2024 மே 09, வியாழக்கிழமை

மாற்றத்துக்குள்ளாகும் மேட்டுக்குடி அரசியல்

Thipaan   / 2016 மே 01 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பண்டைய காலத்தில், அரசர்கள் தம்முடைய மக்களின் குறைகளைக் கண்டறிவதற்காக இரவுப் பொழுதில் மாறுவேடத்தில் பயணித்ததாக நாம் வரலாற்றினூடு அறிந்திருக்கின்றோம். அதை, சரித்திரப் புத்தகங்களில் அன்றி - அனுபவ ரீதியாக நாம் அனுபவித்த ஞாபகங்கள் இல்லை. ஏனென்றால், முஸ்லிம் சமூகத்துக்குள் அவ்வாறான அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகி இருக்கவில்லை.

ஆரம்பத்தில், முஸ்லிம்களுக்குள் ஒருவித 'தீண்டாமை' அரசியலும் தற்போது 'தலைமைத்துவ மோகம்' அடிப்படையிலான அரசியல் போக்கும் இருப்பதாகச் சொல்ல முடியும். இப்பட்டியலில், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ர‡ப் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சிலபேர் விதிவிலக்காக இருந்திருக்கின்றனர்.

சுதந்திரத்துக்குப் பின்னரான முஸ்லிம் அரசியலில், தென்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகள் முக்கிய இடம் வகித்தனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், பொதுவாக நோக்குகின்ற போது அப்போதைய முஸ்லிம் அரசியல் என்பது, கிழக்குக்கு வெளியே மையங் கொள்வதாகவே இருந்திருக்கின்றது.

அக்காலப்பகுதியில் அரசியல் என்பது, தூய தொழில்வாண்மைத்துவமாகப் பார்க்கப்பட்டது. படித்தவர்கள், சட்ட மேதைகள், பரம்பரை அரசியல்வாதிகள், அரசியலை முறையாகக் கற்றவர்கள் போன்ற தரப்பினரால் - முஸ்லிம் அரசியல் களமும் நிரப்பப்பட்டிருந்தது. பெரிதாகப் படிக்காத ஓரிரு மேதைகளும் அரசியலில் இடம்பிடித்திருந்தனர். அதைவிடுத்து, இன்றிருப்பது போல, ஊழல் பேர்வழிகளும் பணக்காரர்களும் போதைப்பொருள் வியாபாரிகளும் மக்களை விற்றுப் பிழைப்பு நடத்துவோராலும் அப்போதைய தேசிய அரசியல் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

அரசியல் என்பது உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தும் பதவியாக அக்காலத்தில் கருதப்பட்டது. அப்போது தெற்கில் கோலோச்சிக் கொண்டிருந்த அநேக முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக, பல தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களும் றோயல் அல்லது மேட்டுக்குடி அரசியலின் அநேக பண்புகளைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட முடியும். பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட நடத்தைப் போக்குகள், இயல்பான மிடுக்கு, தமது அறிவுபற்றிய இறுமாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அன்றைய தலைவர்கள் தமக்கும் மக்களுக்கும் இடையில் ஓர் இடைவெளியைப் பேணியிருக்கக் கூடும். இது போன்றவற்றை ஒருவித 'அரசியல் தீண்டாமை' என்று ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். ஆனால், இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக இருந்த தலைவர்களும் உள்ளனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சம் என்னவென்றால், அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்று தனி அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. அரசியல் இயக்கங்கள் உருவாகவில்லை. அவ்வாறு உருவாகுவதை, பெருந்தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்பவும் இல்லை. ஆனால், முஸ்லிம் மக்களின் அன்றாட தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கும் தொழில்வாய்ப்பு கிடைத்தது, கல்வி மற்றும் மருத்துவத் துறை அபிவிருத்தி செய்யப்பட்டது. பொதுச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு எல்லாம் நடந்தது. ஆனால், இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமடையத் தொடங்கிய பின், அதாவது

70களின் பிற்பகுதியிலிருந்து, முஸ்லிம்களின் அரசியல் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றுக்கு உள்ளாக நேரிட்டது. தெற்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் அன்றிலிருந்து வேறுபடத் தொடங்கியதாகக் குறிப்பிடலாம். ஆயுத அடக்குமுறைக்குள் சிக்குண்டுள்ள வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களை, தெற்கை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற அல்லது பெரும்பான்மை கட்சிகளில் அங்கம்வகிக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளால் சரியாக கையாள முடியாத ஒருநிலை ஏற்பட்டதெனலாம்.

அப்போதுதான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கம் உருவாகியது. அதன் ஸ்தாபகராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப், நாம் மேற்சொன்ன முஸ்லிம் அரசியலின் பாரம்பரிய பண்பைத் தகர்த்தெறிந்தார் என்று கூறலாம். சாதாரண குடும்பத்தில் இருந்து, தனித்த அரசியல் அடையாளத்தின் ஊடாக வெளிப்பட்ட ஒரு தலைமைத்துவம் என்பதால், அஷ்ரபிடம் இருந்து பல புதிய பண்புகளை முஸ்லிம் மக்கள் கண்டு கொண்டார்கள். அவருடன் இணைந்து 1980களின் பிற்பகுதியில் அரசியல் செய்த ஒரு சிலரும் இந்த குணாதிசியங்களைக் கொண்டிருந்தனர். மக்களுடன் மக்களாக கலக்குமோர் அரசியல் தலைமைத்துவமாக அஷ்ரப் இருந்தார். அவரைச் சந்திக்கச் சென்ற யாரும் வெறுப்புடன் திரும்பி வந்ததாகக் குறிப்பிட முடியாது.

அவரிடம் அரிய பல பண்புகள் இருந்தன. இது அவரது அரசியல் உத்தியாக இருந்தாலும் ஒருவகையான புதிய அரசியல் கலாசாரமாக அது காணப்பட்டது. குறிப்பாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இரண்டு பணிகளுக்கு இடையில், பத்து நிமிடம் நேரம் கிடைத்தாலும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு வாகனத்தைச் செலுத்தி, நோயாளிகளை நலன் விசாரிப்பார். யாராவது தெரிந்தவருக்கு துன்பம் நேர்ந்துவிட்டால் முதல்ஆளாக அவ்வீட்டில் நிற்பார். அத்துடன், கட்சியின் ஒவ்வொரு ஆதரவாளனையும் அறிந்து வைத்திருந்தார். இந்தப் பண்புகளை பின்வந்த மு.கா தலைமை கொண்டிருக்கின்றதா என்பது மிகப் பெரிய வினாவாகும்.

முஸ்லிம் மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான இரும்புத் திரையை உடைத்தவர் அஷ்ரப் என்று சொன்னாலும், சமகாலத்தில் தலைவர்கள் மீது மக்கள் அளவுகடந்த பற்றுதல் வைக்கும் போக்கு அவரில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது எனலாம். தலைமைப் பதவி மீது அவருக்கு மோகம் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து பழகியமையால், சில இந்திய அரசியல்வாதிகள் போன்று உன்னத இடத்தில் வைத்து அஷ்ரப் நோக்கப்பட்டார். அவரது மரணத்துக்குப் பின்னர், அக்கட்சியின் தலைவர் பதவியைக் கேட்டுப்பெற்றுக்கொண்ட ரவூப் ஹக்கீம், மக்களுக்கு மு.கா தலைவர் என்ற ஆளுமையின் மீது இருந்த அளப்பரிய அன்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மு.கா தலைவராக ஹக்கீமும் இதர காங்கிரஸ்களின் தலைவர்களான ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா ஆகியோரும் பரிணாமம் எடுத்த பின்னர்தான் தலைவர்கள் மீதான மோகம் அதிகரிக்கத் தொடங்கியது. தலைவர்களுக்குச் சாதாரணமாக மரியாதை செலுத்தி, கைலாகு கொடுக்கும் முறைமைகளும் பின்னர், அவர்களை ஆரத்தழுவுகின்ற, தோளில் வைத்துக் கொண்டாடுகின்ற நிலைமைகளும்; மாறி, தென்னிந்திய நடிகர்கள் போல அரசியல் தலைவர்களை மக்கள் கையாளத் தொடங்கினார்கள்.

அஷ்ரபுக்கு முன்னரும் முஸ்லிம் அரசியல் ஏதோ ஒருவகையில் சிறப்பாகவே இருந்தது. அவரது காலத்தில் மக்களுடைய காலடிக்குச் சென்று அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைக்கின்ற தலைமைத்துவம் என்பதற்காகவே, மக்கள் அவரைக் கொண்டாடினார்கள். ஆனால், இன்று தலைமைத்துவ மோகத்தின் பால் கட்டுண்டு கிடக்கின்ற ஹக்கீமோ மற்றைய முஸ்லிம் தலைவர்களோ, மக்கள் தம்மை தோள் மீது வைத்துக் கொண்டாட வேண்டுமென்று நினைக்கின்றார்களே தவிர, மக்களின் வீடுதேடிச் சென்று அவர்களுடைய பிரச்சினையைத் தீர்த்து வைக்க, சேவையாற்ற நினைப்பவர்களாக இல்லை. மேட்டுக்குடியில் இருந்து கொண்டு, அவ்வப்போது கீழ்நிலை மக்களை அவ்வப்போது பார்க்கின்ற ஒரு நிலைமையே உள்ளது.

முக்கியமாக, மு.கா தலைவர் இன்னும் மேட்டுக்குடி அரசியலையே செய்து கொண்டிருப்பதாக ஓர் அபிப்பிராயம் இருக்கின்றது. கிழக்கு மாகாணத்துக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில், அவர் எங்க வீட்டுப் பிள்ளையாக உருவெடுத்தாலும் அதன் பின்னர், மாடிவீட்டு மைனர் ஆகிவிடுகின்றார்.

அண்மையில் தேசிய மாநாடு இடம்பெற்ற போது, ஒலுவிலில் கடற்கரையோரமாக நடந்து திரிந்தார், சாதாரண தேநீர்க்கடையில் ஒரு பொதுமகன் போல தேநீரருந்தினார். பிறகு வந்து சாப்பாடு பரிமாறினார். பார்ப்பதற்குச் சந்தோசமாக இருந்தது. ஆனால், எல்லாக் காலத்திலும் மக்களுடன் அந்த நெருக்கத்தைக் காண முடியாது போய்விடுகின்றது. மக்களின் குறைகளை அறிந்து கொள்வதற்கு ஒரு கிரமமான அடிப்படையில் ஹக்கீமோ அவரது பிரதிநிதிகளோ வருவதாக யாரும் கூற முடியாது. கிழக்கில் இருந்து அவரது அமைச்சுக்கு வேலை முடிப்பதற்காக செல்கின்றவர்கள் - எத்தனை பெரிய போராளிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள். இது பற்றிப் பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா இங்கு முக்கியமானவர். அவர், மக்களுக்குத் தேவையான பௌதீக சேவைகளை எல்லாம் செய்தார். அபிவிருத்திகளைக் கொண்டுவந்தார். ஆனால், மக்களுடனான அவரது தொடர்பு வரையறுக்கப்பட்டதாக இருந்தது. அவரைச் சுற்றி எப்போதும் ஒரு வேலியை, அவருக்கு நெருக்கமானவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். அவர் தனது சொந்த ஊரில் இருந்தாலும், மிக முக்கியமான கட்சி ஆதரவாளனால் கூட சந்திக்க முடியாத நிலை காணப்பட்டது. அவரை கொழும்பில் சென்று சந்திப்பது சிரமம் என்றால், ஊரில் வைத்து சந்திப்பது அதைவிடக் கெடுபிடி நிறைந்ததாக இருந்த காலங்களும் உள்ளன. ஆனால், இப்போது நிலைமைகள் மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. ஒரு தோல்விக்குப் பின்னர், அவர் மக்களைச் சந்திப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.

ரிஷாட் பதியுதீன், இப்போது வளர்ந்து வரும் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றார். ஆனால், அவரும் எப்போதாவதுதான் கிழக்கு மக்களைச் சந்திக்க வருகின்றார். வடக்கில் உள்ள மக்களுக்கு அவர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே நியாயமானதும் கூட. ஆனால், கிழக்கிலுள்ள மக்களின் வீடுகளுக்கும் அவர் விஜயம் செய்ய வேண்டும். இதனை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், ஒருவேளை அமைச்சரே ஒரு சாதாரண பொதுமகன் போல கிழக்குக்கு வந்தாலும், இங்கிருக்கும் அவரது இணைப்பாளர்கள், தமது தலைமைத்துவ மோகத்தை காட்டி அந்நிகழ்வை ஒரு தேர்த்திருவிழா ஆக்கி விடுவார்கள் என்பதும் உண்மையே. வடக்கு தவிர, கிழக்கு போன்ற ஏனைய இடங்களில் உள்ள மக்களுக்கும் ரிஷாட்டுக்கும் இடையிலான பிணைப்பு இன்னும் வளர்ச்சியடையவில்லை. அவரால் நியமிக்கப்பட்டுள்ள பிரதேச இணைப்பாளர்களின் பலர் 'அவசரத்தில்' நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை, அவர்களது செயற்பாடுகள் வெளிக்காட்டுகின்றன. 

இருப்பினும், அண்மையில் வடபுல முஸ்லிம்களை சந்திப்பதற்கு, அமைச்சர் ரிஷாட் சென்ற விதம் பரவலாக சிலாகித்துப் பேசப்படுகின்றது. இது நிச்சயமாக அரசியலே என்றாலும், கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட உவமானத்தின் சிறுபரிமாணமாகத் தெரிகின்றது. கடந்த வாரம், ஒரு விடியற்காலை வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் இன்னும் ஓரிருவருடன் வடபுல மக்களைப் பார்க்கச் சென்றிருக்கின்றார் ரிஷாட்.

வெறும் சாறம், ரீ-சேர்ட் அணிந்து சர்வ சாதாரணமாக சென்றிருந்த இவரை வரவேற்பதற்கு, அங்கு மேளதாளங்கள் இல்லை. இந்த வீடியோ காட்சி முன்கூட்டிய திட்டமிடப்பட்டதாக இல்லாதவிடத்து, ரிஷாட்டின் இவ்விஜயம் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

மக்கள் இதனையே இன்று எதிர்பார்த்திருக்கின்றனர். நல்லாட்சி ஏற்பட்டுள்ள நிலையில், எவ்வித பந்தாவும் இன்றி மக்களைத் தேடிச் சென்று, அவர்களது குறைநிறைகளைக் கேட்டு அறிந்து கொள்ளும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது எக்காலத்திலும் மக்களுடன் அரசியல் தலைவர்கள் இரண்டறக் கலந்து சேவையாற்றக் கூடிய, புதியதொரு அரசியல் சூழல் விருத்தி பெற வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X