2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீவிரம்பெறும் சமஷ்டி எதிர்ப்பு அரசியல்

Thipaan   / 2016 மே 01 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெறும் வாயை மென்று கொண்டிருந்த, தெற்கிலுள்ள எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளுக்கும், இப்போது வட மாகாணசபை தான் அவலாக வாய்த்திருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வு யோசனை ஒன்றை முன்மொழிந்திருப்பது தான், வட மாகாணசபை மீது எல்லாத் தரப்பினருக்கும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையினால், முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைக்கு கிட்டத்தட்ட இணையானதொரு தீர்வு யோசனையைத் தான் வட மாகாணசபையும் முன்மொழிந்திருக்கிறது.

ஒரு சில விடயங்களில் தான் வட மாகாணசபையின் முன்மொழிவு, சற்று நீக்குப்போக்காக இருக்கிறது. அதற்குச் சட்டரீதியான கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம். ஏனென்றால், இது சட்டரீதியாகச் செயற்படும் ஒரு சபை. அரசியலமைப்பு வரையறைகளைத் தாண்டிச் செல்ல முடியாது. ஆனால், தமிழ் மக்கள் பேரவைக்கு அவ்வாறான எந்த தடைகளும் இல்லை. எனவே, அதனால் எத்தகைய தீர்வு யோசனையையும் முன்வைக்கலாம்.  தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை வெளியான போது, அதுபற்றி தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் பெரியளவிலான பிரதிபலிப்பு எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

தமிழ் மக்கள் பேரவை, தென்னிலங்கையின் கடும் போக்காளர்களை உசுப்பிவிட்டு விடுமோ என்ற கவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோருக்கு இருந்தது. அதனை அவர்கள் வெளிப்படையாகவும் கூறியிருந்தனர்.  ஆனாலும், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை தெற்கின் அரசியல் களத்தில் குறைந்தபட்ச சலசலப்பைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை.

ஒருவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையில் ஆரம்பத்தில் காணப்பட்ட தீவிர முரண் நிலை தொடர்ச்சியாக நீடித்திருந்தால், பேரவையின் தீர்வு யோசனை தெற்கின் அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கக் கூடும். அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கவும் கூடும்.

தமது தீர்வு யோசனையை தென்னிலங்கை கடும்போக்கு அரசியல் சக்திகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாததையிட்டும், எதிர்வினைகள் வராததையிட்டும் தமிழ் மக்கள் பேரவை  கூட ஏமாற்றமடைந்திருக்கும். ஏனென்றால், தெற்கின் எதிர்ப்பு வலுவாக இருக்கும் போது, தமிழ் மக்களிடத்தில் அதற்கான ஆதரவு பெருகும் என்பது ஒரு இயல்பான நடத்தை. அத்தகையதொரு வாய்ப்பை, தென்னிலங்கை கடும்போக்கு அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பேரவைக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கவில்லை. ஆனால், வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வு யோசனை, தெற்கின் அத்தகைய அரசியல் சக்திகள் மத்தியிலும், அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வட மாகாணசபை, மக்களால் தெரிவு செய்யப்பட்டது என்ற வகையில், அதற்கு ஒரு பெறுமதி இருக்கிறது. அதனால் தான், தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் ஒருவித பரபரப்பு - அதற்கு அப்பால், ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வு யோசனையை, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்று, சர்வதேச சமூகம் கணித்து விடுமோ என்ற கலக்கம், தெற்கின் எல்லா அரசியல்வாதிகள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

அடுத்தது, பொதுவாகவே, தென்னிலங்கை அரசியல் சக்திகளால், எப்போதும் வெறுக்கப்படுகின்ற சமஷ்டி பற்றி முன்மொழிந்திருக்கிறது இந்த தீர்வு யோசனை. தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் தமிழரசுக் கட்சியைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வட மாகாணசபை, அதனைத் தவிர்த்து ஒரு தீர்வு யோசனையை முன்மொழிந்திருந்தால் தான் ஆச்சரியமானது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், வட மாகாணசபையின் தீர்வு யோசனை, அவர்களால் எப்போதும் வலியுறுத்தப்படுகின்ற விடயங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனால், தெற்கிலுள்ள அரசியல் சக்திகளுக்கு மீண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும், சமஷ்டி முறையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ள யோசனை கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வட மாகாணசபை, ஏதோ தனிநாட்டைப் பிரகடனம் செய்து விட்டது போன்ற சிங்களக் கடும்போக்காளர்கள் கொந்தளிக்கிறார்கள். சமஷ்டி என்பது, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஒரு ஆட்சிமுறை. அதுபற்றி வட மாகாணசபையில் பேசுவது, தீர்மானம் நிறைவேற்றுவது எல்லாம் அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்று கொந்தளிக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிகளால் நிரம்பியிருக்கிறது தெற்கு அரசியல் களம்.

சமஷ்டி ஆட்சி முறையை வெறுக்கின்ற - அதுபற்றிப் பேசுவதை, அதுபற்றித் தீர்மானம் நிறைவேற்றுவதை அரசியலமைப்பு மீறலாக கூறுகின்ற தெற்கின் அரசியல் சக்திகள், இத்தகைய ஆட்சிமுறை நிலவும் நாடுகளுடன் நட்புறவை வைத்துக் கொள்ளமாட்டோம் என்பது போன்ற விந்தையான முடிவுகளை எடுத்தால் கூட ஆச்சரியப்பட முடியாது. சமஷ்டிக்கும் பிரிவினைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் போன்று நாடகமாடும், தெற்கின் அரசியல் சக்திகள், இதனை வைத்து தமது அரசியல் இலாபங்களை அடைவதற்கே எத்தனிக்கிறார்கள். இந்த விடயத்தில், ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்று எந்த வேறுபாடும் கிடையாது. தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக் கொள்ளும் இடதுசாரிகள் தான், சமஷ்டிக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி மூலமே, தீர்வு காண முடியும் என்று இவர்கள் இன்னமும் நம்புவது வேடிக்கை. ஒற்றையாட்சி அரசியலமைப்புத் தான் கடந்த 1948ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் நடைமுறையில் இருக்கிறது. இந்தளவு காலத்தில், தமிழர்களின் பிரச்சினையை ஒற்றையாட்சி முறையினால் தீர்க்க முடிந்ததா, இனப்பிரச்சினையை கூர்மைப்படுத்தி, நெடியதொரு போருக்குள் நாட்டைத் தள்ளிவிட்டது ஒற்iயாட்சி முறை தான். பேரழிவுகளை எல்லா இனங்களும் நாடும் சந்திப்பதற்குக் காரணமானது ஒற்றையாட்சி முறை தான்.

இதற்குப் பின்னரும், ஒற்றையாட்சி முறைக்குள் தான் தீர்வு என்று அடம்பிடிப்பது தான் வேடிக்கையான விடயம். சமஷ்டி ஆட்சி முறையிலாவது பிரச்சினை தீர்க்கப்படுகிறதா என்று பார்ப்போம் என்று முற்போக்குடன் சிந்திக்கும் தலைவர்கள் எவரையும் தெற்கு அரசியல் களத்தில் காண முடியவில்லை. சமஷ்டியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்காது என்றும் அதுபற்றிய பேச்சுக்களையும் நடத்தாது என்றும், அந்தக் கட்சியின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில், வட மாகாணசபையின் இந்த யோசனை விளையாட்டுத்தனமானது என்றும், அனுபவமற்றவர்களின் செயல் என்றும் விமர்சித்திருக்கிறார். ஐ.தே.கவைச் சேர்ந்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ.

இந்த இரண்டு கட்சிகளில் இருந்தும் சமஷ்டி ஆட்சிமுறையை நிராகரிக்கும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இரண்டு கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, மதில்மேல் பூனைகளாக இருக்கின்றனர்.

வட மாகாணசபை முன்வைத்திருக்கும் சமஷ்டி யோசனைக்கே தெற்கின் அரசியல் சக்திகள் இந்தளவுக்கு கொதித்தெழுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை தீர்வாக முன்வைத்தால், அதனை அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது. தமிழர்களின் பிரச்சினையை ஏதோ, சுண்டைக்காயையோ சுரைக்காயையோ கொடுத்துத் தீர்த்து விடலாம் என்று சிங்கள அரசியல் தலைமைகள் இன்னமும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சமஷ்டிக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகளில் இருந்து உணர முடிகிறது.

இரா.சம்பந்தன், சுமந்திரன் போன்ற கூட்டமைப்பின் தலைவர்கள், தெற்கின் அரசியல் சூழலைக் குழப்பாமல், அவர்களின் எதிர்ப்பை கிளப்பாமல் அரசியல்தீர்வு ஒன்றை எட்ட முயற்சித்தாலும், அவர்களின் இலக்கும் சமஷ்டி தீர்வு ஒன்றை எட்டுவது தான் என்பதில் சந்தேகமில்லை. அண்மையில், வட மாகாணத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இரா.சம்பந்தன், சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றையே வலியுறுத்துவோம் என்றும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த தீர்வுக்கும் இணங்கமாட்டோம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். எனவே சம்பந்தனையோ, வேறு எந்த தலைவர்களையோ வளைத்துப் போட்டு அரைவேக்காட்டு அரசியல்தீர்வு ஒன்றுக்கு இணங்க வைக்கலாம் என்று சிங்களத் தலைமைகளால் எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத எந்த அரசியல்தீர்வும் நிலையானதல்ல என்பதை சிங்களத் தலைமைகள் புரிந்து கொள்ளாதவரையில் நிலையான அரசியல்தீர்வு சாத்தியமாகப் போவதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈழக்கனவு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார் என்றால், அந்தக் கோரிக்கைக்கு அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று தான் அர்த்தம். அதனைக் கவனத்தில் கொள்ளாமல், எந்தவொரு தீர்வையும் தமிழர்களுக்கும் முன்வைக்காமல், தமிழர்களால் முன்வைக்கப்படும் தீர்வுகளையும் நிராகரிப்பதையே வழக்கமாகக் கொண்டால், ஈழக்கனவு இன்னும் வலுப்பெறுமே தவிர, மறைந்து போகாது.

இன்னமும் போர் வெற்றியின் மிதப்பில் இருக்கும் சிங்களத் தலைமைகளுக்கு இந்த யதார்த்தம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை தான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .