Shanmugan Murugavel / 2016 மே 09 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாகுவார் எனக் கருதப்படும் ஹிலாரி கிளின்டன், தனது எதிரணியினரான குடியரசுக் கட்சியினரால் அணுகப்படுவதாக தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்சிக்குள் அவருக்குக் காணப்படும் எதிர்ப்புக் காரணமாக, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர், அவருக்கு ஆதரவு வழங்க முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, ஜனநாயகக் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் ஆதரவாளர்களைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ள ஹிலாரி கிளின்டன், அதன்போது, தன்னோடு கொள்கைகள் பற்றிக் கலந்துரையாட விரும்பி, பல குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் முன்வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முக்கியஸ்தர்களில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான போல் றையன் இணைந்துள்ளார். குடியரசுக் கட்சியின் சார்பில், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உயர்நிலை அதிகாரியான போல் றையன், வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், தனது பகுதியியிலுள்ள நம்பிக்கையற்றவர்களை வெற்றிகொள்வதற்கு, இன்னும் பணியாற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏழைகளுக்கு எதிரானதாகவும் பணக்காரர்களுக்கு ஆதரவானதாகவும் கருதப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரத்தில், பாரிய மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணக்காரர்களின் வரியை அதிகரிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளமையே, இந்தப் பாரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .