2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கடற்படை அதிகாரிக்கு கிழக்கு முதலமைச்சர் வசை மழை (வீடியோ இணைப்பு)

Kanagaraj   / 2016 மே 24 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், கடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித்தீர்த்த சம்பவம் தொடர்பிலான காணொளி, இணையத்தளங்களில் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபமொன்றின் போதே, முதலமைச்சர் இவ்வாறு திட்டித்தீர்த்துள்ளார். அவ்வதிகாரியை, கையை நீட்டி ஏசிய போது, அவருடைய கை, அங்கு நின்றுகொண்டிருந்த மாணவியின் தலையிலும் பட்டுவிடுகின்றது.

திருகோணமலை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணினிப் பிரிவையும் திறந்துவைக்கும் நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியவருகிறது. இது, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ கலந்துகொண்டதோடு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் கலந்துகொண்டார். சிறுவர்களுக்கான புத்தகங்களை விநியோ-கிப்பதற்காக இவர்களிருவரும், மேடையில் காத்துநின்றுள்ளனர்.

இதன்போது, மேடையை நோக்கி முதலமைச்சர் வர, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களும் அவ்விடத்தில் குழுமியுள்ளனர். புத்தகங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் மேடையை நோக்கி வருவதற்கு, ஊடகவியலாளர்கள் தடையாக இருப்பதை அவதானித்த, அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கடற்படை அதிகாரி, அங்கிருந்தோரைப் பார்த்து, வழிவிடுமாறு கேட்டுள்ளார்.

எனினும், புத்தகங்கள் வழங்குவதில் தான் விடுபட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு வழிவிடுமாறும் கோரப்படுவதாகத் தவறாக எண்ணிய முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் திட்டித் தீர்த்துள்ளார்.

'முட்டாளே, இங்கிருந்து வெளியே போ. ஒழுங்குமுறையென்றால் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், வெளியே போ. என்னை நிறுத்துவதற்கு நீ யார்? உனக்கு என்னைப்பற்றி தெரியாது, வாயை மூடு. (ஆளுநரைப் பார்த்து) ஆளுநரான நீங்களும் கூட, ஒழுங்குமுறை என்னவென்று தெரிந்திருக்கவில்லை. மரியாதைக்குரிய தூதுவரை நான் மதிக்கிறேன்.

ஆனால் ஒழுங்குமுறை உள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் ஆளுநரே, ஒழுங்குமுறையென்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்' என, அந்தக் கடற்படை அதிகாரியையும் ஆளுநரையும் பார்த்து, முதலமைச்சர் வசைபாடுவது பதிவாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் கேட்டபோது, குறித்த காணொளியை தான் பார்த்துள்ளதாகவும், ஆனால் அதுகுறித்து முறைப்பாடெதுவும் இதுவரை வந்திருக்கவில்லையெனவும் தெரிவித்ததோடு, முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .