2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

அணியைவிட்டு விலக விரும்பும் நட்சத்திரங்களுக்கு பயிற்றுநர் எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2016 மே 10 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாகத் தெரிவான லெய்செஸ்டர் சிற்றி அணியின் நட்சத்திரங்கள், அவ்வணியிலிருந்து விலகுவது குறித்து, அவ்வணியின் பயிற்றுநர் கிளாடியோ றைனேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது, இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்புகளில் 5,000-1 என்ற மிகக்குறைவான வாய்ப்புகளைக் கொண்டிருந்த லெய்செஸ்டர் அணி, அனைவரும் எதிர்பாராத விதமாகச் சிறப்பாக விளையாடி, கழகத்தின் 132 ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் முதன்முறையாக, சம்பியன்களாகத் தெரிவாகியிருந்தது.

சம்பியன்களாக அவ்வணியை உருவாக்கியமையில், இத்தாலியைச் சேர்ந்த அவ்வணியின் பயிற்றுநரான றைனேரியின் பங்களிப்பு மிக அதிகமாகக் காணப்படுவதோடு, அதற்காக அவர் உலகளவில் புகழை ஈட்டியுள்ளார். ஆனால், சம்பியன்களாக மாறியுள்ள அவ்வணியிலுள்ள வீரர்கள் பலர், பணவசதி அதிகமாமன ஏனைய கழகங்களால் வாங்கப்பட்டுவிடுவர் என்ற அச்சம் காணப்படுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், வெற்றியைக் கொண்டாட விரும்புவதாகவும், அதேநேரத்தில், அணியின் வீரர்கள் அனைவரையும் தன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியுமென எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு தக்கவைப்பது, லெய்செஸ்டர் அணிக்கு முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களைத் தக்கவைப்பது அணிக்கு முக்கியமானது என்பதைப் போல, 'அவர்களுக்கும் இது முக்கியமானது, ஏனெனில், சம்பியன்ஸ் லீக்கைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அணியை விட்டு அவர்கள் செல்வார்களாயின், அவர்களுக்கு அது நல்லதல்ல" என அவர் தெரிவித்தார்.

தனது வீரர்களுக்கு அவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைக்கு மத்தியிலும் அவர், அணியை விட்டு வீரர்கள் வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, அணியை விட்டு விலகும்போது, அவர்கள் முன்னேற்றமடைந்து செல்ல வேண்டுமென்பதே அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

'அவர்கள், இன்னுமோர் ஆண்டு இங்கிருந்து முன்னேறிவிட்டு, அவர்கள் எங்கு விரும்புகிறார்களோ, அங்கெல்லோம் போனார்களெனில், அது சிறப்பானது" என்றார்.

இக்கருத்துகளுக்கு மத்தியிலும், வீரரொருவர், அணியைவிட்டு விலகப் போவதாகத் தன்னிடம் வந்து சொல்வாராயின், அதற்குத் தான் மறுப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X