2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

2003க்கு பின்னர் முதற் தடவையாக அப்பிளின் வருமானத்தில் வீழ்ச்சி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபோன்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தனது இரண்டாவது காலாண்டு வருமானத்தில் 13 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என அப்பிள் தெரிவித்துள்ளது.

காலாண்டு விற்பனையால் 50.56 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொழில்நுட்ப ஜாம்பவானான அப்பிள் அறிவித்துள்ளது. இதே காலப் பகுதியில், 2015ஆம் ஆண்டில், விற்பனையால் 58 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றிருந்தது. இது, 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் அப்பிளின் விற்பனையில் ஏற்பட்டுள்ள முதலாவது வீழ்ச்சியாகும்.

இவ்வாண்டின் காலாண்டுப் பகுதியில், 51.2 மில்லியன் ஐபோன்களை அப்பிள் விற்றுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 61.2 மில்லியன் ஐபோன்களை விற்றிருந்தது.

பிரதானமாக சீனாவே அப்பிளுக்கு பலவீனமான இடமாக உள்ளது. சீனாவில், விற்பனை 26 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உறுதியான ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாகவும் அப்பிளின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்படி தகவல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (26) வெளியாகியுள்ள நிலையில், அப்பிளின் பங்குகள் எட்டு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. இதேவேளை, கடந்த 12 மாதங்களில் அப்பிளின் பங்குகள், 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உறுதியான பாரிய பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் அப்பிள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

திறன்பேசிச் சந்தையானது அதன் உச்சத்தை கடந்துள்ளதாக கருதப்படுகின்ற நிலையில், அப்பிளுக்கு தனது வருமானத்தை உயர்த்த, புதியதொரு தயாரிப்பு உச்சத்தை தொடவேண்டியுள்ளது. அப்பிள் வோட்ச் ஆனது ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஈட்டும் என எதிர்வு கூறப்பட்டபோதும் இது போதுமானதாக இல்லை.

எனினும் அப் ஸ்டோர் தரவிறக்கங்கள், அப்பிள் பே, அப்பிள் மியூசிக் உள்ளிட்ட தனது சேவைகள் பிரிவின் மூலம் அப்பிள் ஆறுதல்பட்டுக்கொள்ள முடியும். ஏனெனில், 2015ஆம் ஆண்டின் இதே காலாண்டுப் பகுதியை விட இவை 20 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

எவ்வாறெனினும் கடந்த மார்ச் மாதம் சீனாவில் நடைமுறைக்கு வந்த விதியால் மேற்படி வளர்ச்சியும் அபாயத்துக்குள்ளாகியுள்ளது. புதிய விதிகளின்படி, சீன மக்களுக்கு காண்பிக்கப்படும் அனைத்தும் சீனாவிலேயே உள்ள தரவுத் தளங்களிலேயே சேமிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாக, தற்போது, அப்பிளின் ஐபுக்ஸ், ஐட்டியூன்ஸ் திரைப்பட சேவை என்பன சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்தச் சேவைகள் விரைவில் வழமைக்கு திரும்பும் என அப்பிள் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .