Thipaan / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் பயிற்றுநரான வக்கார் யுனிஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவுபெறுவற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடர், பங்களாதேஷில்
இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகள் உட்பட, அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணி, சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
உலக இருபதுக்கு-20 தொடர் நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் அணியின் தோல்விகள் தொடர்பாக, அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி உட்பட கிரிக்கெட் சபை, கிரிக்கெட் கட்டமைப்புத் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை வக்கார் யுனிஸ் சமர்ப்பித்து, அந்த அறிக்கை ஊடகங்களுக்குக் கசிந்திருந்த நிலையில், அது தொடர்பாகக் கடுமையான அதிருப்தியை வக்கார் யுனிஸ் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம், லாகூரில் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளைச் சந்தித்த வக்கார் யுனிஸ், தனது பதவி விலகல் குறித்து நேற்று அறிவித்தார்.
ஏற்கெனவே ஒரு தடவை பயிற்றுநராகப் பதவி வகித்திருந்த வக்கார் யுனிஸ், இரண்டாவது தடவையாக மே மாதம் 2014இல் பயிற்றுநராகப் பதவியேற்றிருந்தார். அவரது இப்பதவிக்காலத்தில், டெஸ்ட் தரப்படுத்தலில் அவ்வணி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருந்தது.
பாகிஸ்தான் இருபதுக்கு-20 அணியின் தலைவர் ஷகிட் அப்ரிடி, தனது பதவியிலிருந்து விலகி மறுநாளே, தனது பதவியிலிருந்து வக்கார் யுனிஸ் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .