இதனை டெனிஸ் மைக்கிள் றோஹன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியரே செய்தார் என்றது. அவர் கைது செய்யப்பட்டு, மனநல காப்பகத்துக்;கு அனுப்பப்பட்டார்.

இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் யூதர்களால் 'மலைக்கோயில்' (Temple of Mount) என்று விசுவாசிக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளமையாலும், அங்கு மீண்டும் 'மலைக்கோயில்' அமைக்கப்பட வேண்டும் என யூதர்களில் ஒரு பகுதியினரின் கோரிக்கை இருந்ததாலும், இப்பள்ளிவாசல் எரிக்கப்பட்டதன் பின்புலத்தில் இஸ்ரேல் இருக்கும் என்று நம்பப்பட்டது. இதன் விளைவாக, இஸ்ரேலுக்கெதிராக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் எதிர்ப்பு வலுத்தது. இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் இஸ்ரேலிய தூதரகங்கள் மூடப்பட்டன.

ஆனால், டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கவில்லை. கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஸி.அஹமட் மற்றும் மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் மஜீத் ஆகியோர் பிரதமர் டட்லியுடன் இதுபற்றிப் பேசியதுடன் இஸ்ரேலிய தூதுவராலயம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மருதானை சாஹிரா கல்லூரிக்கு முன்பதாக முஸ்லிம் மக்கள் பெருமளவில் கூடி, இஸ்ரேல் தூதுவராலயம் மூடப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், பிரதமர் டட்லி சேனநாயக்க அசைந்து கொடுப்பதாக இல்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாக நின்றார்.

அனைத்து வாய்ப்புக்களையும் தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி, இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டது. தாம் ஆட்சிக்கு வந்தால், இஸ்ரேலிய தூதுவராலயத்தை மூடுவோம் என்று ஸ்ரீமாவோ வாக்களித்தார். அதன்படி புதிய நாடாளுமன்றம் சுதந்திர சதுக்கத்தில் கூடி, சிம்மாசன உரை நிகழ்ந்த போதே இஸ்ரேலிய தூதுவராலயத்தை மூடுவது பற்றியும் அறிவிக்கப்பட்டது.

அன்று சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்து முஸ்லிம் மக்கள் 'அல்லா ஹூ அக்பர்' என்று கூறி அம்முடிவை வரவேற்றனர். அதுமட்டுமல்லாது ஸ்ரீமாவோ அரசாங்கமானது அமெரிக்க சமாதானப் படையணி (Peace Corps) மற்றும் ஆசிய மன்றம் (Asia Foundation) ஆகிய அமைப்புக்களையும் நாட்டிலிருந்து வெளியேறப்பணித்தது.

சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை மேற்குடன் இலங்கை கொண்டிருந்து உறவு குறுகலடைந்து, கிழக்குடனான உறவு விரிவடையத்தொடங்கியது. ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் வட கொரியா, ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி அல்லது சோவியத் ஜேர்மனி), தென் வியட்நாமிய தேசிய விடுதலை முன்னணியின் இடைக்கால அரசு ஆகியவற்றுக்கு இராஜதந்திர அங்கிகாரத்தை வழங்கியது. அதன்படி, வட கொரிய மற்றும் கிழக்கு ஜேர்மனி தூதுவராலயங்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டன.

ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணி

டட்லி சேனநாயக்க அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரோஹண விஜேவீர உள்ளிட்ட ஜே.வி.பியினரை ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 1970 ஜூலையில் விடுதலை செய்தது. படபண்டிகே டொன் நந்தசிறி விஜேவீர என்ற இயற்பெயரைக் கொண்ட ரோஹண விஜேவீர, தங்காலையில் பிறந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக அவரது தந்தை இருந்ததனால், அவரும் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து செயற்பட்டார். 1960ஆம் ஆண்டு ரஷ்ய புலமைப்பரிசிலொன்றைப் பெற்று மருத்துவம் கற்க மொஸ்கோ சென்றார். 1962இல் ரஷ்ய-சீன பிரிவினை ஏற்பட்டபோது, சீனாவை வெளிப்படையாகவே ஆதரித்தார்.

1964ஆம் ஆண்டு விஜேவீர விடுமுறைக்கு இலங்கை வந்தார். அவரது சீன ஆதரவின் விளைவாக, மீண்டும் ரஷ்யா செல்வதற்கா விசாவினை இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகம் தரமறுத்துவிட்டது. செய்வதற்கேதுமின்றியிருந்த விஜேவீர, அன்று பிரிவடைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின், சண்முகதாசன் தலைமையிலான பீகிங் பிரிவில் சேர்ந்துகொண்டார்.

அங்கு தலைவராக இருந்த சண்முகதாசன் மீது அதிருப்திகொண்ட குழுவினருடன் நெருக்கம் கொள்ளத்தொடங்கினார். கட்சியின் சில உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியதன் காரணத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜேவீர, அடுத்தது என்ன என்று அறியாத நிலையில் இருந்தார்.

இந்நிலையில்தான் அன்று பதவியிலிருந்த டட்லி அரசாங்கத்தை வீழ்த்தத் திட்டமிட்டுக்கொண்டிருந்த சில நபர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது, அவர்களுடன் தன்னை டொக்டர் திஸ்ஸ என்ற பெயருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சு நடத்தத்தொடங்கினார். அது அன்று வெற்றியளிக்கவில்லை. 1966இன் மையப்பகுதியில் தன்னுடைய தோழர்கள் சிலருடன் இணைந்து ஜனதா விமுக்தி பெரமுண (ஜே.வி.பி) என்ற சிங்கள இளைஞர்களைக் கொண்ட தீவிர

மாக்ஸிஸவாத அமைப்பைத் தோற்றுவித்தார். பேச்சுகள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என்பன மூலம் இளைஞர்களைத் திரட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இது பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கும் தகவல்கள் கிடைத்தன. 1970 மார்ச் 16ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஜூல்கம பிரதேசத்தில் வைத்து

பொலிஸாரினால் ரோஹண விஜேவீர உட்பட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ரோஹண விஜேவீர கையில் துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டார். பாதாள உலகக் குழு ஒன்றை நடத்தியமை, அரசுக்கெதிரான சதி, ஆயுதங்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்த சதி செய்தமை ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 1970 தேர்தலில் போது ரோஹண விஜேவீர சிறையிலேயே இருந்தார்.

ஆனால், ஜே.வி.பி அமைப்பும் அதன் இளைஞர்களும் ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளித்தனர். அவர்களது சோசலிஸத் திட்டத்தை தாம் ஆதரிப்பதாக அறிவித்தனர். ஸ்ரீமாவோ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ரோஹண விஜேவீரவும் ஏனைய 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அன்று ஸ்ரீமாவுக்கோ, அவரது அரசாங்கத்துக்கோ தெரியவில்லை, இது மிகப்பெரும் இரத்தக்களரிக்கும் பல இளைஞர்களின் மரணத்துக்கும் வழிசமைக்கப்போகிறதென்று.

(அடுத்த வாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .