2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

குண்டு வைத்தாரா கோட்டா?

Thipaan   / 2016 மே 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போரில், அப்படைகள் வெற்றி பெறுவதில் முதன்மையானோர் இருவர் தான், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும். அவர்களிடையே, போர்க் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகக் கீழ்த்தரமானதொரு சொற்போரொன்று, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக, பொலிஸ் அதிரடிப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக, மஹிந்தவின் ஆதரவாளர்கள், அண்மையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகாவிடம் கேட்டுக் கொண்டார். அப்போது தான், இந்தச் சொற்போர் ஆரம்பிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி, கொழும்பில் பித்தளைச் சந்தி என்று பொதுவாக அழைக்கப்படும் இடத்தில் வைத்து, கரும்புலித் தற்கொலைதாரியொருவர், கோட்டாபயவின் வாகனத் தொடரணி மீது தாக்குதலொன்றை மேற்கொண்டார். இது, உண்மையிலேயே புலிகள் செய்தது அல்லவென்றும், மக்கள் மத்தியில் அனுதாபத்தைப் பெறுவதற்காக கோட்டாபயவே அரங்கேற்றினார் என்றும் பொன்சேகா அப்போது கூறினார்.

ஓரிரு தினங்களில், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, கோட்டா வந்திருந்தார். அப்போது ஊடகவியலாளர்கள், பொன்சேகாவின் கூற்றைப் பற்றிக் கோட்டாவிடம் கேட்டபோது, 'இவ்வாறெல்லாம் கூறக் கூடிய ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்த எமக்குத் தான் சாட்டையடி கொடுக்க வேண்டும்' என அவர் பதிலளித்திருந்தார்.

மஹிந்த பதவியல் இருந்த காலத்தில், அவரும் அவரது சகோதரர்களும், தமது எதிரிகள் விடயத்தில் செய்தவை, இப்போது அவர்களையே சுற்றி வருகிறது போலும். பொன்சேகாவுக்கு எதிராக, இராணுவ நீதிமன்றமொன்று நிறுவப்பட்ட போது, அவர் தளபதியாக இருந்த காலத்தில், அவரால் பாதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட போது, ஷிராணியின் தீர்ப்புக்களால் பாதிக்கப்பட்ட, ராஜித சேனாரத்ன மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களும் அக்குழுவில் நியமிக்கபட்டனர்.

அதேபோல், இப்போது மஹிந்தவின் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளிக்கும் பொறுப்பை, மஹிந்தவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொன்சேகாவுக்கே பிரதமர் வழங்கினார்.

மஹிந்தவின் காலத்தில், தொழிற்சங்கவாதிகள், மாணவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட போது, சில சந்தர்ப்பங்களில், அவை பாதிக்கப்பட்டவர்களாலேயே செய்துகொள்ளப்பட்டவை எனக் கூறப்பட்டது. அதேபோல், இப்போது கோட்டா மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது கோட்டாவே என, பொன்சேகா கூறுகிறார்.

இது சந்தோஷப்படக் கூடிய நிலைமையல்ல. ஆனால், ஆட்சி மாறினாலும் இலங்கையின் அரசியலின் நிலைமையே இது எடுத்துக் காட்டுகிறது. பொன்சேகா கூறியதைப் போல், உண்மையிலேயே கோட்டா தாமாகவே, தமக்கு எதிராகக் குண்டுத் தாக்குதல் நாடகமொன்றை அரங்கேற்றியிருக்கலாமா, குண்டு துளைக்காத வாகனமொன்றின் மீது, புலிகள் இவ்வாறான தாக்குதலை நடத்துவதில்லை என்பது, பொன்சேகாவின் ஒரு வாதமாகும். அதேபோல், உண்மையிலேயே புலிகள், கோட்டாவைக் கொலை செய்ய வந்தார்களென்றால், அவர்கள், கோட்டா பயணித்த வாகனத்திலிருந்து 25 மீற்றர் தொலைவிலிருந்து குண்டை வெடிக்கச் செய்திருக்க மாட்டார்கள் என்பது, அவரது மற்றொரு வாதமாகும். அதேவேளை, அன்றையதினம் காஸ் முகமூடியொன்றை (gas mask) ஏன் கோட்டா எடுத்துச் சென்றார் என, பொன்சேகா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குண்டு துளைக்காத வாகனங்கள் மீது, புலிகள் தாக்குதல் நடத்துவதில்லை என்றால், அக்காலத்தில், அவ்வாறான வாகனங்களில் பயணித்த மஹிந்த, கோட்டா மற்றும் பொன்சேகா போன்றோர், தமக்குப் பாதுகாப்பாக, பெரியதொரு படைப் பட்டாளத்தையும் தாம் செல்லும் இடங்களுக்கு ஏன் அழைத்துச் செல்ல வேண்டும், ஏன் அவர்களது குண்டுத் துளைக்காத வாகனங்களோடு, முன் பின் பாதுகாப்பு வாகனங்கள் செல்ல வேண்டும்?

கோட்டாவின் வாகனத்துக்கு 25 மீற்றர் துரத்திலிருந்து குண்டு வெடித்தாலும், புலிகள் அவ்வளவு துரத்தில் இருந்து தான், அந்தக் குண்டை வெடிக்கச் செய்யத் திட்மிருந்தார்களா அல்லது கோட்டாவின் பாதுகாப்பு வாகனங்களின் இடைமறிப்புக் காரணமாக, அவ்வளவு துரத்திலிருந்து குண்டை வெடிக்கச் செய்யத் தாக்குதலை நடத்திய கரும்புலி, நிர்ப்பந்திக்கப்பட்டாரா என்பதை பொன்சேகா எவ்வாறு திட்டவட்டமாகக் கூற முடியும்?

பொன்சேகாவின் வாகனத்துக்கு முன்னால் சென்ற இராணுவ வாகனத்தில் மோதிய உடனேயே குண்டு வெடித்தது. தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய இராணுவ கமாண்டோ படையினர், குண்டை ஏற்றி வந்த முச்சக்கர வண்டியை இடைமறிக்கவில்லை என பொன்சேகா கூற வருகிறாரா? இது, அந்த வீரர்களின் தியாகத்தை அவர்களது தளபதியே மறுப்பதற்குச் சமமாகும்.

கோட்டா ஒரு படை வீரர். மஹிந்த ஓர் அரசியல்வாதி. இது போன்ற நாடகங்கள் மூலம் அனுதாபம் தேடுவதாக இருந்தால், மஹிந்த தான் தேடியிருக்க வேண்டும். ஒரு படை வீரருக்கு, அனுதாபத்தால் பயன்பெற முடியாது. அவ்வாறு பயன்பெற, அவர் அரசியலுக்கு வர வேண்டும். கோட்டா அவ்வாறு அரசியலுக்கு வரவில்லை.

கோட்டாவைத் தாக்கியவர்கள் கரும்புலிகளே என்பது, பின்னர் நடத்திய விசாரணைகள் மூலம் ஊர்ஜிதமாகியிருந்தது. கோட்டா கொலை முயற்சியையும் அதற்கு 8 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற பொன்சேகா கொலை முயற்சியையும், மொரிஸ் என்றழைக்கப்படும் செல்வராஜா கிருபாகரன் என்ற கரும்புலியே வழிநடத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டது.  பொன்சேகாவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் இடையிலான முறுகல், 2010ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல், பொன்சேகா எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி, ராஜபக்ஷ குடும்பத்தைத் தாக்கி வருகிறார். ஆனால், சம்பவம் இடம்பெற்று 10 வருடங்களுக்குப் பின்னரும் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் முறுகல் நிலை உருவாகி, ஆறு வருடங்களுக்குப் பின்னரும் தான் பொன்சேகா கோட்டாவின் இந்த 'திட்டத்தை அம்பலப்படுத்துகிறார்' அவர், ஏன் இதனை முன்னரே கூறவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இதற்கு முன்னர், 1993ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி, புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்றின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்ட போதும் அவரது எதிரிகள், இப்போது பொன்சேகா, கோட்டாவைப் பற்றிக் கூறுவதைப் போல் ஒரு கதையைப் பரப்பி, அவரே அந்தக் குண்டுத் தககுதலை அரங்கேற்றியதாகக் கூறினர்.

பிரேமதாஸவின் நெருங்கிய உதவியாளராக நடித்து வந்த பாபு என்ற கரும்புலியே பிரேமதாஸவைக் கொலை செய்தார். அன்று மே தினமாக இருந்தது. பிரேமதாஸ, சுகததாஸ விளையாட்டு மைதானத்திலிருந்து, கொழும்பு ஆமர் வீதி வரை ஊர்வலத்தில் வருவதும் அங்கு அவர், வீதியோரத்துக்குச் சென்று, ஒரு வெள்ளைக் கைக்குட்டையை விரித்துப் பிடித்துக் கொண்டிருந்ததும் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அதற்கு அடுத்ததாக, அவர் உட்பட பலர், தரையில் வீழ்ந்து கிடப்பது தான் தொhலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட்டது.

அவர், வெள்ளைக் கைக்குட்டையை விரித்துச் சைகை செய்தவுடன், பாபு, குண்டை வெடிக்கச் செய்ததாகவும் ஆனால் அவர், திட்டமிட்டதை விடக் குண்டின் வீச்சு அதிகமாக இருந்ததால், அவர் கொல்லப்பட்டதாகவும் அன்று பிரேமதாஸவைக் கடுமையாக விமர்சித்து, இன்று ஊடக ஆசாரங்களைப் பற்றிப் பெரிதாகப் பேசும் சில ஊடகவியலாளர்களும் எழுதியிருந்தனர்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பிரேமதாஸ, ஊர்வலத்தை விட்டு வீதியோரத்துக்குச் சென்றவுடன், தொலைக்காட்சிக் கமெராக்காரர், தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார். ஆகவே, அதன் பின்னர் பிரேமதாஸ தரையில் வீழ்ந்து கிடந்த காட்சியைத் தான் அவரால் பிடிக்க முடிந்தது. பிரேமதாஸ, கைக்குட்டையை விரித்தவுடன் குண்டு வெடித்திருந்தால் கமெராக்காரரும் கொல்லப்பட்டிருப்பார்.

பொன்சேகாவை, இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தமக்குச் சாட்டையடி கொடுக்க வேண்டும் எனக் கோட்டா கூறுகிறார். அவ்வாறு, அன்று பொன்சேகாவை தளபதியாக நியமிக்காதிருந்தால், இன்னமும் போர் நடந்து கொண்டு தான் இருக்கும். போர் வெற்றிக்கு பொன்சேகாவின் திறமையே காரணம் என கோட்டாவே, Indian Defence Review மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்குக் கூறியிருக்கிறார்.

Indian Defence Review என்ற இந்திய ஊடகத்தின் வி.கே.சஷிகுமார் என்ற ஊடகவியலாளருடன் கோட்டா நடத்திய பேட்டியொன்று, அவ்வூடகத்தில் 2009ஆம் ஆண்டு ஜூலை-செப்டெம்பர் இதழில் வெளியாகி, இலங்கை அரசாங்க இணையத்தளத்திலும்

2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி மறுபிரசுரிக்கப்பட்டு இருந்தது. அதில் பொன்சேகா எவ்வாறு இராணுவத் தளபதியாக நியமிக்கபட்டார் என்று விவரிக்கப்பட்டு இருந்தது.

'உங்களால் வெற்றியடைய முடியுமா என, பொன்சேகாவைச் சந்தித்த கோட்டாபய கேட்டார். போரால் கடும்போக்கை அடைந்திருந்த பொன்சேகா, 'ஆம், ஆனால், எனக்கு வேண்டியவர்களைத் தெரிவு செய்ய நீங்கள் எனக்கு இடமளிக்க வேண்டும்' என்றார். கோட்டாபயவும் மஹிந்தவும் இணங்கினர்'

2009ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றிக் கொண்டதன் பின்னர், போரின் இறுதி வெற்றி உறுதியாகிவிட்டது. அந்த நிலையில், கோட்டா, சுயாதீன தொலைக்காட்சி சேவையுடன், ஜனவரி 15ஆம் திகதி நடத்திய பேட்டியொன்றை ஏனைய பல தொலைக்காட்சிச் சேவைகளும் சமகாலத்தில் ஒளிபரப்பின.

அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

'இலங்கைப் படையினரின் தொழில்சார் தன்மையை, உலகமே பாராட்டுகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீளக்கைப்பற்றிக் கொள்வதில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா ஆற்றிய வகிபங்கின் காரணமாக, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அவரை உலகில் சிறந்த இராணுவத் தளபதி என வர்ணித்துள்ளார். அவரது அனுபவம், அறிவு, அச்சமின்மை மற்றும் வீரம் ஆகிய பண்புகள் இல்லாதிருந்தால் போரின் போது பெற்ற வெற்றிகளை ஒருபோதும் அடைய முடியாது'

உண்மை தான், பொன்சேகா தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், இராணுவத்தில் பல மாற்றங்களைச் செய்தார். அதற்கு முன்னர், ஓரிடத்திலிருந்து புலிகளை விரட்டியடித்த போது, புலிகள் மற்றொரு இடத்தைப் பிடித்துக் கொண்டனர். அந்த இடத்தையும் இராணுவம் கைப்பற்றிக் கொண்ட போது, புலிகள் முதலாவது இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டனர். இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளாக, இரு சாராரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள். பொன்சேகா தான் அதற்கான தீர்வைக் கண்டு பிடித்தார். அவர், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையையும் பொருட்படுத்தாது, இலட்சக் கணக்கில் படைப்பலத்தைப் பெருக்கித் தருமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அதன்படி, பிடித்த இடங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடிந்தது. புதிய இடங்களைப் பிடிக்கவும் முடிந்தது.

அவர் பதவிக்கு வந்தவுடன், உளவுத்துறையைப் பலப்படுத்தினார். ஆழ ஊடுருவும் அணியை மேலும் பலப்படுத்தினார். அது, புலிகளை வெகுவாகப் பலவீனப்படுத்தியது. அவர், புதிய போர்த் தந்திரங்களை உருவாக்கினார். பெரிய அளவிலான படைப் பிரிவுகளை சண்டையில் ஈடுபடுத்தாமல், 8, 10 பேர் கொண்ட சிறிய அணிகளாகச் சென்று, புலிகளின் நிலைகளை அழிக்கும் திட்டத்தை வகுத்தார். இதனால் ஒரே நேரத்தில் பல முனைகளில் பல பிரிவுகளாகத் தாக்குதல்களை நடத்தி, புலிகளை வியக்கவைத்தார்.

அத்தோடு, பாதுகாப்புச் செயலாளர் ஓர் இராணுவ வீரராக இருந்தமையும் அவர், ஜனாதிபதியின் சகோதரராக இருந்தமையும் இராணுவத் தளபதியன் சமகாலத்து தொழில்சார் தோழனாக இருந்தமையும் பொன்சேகாவுக்கு உறுதுணையாக அமைந்தது. அதன் காரணமாக பாதுகாப்புச் செயலாளர் மூலம் ஜனாதிபதியை வற்புறுத்தி, போருக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள அவரால் முடிந்தது.

எனவே, குண்டு நாடகத்தைக் கோட்டா  அரங்கேற்றவும் இல்லை. பொன்சேகா இல்லாமல், புலிகளுக்கு எதிரான போரில் ராஜபக்ஷகள் வெற்றி பெற்றிருக்கவும் முடியாது. இப்போது இருவரும் சிறுவர்களைப் போல் சண்டை பிடிக்கிறார்கள்.

உண்மையாகச் சொல்வதாக இருந்தால் கோட்டாவும் பொன்சேகாவும் தான் போரை வெற்றியை நோக்கிச் செலுத்தினர். இறுதி இரண்டு மாதங்களில் போரை நிறுத்துமாறு உலக நாடுகளிலிருந்து வந்த பாரிய நெருக்குவாரத்தைத் தைரியத்துடன் எதிர்கொண்டமை தான் மஹிந்தவின் பங்கு. இறுதியில் மஹிந்தவுக்கே அந்த வெற்றியின் அரசியல் பயனை அனுபவிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X