Gavitha / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்புத் திருத்தத்தில், வடமாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளை உள்ளீர்த்துக்கொள்ளும் வகையில், மேற்படி யோசனைத் திட்டத்தைத் தயாரித்துள்ள வடமாகாண சபை, அதனை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் தவிர ஏனையோரின் ஏகமனதான வரவேற்புடன், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த யோசனைத் திட்டத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை என்றும் அதற்கான தேவையுமில்லை என்றும் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மொஹமட் நஸீர், 'வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பதென்பது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முக்கிய குறிக்கோளாகும்' என்றார்.
'இருப்பினும், வடக்கிலுள்ள பொதுமக்களுக்கோ அல்லது கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கோ அவ்வாறானதொரு தேவையொன்று இதுவரையில் ஏற்படவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மு.காவின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, தமிழ் பேசும் மக்களுக்காக தனியானதொரு மாகாணம் அமைய வேண்டும் என்று வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனையை, அரசியல் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையில்லை என்றும் எந்தவோர் அரசியல் கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ, தனது யோசனையை முன்வைக்கக்கூடிய முழுச் சுதந்திரம் இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'இருப்பினும், இந்த யோசனை நடைமுறையில் கொண்டுவரப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுடனேயே முடிவெடுக்கப்பட வேண்டும்' என்றும் ஹசன் அலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை, கடந்த வெள்ளிக்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த யோசனை, சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையைத் தயாரிப்பதற்காக, வட மாகாண சபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு, வடக்கின் பல பிரதேசங்களுக்கும் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தே, மேற்படி யோசனையைத் தயாரித்திருந்தது.
இதில், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து, அங்கு சமஷ்டி ஆட்சிமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்று, யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. வட மாகாண சபையின் அனுமதிக்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களாக வி.ஜயதிலக்க மற்றும் தர்மபால செனவிரத்ன ஆகியோர், இந்த யோசனையைக் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வெள்ளியன்று நிறைவேற்றப்பட்ட இந்த யோசனை, எதிர்வரும் 28ஆம் திகதியன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .