Gavitha / 2016 மே 03 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இந்தியாவிலிருந்து, 24 அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (03) தாயகம் திரும்பவுள்ளனர்' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தலுடன் இந்த 24 அகதிகளும் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர். இவர்கள் மதுரையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை (ஆது 380) ஊடாக காலை 09.25 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைவர். அவர்களுக்கான பயணப்பொதி அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இவர்களில், 17 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்வதற்காகவே தாயகத்துக்கு வருகின்றனர். தாயகத்துக்கு திரும்பும் அனைத்து அகதிகளுக்கும் வழங்கப்படும் சகல சலுகைகளும் இவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அரசாங்கமானது, இந்தியாவிலிருந்து கட்டம் கட்டமாக, சுயவிருப்பில் இலங்கைக்கு அகதிகளை அழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் அதிகரித்த அகதிகளின் வருகையானது, நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான சமிஞ்சையாக காணப்படுகின்றது' என்று அமைச்சின் செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .