2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ட்ரம்ப் மீதான உச்சக்கட்டத் தாக்குதலை ஆரம்பித்தார் ஹிலாரி

Shanmugan Murugavel   / 2016 மே 05 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது, தனது உச்சக்கட்டத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.

தனது கட்சியின் சார்பில் வேட்பாளராக, இன்னமும் உத்தியோகபூர்வமாக ஹிலாரி அறிவிக்கப்படாவிட்டாலும், வேட்பாளராகத் தெரிவாகுவது, ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இந்நிலையிலேயே, இதுவரை காலமும் மிதமான முறையில் விமர்சனங்களை முன்வைத்துவந்த அவர், தற்போது உச்சக்கட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஊகிக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத நபர்களை விளிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் தளர்வான பீரங்கி என்ற நேரடி அர்த்தத்தைத் தரும் சொற்றொடரைப் பயன்படுத்திய ஹிலாரி கிளின்டன், அவ்வாறான பீரங்கிகள், தவறாகவே சுடுமெனத் தெரிவித்தார்.

'அவர், பெரிய கருத்துகளையும் பெரிய குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார். ஆனால், ஜனாதிபதிப் பதவிக்கு நீங்கள் போட்டியிடும்போது, நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்தார்.

ஹிலாரி கிளின்டனின் இக்கருத்துகளைத் தொடர்ந்து, அவரது பிரசாரக் குழு, அவரது டுவிட்டர் கணக்கினூடாகவும் இணையத்தளத்தினூடாகவும் பேஸ்புக்கினூடாகவும், ட்ரம்ப்புக்கு எதிரான காணொளிகள் இரண்டை வெளியிட்டது.

டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக, குடியரசுக் கட்சியின் பிரபல அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துகளையும், டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளையும் ஒன்றுசேர்த்ததாக, இந்தக் காணொளிகள் அமைந்திருந்தன. இதன்மூலம், ட்ரம்ப் மீதான பிரசாரங்களுக்கு ஹிலாரி தயாராகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளதோடு, இனிவரும் நாட்களில், இது அதிகரிக்குமெனவும் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .