2024 மே 03, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துத் தொடரிலிருந்து சமீர வெளியேற்றம்

Thipaan   / 2016 மே 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர, இங்கிலாந்துத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் இலங்கைக்குத் திரும்பவுள்ளார்.

அவரது கீழ் முதுகுப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு மாதங்களுக்கு ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கைக்குத் திரும்பி, அவருக்கான சிகிச்சை தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இவ்வாண்டு ஜூலையில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் சமீர பங்குபற்ற முடியாது போகவுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை, ஸ்கான் பரிசோதனைக்கு சமீர உட்படுத்தப்பட்டதோடு, அதன்போதே அவரது உபாதையின் தீவிரம் உணரப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கெதிரான தொடரில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்ற இலங்கைக் குழாமில், இலங்கையின் தலைமை வேகப்பந்து வீச்சாளராக இருந்த தம்மிக்க பிரசாத் உபாதைக்குள்ளாகி, இலங்கைக்குத் திரும்பிய நிலையில், தற்போது துஷ்மந்த சமீரவும் நாட்டுக்குத் திரும்ப வேண்டியேற்பட்டுள்ளமை, இலங்கை அணிக்கான பாரிய அடியாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இலங்கையின் அண்மைக்கால வேகப்பந்து வீச்சாளர்களில், இளமைத்துடிப்புடன் வேகமாகவும் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசும் பழக்கத்தைக் கொண்ட, 24 வயதான துஷ்மந்த சமீர, அடிக்கடி உபாதைக்குள்ளாகின்றமை, கவனிக்கப்பட வேண்டியதொன்றாக அமைந்துள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில், பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட சமீர, முதலாவது போட்டியின் பின்னரே உபாதைக்குள்ளாகியிருந்தார். தற்போது, 5ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் அவர் மீண்டும் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

இதுவரையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் 9 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 13 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய தலா 10 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீரவுக்குப் பதிலாக, விஷ்வா பெர்ணான்டோ அல்லது கசுன் ராஜித, இலங்கைக் குழாமில் சேர்க்கப்படுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .