2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புறக்கணிக்கப்படமுடியாத மெய்நிகர் அச்சுறுத்தல்கள்

Thipaan   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

மனிதர்களைப் பொறுத்தவரை, பல்வேறான முகங்கள் இருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் முகங்களில், இரண்டு முகங்கள் முக்கியமானவை. ஒன்று, ஒருவரது உண்மையான முகம். இரண்டு, ஒருவரது மெய்நிகர் (virtual) வாழ்வின் முகம். சிலரது இரண்டு முகங்களுக்குமிடையில் வித்தியாசங்கள் குறைவாகக் காணப்பட முடியும். ஆனால் பலரது முகங்கள், மிக அதிகமான வித்தியாசத்தைக் காண்பிக்கின்றன.

பதின்ம வயதுகளில் பேஸ்புக் போன்ற இணையவழித் தொடர்பாடல் தளங்களைப் பயன்படுத்திய அனேகமான ஆண்களுக்கு, பெண்கள் பெயரில் உலவும் ஆண்களின் தொல்லை நிச்சயமாக இருந்திருக்கும். இந்தத் தொல்லை, பெருமளவானோருக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும், மெய்நிகர் உலகில், ஒருவரது அடையாளத்தை மாற்றுதல் எவ்வளவு இலகுவானது என்பதை எமக்கெல்லாம் காட்டிய முக்கியமான அனுபவமிதுவாகும்.

இருக்க, மெய்நிகர் உலகத்தின் கிடைக்கின்ற நன்மைகள் அல்லது மகிழ்ச்சிகள், எமது நாளாந்த வாழ்வில் நேர்முகமான தாக்கத்தைச் செலுத்த, மறைமுகமான அனுபவங்களை எதிர்கொள்ளுதல் தொடர்பாக, நீண்டகாலமாகவே விவாதம் நிலவிவந்தது. குறிப்பாக, இணையத்தளங்களில் கிடைக்கும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது குறித்து, வேறுபட்ட கருத்துகள் நிலவின.

ஒரு சாராரைப் பொறுத்தவரை, இணையத்தளங்களென்பவை வெறுமனே மெய்நிகர் உலகின் அம்சங்கள். அவற்றில் வழங்கப்படும் அச்சுறுத்தல்கள், எங்களை நேரடியாகப் பாதிக்காது. 'இணையத்தளத்தில் அச்சுறுத்தல் வந்தால், இணையத்திலிருந்து வெளியேறினால் அது தெரியாது' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மறுசாராரைப் பொறுத்தவரை, இணையமென்பது என்னதான் மெய்நிகர் உலகமாக இருந்தாலும், அதை இயக்குவது மனிதர்களே, எனவே அங்கு கிடைக்கும் அச்சுறுத்தல்களும், வாழ்வில் நேரடியாகக் கிடைக்கும் அச்சுறுத்தல்கள் போன்று கருதப்பட வேண்டும். அதாவது, 'பூனை, கண்ணை மூடுவதால், உலகம் இருண்டுவிடாது' என்ற கருத்தைக் கொண்டவர்கள் இவர்கள்.

இந்நிலையில், உண்மையில் மெய்நிகர் உலக அச்சுறுத்தல்களை எவ்வளவு காத்திரமாகக் கணக்கிலெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி, இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பில் கிளின்டன் இருந்தபோது, அவரோடு திருமணத்துக்குப் புறம்பான உறவை ஏற்படுத்தி, சர்ச்சைக்குரிய விதத்தில் பலராலும் அறியப்பட்ட மோனிக்கா லெவின்ஸ்கியின் அனுபவங்களையும் அண்மையில் பங்களாதேஷில் கொல்லப்பட்ட சஞ்சிகையொன்றின் ஆசிரியரின் அனுபவங்களையும் பிரதானப்படுத்துகிறது இந்தக்கட்டுரை.

மெய்நிகர் உலகென்பது, சாதாரண உலகத்தைப் போன்றே, சிறுபான்மையினருக்கு மிகவும் ஆபத்தான இடமாகும். பெண்ணாக இருந்தாலோ அல்லது சமபாலுறவாளராக இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது விதத்தில் சிறுபான்மைச் சமூகத்தின் அங்கமாக இருந்தால், மெய்நிகர் உலகத்தில் தப்பிப் பிழைப்பதென்பது, மிகுந்த சவாலானது.

ஜனாதிபதி பில் கிளின்டனுடன் தொடர்புகளைப் பேணிய மோனிக்காவின் விவகாரம், 1998ஆம் ஆண்டே வெளிவந்து, அதன்பின்னர் பிரபலமடையத் தொடங்கியது. இணையத்தின் வரலாறும், 1990களின் பிற்பகுதியில் ஆரம்பித்து, துரித வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. இவை இரண்டுமே இணைந்து, இணைய வரலாற்றில், மிக முக்கியமான சர்ச்சையாக அது அமைந்தது.

ஆரம்பத்தில், சர்ச்சைகளைப் பயன்படுத்தி, தனது வியாபார நாமத்தை விற்பனை செய்ய முயன்ற மோனிக்கா, இணையத்தின் கேலிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளமுடியாது, பொது வாழ்விலிருந்து ஒதுங்கி, அமைதியான வாழ்வொன்றை வாழ்ந்தார். அவரது வாழ்வில் அவர் ஏராளமான கேலிகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்திருப்பாரென்ற போதிலும், மெய்நிகர் உலகில், கிட்டத்தட்ட எண்ணமுடியாத நபர்களிடமிருந்து கிடைக்கும் கேலிகளும் அச்சுறுத்தல்களும், மிக மோசமாக இருந்தன.

தனது இரகசிய வாழ்விலிருந்து 2014ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த மோனிக்கா, இணையத்தில் கேலி, கிண்டல், அச்சுறுத்தல் போன்றவற்றுக்கெதிரான செயற்பாட்டாளராகத் தன்னை வெளிப்படுத்தி, தனது வாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார். அவ்வாறு அவர் வெளியிட்ட மிக முக்கியமான நேர்காணலாக, கார்டியன் இணையத்தளத்துக்கு அவர் அண்மையில் அளித்த நேர்காணல் காணப்படுகிறது. மெய்நிகர் உலகில் தன்மீதான கேலிகளும் அச்சுறுத்தல்களும், தன்னை எவ்வாறு தற்கொலை எண்ணங்கள் வரை கொண்டுசென்று சேர்த்தன என்பதை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அவரால், இணையத்தை விட்டு விலகியிருந்திருக்க முடியாதா? முடியும். ஆனால், இணையம் மூலமாக அவருக்கெதிராகப் பரவுகின்ற செய்திகளையும் எண்ணங்களையும் அவரால் தடுக்க முடியுமா? முடியாது.

ஏற்கெனவே சொல்லப்பட்டது போன்று, சிறுபான்மையினரைத் தான் இந்த அச்சுறுத்தல்களும் கேலிகளும் அதிகம் பாதிக்கின்றன. பில் கிளின்டன் - மோனிக்கா லெவின்ஸ்கி இருவருக்குமிடையிலான பாலியல் உறவென்பது, வளர்ந்த இருவர் (அவ்வுறவு ஏற்படும்போது மோனிக்காவுக்கு வயது 22, பில் கிளின்டனுக்கு 48), தாங்களாக உடன்பட்டு மேற்கொண்ட உறவு அது. பில் கிளின்டன் திருமணமான ஒருவர் என்ற அடிப்படையிலும் நாட்டு ஜனாதிபதி என்ற அடிப்படையிலும் அலுவலகம் என்ற அடிப்படையிலும், அவர்களுக்கிடையிலான உறவு, தவறானதாக மாறுகிறது. ஆனால், அவ்வாறான தவறு ஏற்பட்டிருந்தால், அந்தத் தவறு, இருவர் மீதும் சுமத்தப்பட வேண்டும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், 48 வயதான, அனுபவமிக்க, நாட்டின் மிக உச்ச பொறுப்பிலிருக்கின்றவர் என்பதன் அடிப்படையில், பில் கிளின்டன் மீது, அதிகமான குற்றம் காணப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்காவின் மிகச்சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவராக அவர் இன்னமும் கணிக்கப்படுகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் அவரது திருமணத்துக்குப் புறம்பான உறவு பற்றிக் கேட்கப்படுவதில்லை. அவரது நடத்தை, அந்த உறவை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதில்லை. அவரது மனைவிக்கு அவரால் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி, தேர்தலில் வாக்குக்கேட்க முடிகின்றது. மறுபுறத்தில், மோனிக்காவின் நடத்தை, 22 வயதானவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட தவறாலேயே கணிக்கப்படுகிறது. இணையத்தில் அவர்மீதான விவரிப்புகள், 'பில் கிளின்டனுடன் உறவு வைத்திருந்த பெண்' என்றே தொடங்குகின்றன. இவ்வாறு, இந்தத் தவறில் மோனிக்கா மீது மாத்திரமே அதிகளவிலான கவனம் காணப்படுகிறது.

ஆகவே தான், இவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் திடத்தை வரவழைத்துக்கொண்ட மோனிக்கா, தன்னை ஒரு செயற்பாட்டாளராக மாற்றிக் கொண்டார். அந்தச் சர்ச்சையின் மூலமாக அவருக்குக் கிடைத்த செல்வத்தினால், மிகச்சிறந்த மனோவியலாளர்களைத் தன்னோடு வைத்துக்கொண்டு, இலண்டனுக்குச் சென்று உயர்படிப்புகளைப் பின்பற்ற அவரால் முடிந்திருந்தது. இலங்கையிலுள்ள சாதாரண பெண்ணொருவருக்கு அவ்வாறான வாய்ப்புகள் கிடைத்திருக்குமா?

இதனால் தான், மெய்நிகர் உலகில் காணப்படும் அச்சுறுத்தல்களையும் கேலிகளையும் முக்கியமானவையாகக் கருதி, அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

மெய்நிகர் உலக அச்சுறுத்தல்களால் ஏற்படுத்தப்படும் உளவியல்ரீதியான பாதிப்புகள், சாதாரணமானவையன்று. அவை, நீண்டகால வடுவை ஏற்படுத்தக்கூடியன. சிலருக்கு, அவை குணப்படுத்த முடியாத வடுக்களை ஏற்படுத்தும். உளவியல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் தைரியம் உள்ள ஒருவருக்குக் கூட, அந்த அச்சுறுத்தல்களின் நேரடிப் பாதிப்பைப் புறக்கணித்துவிட முடியாது.

மெய்நிகர் உலகை இயக்குவது, மனிதர்கள் தான். அங்கு கிடைக்கும் அச்சுறுத்தல்களுக்குப் பின்னாலுள்ளவர்கள், மனிதர்கள் தான். கணிசமான நேரங்களில், அந்த அச்சுறுத்தல்கள், வெறும் அச்சுறுத்தல்களோடு முடிவடைகின்ற போதிலும், குறிப்பிட்டளவு அச்சுறுத்தல்கள், நேரடியான விளைவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்படுபவை தான்.

கடந்த திங்கட்கிழமை, பங்களாதேஷில் வைத்துக் கொல்லப்பட்ட, சமபாலுறவாளர்களுக்கான சஞ்சிகையின் ஆசிரியர், சமபாலுறவாளர்களின் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றபோது, இணையம் மூலமாக அவருக்குக் கொலை அச்சுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பான பொலிஸ் முறைப்பாடும் பதியப்பட்டது. ஆனால், அவை தொடர்பான போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்காத நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த சிலர், அவரையும் அவரது நிறுவனத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவில் காணப்பட்ட இன்னொருவரையும் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அவருக்கான மெய்நிகர் அச்சுறுத்தல், அதிக கவனத்துடன் நோக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்தால், அவரை நிச்சயமாகக் காப்பாற்றியிருக்க முடியுமென்று கூற முடியாது. ஆனால், அவரைக் காப்பாற்றுவதற்கான அதிகபட்ச வாய்ப்பை வழங்கியிருக்குமென்பது நிச்சயமானது.

ஆகவே தான், மெய்நிகர் உலக அச்சுறுத்தல்களை, பாரதூரமான விடயங்களாகக் கருத வேண்டிய தேவையும், அதற்கான வழிவகைகளையும் மனோநிலை மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய சமூகத் தேவையும் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல்கள், பெண்கள், சிறுபான்மையினர் (இனம், மதம், சாதி, கொள்கைகள் அடிப்படையில்) ஆகியோரை, மிக அதிகளவில் பாதிக்கின்ற நிலையில், மெய்நிகர் உலகில் பெரும்பான்மையினராக இருக்கின்ற ஆண்கள், இதற்காக அதிக பங்களிப்பை வழங்க வேண்டுமென்பதும் முக்கியமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .