2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கென்றொரு புதிய அரசியல் யாப்பு

Thipaan   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 34)

பின்புலம்

1947ஆம் ஆண்டின் சுதந்திர அரசியல்யாப்பு, (சோல்பரி அரசியல்யாப்பு) இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்தை வழங்கியது. சோல்பரி யாப்பின் கீழ், பிரித்தானிய முடியினால், ஆளுநர் நியமிக்கப்பட்டார். (நடைமுறையில் பிரதமரின் விதந்துரைப்பின்பேரில் இது நடந்தது) அத்துடன், நிர்வாகத்துறையின் தலைவராக, பிரித்தானிய முடியே அமைந்தது. இலங்கைக்கென சட்டங்களியற்ற வெஸ்மினிஸ்டர் பாணியிலான நாடாளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், அரச உயரதிகாரிகள் உட்பட்ட அனைவரும் பிரித்தானிய முடிக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டியதாகவிருந்தது.

டொமினியன் அந்தஸ்துள்ள (பிரித்தானிய முடிக்கு கீழான) நாடாக இருந்த இலங்கையை குடியரசாக மாற்றும் முயற்சிகள், 1970களுக்கு முன்பதாக 1956இல் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையை பிரித்தானிய பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்தத்தக்கதாக ஓர் அரசியல்யாப்பை உருவாக்க, நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டன. அத்தோடு, நாடாளுமன்ற முறையிலான அரசாங்கம் தொடரும் எனவும் நாட்டின் அரசியலமைப்பு ரீதியிலான தலைவராக ஜனாதிபதி இருப்பார் எனவும் ஜனாதிபதியும் உப ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படுவர் எனவும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் அங்கிகரிக்கப்படும் எனவும் இணங்கப்பட்டது. அத்தோடு, பிரித்தானிய பிரிவி கவுன்ஸலுக்கு

மேன்முறையீடு செய்யும் உரிமையை இல்லாதொழிப்பதுடன், இலங்கையில் உச்ச நீதித்துறை நிறுவனமாக உயர் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அது மேன்முறையீடுகளையும் அரசியல்யாப்பு விடயங்களையும் விசாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், பிரித்தானிய முடியின் இறைமையை இல்லாதொழித்து, 1947இன் சோல்பரி அரசியல்யாப்பை இல்லாதொழித்து, புதியதொரு அரசியல்யாப்பை உருவாக்கும் அதிகாரம் 1947இன் சோல்பரி யாப்பின் கீழ் அமைந்த நாடாளுமன்றத்துக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக, இப்ராலெப்பே எதிர் முடி மற்றும் இலஞ்ச ஆணையாளர் எதிர் ரணசிங்க ஆகிய வழக்குகளில் தீர்ப்பளித்த பிரித்தானிய பிரிவி கவுன்ஸில், முறையே சோல்பரி யாப்பின் 29ஆம் சரத்து அடிப்படையானது எனவும், 29(2) சரத்து மாற்றப்பட முடியாதது எனவும் குறிப்பிட்டிருந்தது.

ஆகவே, நாடாளுமன்றத்தினூடாக புதியதொரு அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றால், அது 29(2) சரத்தைக் கொண்டிருக்க வேண்டியதாகவே இருந்தது. 29(2)(உ) சரத்தானது சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை வழங்கியிருந்தது. ஏனையவர்களுக்கு இல்லாத ஒரு முன்னுரிமையை அல்லது நன்மையை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு அல்லது மதத்துக்கு மட்டும் வழங்குவதை இந்த சரத்து தடை செய்தது. ஆகவே, 29ஆம் சரத்து இல்லாதவாறு புதியதொரு அரசியல்யாப்பை உருவாக்கும் வழிவகைகள் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது.

அன்றைய காலத்தில் காலனித்துவத்திலிருந்து விடுதலைபெற்ற நாடுகள், உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியல் யாப்புக்களை (autonomous constitution) உருவாக்கத்தொடங்கின. இத்தகைய உள்நாட்டிலே உதிக்கின்ற தன்னாட்சி, தன்னிறைவு கொண்ட அரசியல்யாப்புக்கள் சட்டத்தின் தொடர்ச்சியில் ஒரு தடையை உண்டாக்கிறது. இந்த சிந்தாந்தத்தின் மூலத்தை முன்னிறுத்தியவர்களுள் பேராசிரியர்.கே.ஸி.வெயார் முக்கியம் வாய்ந்தவர்.

அதாவது, ஏலவேயுள்ள காலனித்துவ அரசியல்யாப்பிலே புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குதற்கான வழிமுறைகளைப் பின்பற்றாது, அதற்கு வெளியிலாக உள்நாட்டிலிருந்து பிறக்கும் மக்களின் அதிகாரத்திலிருந்து புதியதொரு அரசியலமைப்பை ஸ்தாபிக்கும் முறையாகும்.

தனியாக, சட்டரீதியில் மட்டும் பார்த்தால், இவ்வகையானதொரு அரசியலமைப்பை உருவாக்குதல் சட்டவிரோதனமானதாகும். அதனால்தான் இன்றுவரையும் இலங்கையினுடைய அரசியல்யாப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்ற வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதாவது 1972ஆம் ஆண்டு அரசியல்யாப்பு, 1947ஆம் ஆண்டு அரசியல்யாப்புக்கு முரணாக உருவாக்கப்பட்டமையினால், அது சட்டவலுவற்றது என்ற வாதமும், அதனைத்தொடர்ந்து வந்த 1978ஆம் ஆண்டு அரசியல்யாப்பும் சட்டவலுவற்றது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பை நியாயப்படுத்துவபர்கள், autonomous constitution (உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியலமைப்பு) என்ற சித்தாந்தத்தை முன்வைத்து அதனை நியாயப்படுத்துகிறார்கள். இத்தகைய நடவடிக்கையை கலாநிதி கொல்வின்.ஆர்.டீ.சில்வா 'ஒரு சட்டப் புரட்சி' என்று வர்ணித்தார். இது பற்றி சட்டவியல் ரீதியில் அலசுவதற்கு நிறைய உண்டெனினும், இக்கட்டுரைத்தொடருக்கு அது பெரிதும் அவசியம் அற்றது என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.

1965ல் பிரதமர் டட்லி சேனநாயக்க அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளை முன்னெடுத்தார் இதற்கான இணைந்த குழுவில் பங்கேற்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மறுத்துவிட்டன. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்குப் பதிலாக, புதியதொரு உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதே இவர்களுடைய எண்ணமாக இருந்தது.

இந்த நிலைப்பாட்டுக்கமைய, 1970 தேர்தலில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியாக இணைந்த இம்மூன்று கட்சிகளும் தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இறைமையுள்ள, சுதந்திரமான, அடிப்படை மனித உரிமைகளை அங்கிகரிக்கின்ற சோசலிஸ ஜனநாயக அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான மக்களாணையைக் கோரியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு அவையாக அமர்ந்து புதியதொரு அரசியலமைப்பொன்றை வரைந்து, ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தவதற்கான மக்களாணையையும் கோரியது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின

1970ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றியொன்றை ஐக்கிய முன்னணி பெற்றுக்கொண்டதன் வாயிலாக, புதியதொரு அரசியலமைப்பை நாடாளுமன்றத்துக்குப் புறம்பாக அரசியலமைப்பு அவையாக அமர்ந்து உருவாக்குவதற்கான மக்களாணையையும் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றம் கூடியபோது சிம்மாசன உரையிலும் மக்களாணைக்கேற்ப நாடாளுமன்றத்துக்கு புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு அவையாக அமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

1970ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்தின் கீழவை (மக்கள் பிரதிநிதிகள் சபை) உறுப்பினர்கள் யாவருக்கும் 19ஆம் திகதி நடைபெறத் திட்டமிட்டிருந்த அரசியலமைப்பு அவையாக இயங்குவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பிலான கூட்டமொன்றுக்கு சமுகந்தருமாறு அழைப்புவிடுத்திருந்தார். குறித்த கூட்டமானது நாடாளுமன்றத்திலன்றி, நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக கொழும்பு றோயல் கல்லூரியின் 'நவரங்கஹலவில்' (புதிய மண்டபத்தில்) இடம்பெறவிருந்தது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இக்கூட்டத்தைக் கூட்டியமையானது, சட்டத்தொடர்ச்சியில் ஒரு தடையை உருவாக்கும் விதமாக உண்ணாட்டிலிருந்து உதித்த சுயமான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குதற்கான சமிக்ஞையாக அமைந்தது. அன்று அரசியலமைப்பு அமைச்சராக இருந்த கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வா 'இது பழைய அஸ்திவாரத்தின் மேல், புதிய கட்டடத்தைக் கட்டும் முயற்சியல்ல' என்றும் குறிப்பிட்டார்.

1970ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதியன்று பலத்த ஆரவாரத்துடன் நடந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள சகல கட்சிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக அரசியலமைப்பு அவையாக அமர்வதற்கான தீர்மானம் மீது, நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றபோது அங்கு உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ புதிய அரசியலமைப்பானது எம்மை ஒரு தேசமாக பலப்படுத்தப்படவேண்டும். எம்முள் பல இனங்கள் உண்டு, பல மதங்கள் உண்டு. ஆனால், நாங்கள் ஒரு தேசமாவோம், ஒரு தேசமாகவே நாம் இயங்கவும் வேண்டும் என்றார்.

அன்றிலிருந்தே இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு இலங்கையை 'ஒரு நாடாக அல்லாது' 'ஒரு தேசமாக' மீள மீளப் பிரகடனப்படுத்துவதில் அலாதிப்பிரியம் இருந்தது. இதற்குள் அரசியல் சூட்சுமங்கள் நிறைய உண்டு. அதைப்பற்றி பிறகு பார்ப்போம். அத்தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன நாட்டிலுள்ள மக்களில் 50 சதவீதத்தினருக்கு குறைவானவர்களே ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இந்நாட்டு மக்களின் மக்களாணை உண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது, ஆனாலும் நாடாளுமன்றத்தின் இரண்டு பக்கத்தவர்களும் இணங்கத்தக்க புதிய அரசியலமைப்பு ஒன்றை சட்டப் புரட்சி ஒன்றினூடாக செய்வதற்கு அவர் ஆதரவளிப்பதாகச் சொன்னார்.

தமிழ்த் தலைமைகளின் அபிப்ராயம்

சமஷ்டிக் கட்சி (இலங்கை தமிழரசுக் கட்சி) சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.தர்மலிங்கம் உரையாற்றுகையில், 1956ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் மக்களுக்கு இன்னல்களை மட்டுமே தந்துகொண்டிருக்கும் இந்த அரசியல் யாப்பை மாற்றுவதற்கு தமிழ் மக்கள் தமக்குத் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் மக்களாணை தந்திருக்கிறார்கள் என்றார். அவர், தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதான புதிய அரசியல்யாப்பொன்றை உருவாக்குவது பற்றியே எதிர்பார்த்தார். ஆனால், 1972ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு, தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, சிங்கள-பௌத்தர் அல்லாத சகலரையும் இரண்டாம் நிலைக்குத்தள்ளத் தக்கதொன்றாகவே அமைந்தது என்பதே நிதர்சனம். சமஷ்டிக்கட்சியைச் சேர்ந்த

எஸ்.கதிரவேற்பிள்ளை உரையாற்றுகையில், தமது கட்சியானது நாட்டைப் பிரிப்பதை எதிர்ப்பதாகவும் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார். நாடாளுமன்றத்தில் பேசிய

சா.ஜே.வே.செல்வநாயகம், ஜவஹர்லால் நேருவை மேற்கோள்காட்டி முரண்பாடான விடயங்கள் தொடர்பில், இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான பொது அடிப்படைகளை அறியும் நிரந்தர உறுதிப்பாட்டுடன், அரசியலமைப்பு அவைக்குச் செல்ல வேண்டும் என்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் உரையாற்றிய வீ.ஆனந்தசங்கரி, தமிழ் காங்கிரஸ் புதிய அரசியலமைப்பொன்றை இயற்றும் இம்முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்பவில்லை எனவும் ஆனால், அரசாங்கம் நியாயமாக நடப்பதுடன், புதிய அரசியலமைப்பை ஏகமனதாக நிறைவேற்றும் வழியினை ஏற்படுத்த வேண்டும் எனவும் பேசினார்.

நாடாளுமன்றத்தில், அனைத்துக்கட்சிகளும் அரசியலமைப்பு அவையை அமைப்பதற்கு இணங்கியிருந்தது. 1970 ஜூலை 21ஆம் திகதி அரசியலமைப்பு அவையை உருவாக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திலிருந்த எந்தவொரு தமிழ் கட்சியும் இதற்கான எதிர்ப்பைப் பதிவுசெய்யவில்லை.

தமிழ் தரப்பிலிருந்து முதல் எதிர்ப்பு 'அடங்காத் தமிழன்' சீ.சுந்தரலிங்கத்திடமிருந்து வந்தது. அரசியலமைப்பு அவை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கெதிரான தடையுத்தரவொன்றை வேண்டி சீ.சுந்தரலிங்கம், உயர்நீதிமன்றுக்கு மனுச்செய்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜீ.பெனான்டோ மற்றும் நீதியரசர் விஜேதிலக்க ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் குறித்த மனு விசாரணைக்கு வந்தது. சட்டவிரோதமானதொரு காரியம் நிகழ்ந்தாலன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடுவதை, அது எந்தப் பெயரின் கீழா இருப்பினும், தடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை எனக்கூறிய உயர்நீதிமன்றம், 1971 பெப்ரவரி 13 உயர்நீதிமன்றம் சீ.சுந்தரலிங்கத்தினுடைய மனுவை நிராகரித்தது.

(அடுத்த வாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .