2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'புலிக்கொடி'யை முன்னிறுத்திய சண்டைகள்

Thipaan   / 2016 மே 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் கூர்மையான ஆதாரமாகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைக் கோரும் ஓர்மத்தை ஒருங்கிணைப்பதற்கான புள்ளியாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகும். ஆனால், பிரதான எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு வேறு விடயங்களை சில தரப்புக்கள் முன்கொண்டு செல்ல முற்படுகின்றனவோ என்கிற சந்தேகம் எழுகின்றது. குறிப்பாக, புலிக்கொடியை முன்வைத்து நடத்தப்படுகின்ற அமைப்புக்களுக்கிடையிலான அதிகாரத்துக்கான சண்டைகள், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தி, செயற்பாட்டுத் தளத்தினை வெறுமையாக்கிவிடுமோ என்கிற அச்சத்தின் வழி வருவது அது.

புலிக்கொடியை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களை விரிவாக்கும் களநிலைமை தாயகத்தில் தற்போது இல்லை. அப்படிப்பட்ட நிலையில், புலிக்கொடியை முன்னிறுத்திய செயற்பாடுகள் தாயகத்துக்கு வெளியிலேயே சாத்தியமானவை. ஆனால். அதன் வெளிப்பாடு எவ்வாறான அடையாளங்களோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தாயகத்திலிருக்கின்ற மக்களுக்கு சில எதிர்பார்ப்புக்கள் உண்டு. அது, தமிழ்த் தேசிய அரசியல் நீட்சியில் சில சீரிய வழிகளை நோக்கியதாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் சார்ந்தவை.

மாவீரர் தினமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாதவை. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு எந்தவித அடைவுகள் பற்றியும் யோசிக்க முடியாது. ஆனால், இரண்டுக்கும் இடையில் அடிப்படையில் சில வித்தியாசங்கள் உண்டு. அந்த வித்தியாசங்களை உள்வாங்குவதும் அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியமானது. குறிப்பாக, புலிக்கொடியின் கீழ் மாவீரர் தினம் அடையாளப்படுத்தப்படுவதற்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அடையாளப்படுத்தப்படுவதற்கும் இடையிலான சிக்கல்கள் உணரப்பட வேண்டிவை. அந்தச் சிக்கல்கள் புரிந்து கொள்ளப்படாதவிடத்து, தமிழ் மக்களின் அடைவுகளில் பெரும் பின்னடைவுகள் ஏற்படலாம்.

ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பித்த காலங்களில், அதில் பங்கேற்ற ஒவ்வொரு இயக்கமும் அமைப்பும், தமக்கென கொடி, இலச்சினை உள்ளிட்ட விடயங்களைக் கொண்டிருந்தன. இன்றைக்கும் அவை நீடிக்கின்றன. அந்த வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளும் தமக்கென கொடியை முன்னிறுத்தினார்கள். அதுவே, புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புப் பகுதிகளில் தேசியக்கொடி எனும் வடிவத்தை 1990களுக்குப் பின்னர் பெற்றுக் கொண்டது.

புலிக்கொடியில் ஆரம்பத்தில் இருந்த 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்கிற பகுதியும் நீக்கப்பட்டது. ஆனால், தேசியக்கொடி என்கிற உணர்நிலை என்பது, புலிக்கொடி, தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்ததாகவே அதிகம் இருந்து வந்தது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இறுதி முப்பது வருடங்களில் விடுதலைப் புலிகள் சார்ந்து நீண்டதுவும் அதற்கான காரணமாகும்.

ஆனால், தமிழ் மக்களுக்கு அப்பால், புலிக்கொடி என்கிற விடயம் எவ்வாறு நோக்கப்பட்டது என்கிற விடயம் உற்றுநோக்கப்பட வேண்டியது. ஏனெனில், புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கள், ஆளுகைப் பிரதேசம் என்பன வெளித்தரப்புக்களினால் மக்கள் சார்ந்து நோக்கப்படுவதற்கு அப்பால், புலிகள் என்கிற அமைப்பு சார்ந்தே நோக்கப்பட்டது. புலிக்கொடி என்பது, விடுதலைப் புலிகளின் கொடி என்பதாகவே அடையாளப்படுத்தப்பட்டது. அதுதான், வெளித்தரப்புக்களின் இன்றைய உணர்நிலையுமாகும்.

இறுதி மோதல்களின் போது, தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, புலம்பெயர் தேசங்களில் ஒருங்கிணைந்த மக்கள், புலிக்கொடிகளைத் தாங்கியிருந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக, தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில், புலிகளைக் காப்பாற்றக் கோரியது மாதிரியான அடையாளப்படுத்தல்களைச் செய்ததாக, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அமைப்புக்களும் கூறின.

தமிழ் மக்களும், புலிகளும் வேறல்ல என்பது தமிழ் மக்களின் உணர்நிலை. ஆனால், சர்வதேசம் அப்படியான உணர்நிலையை அல்லது பார்வையைக் கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், புலிகளைக் களத்திலிருந்து அகற்றுவதற்காக ஒருங்கிணைந்தவர்களிடம், புலிக்கொடியை  முன்னிறுத்திக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்கள் எழுச்சி கண்டது எந்தவித கரிசனையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அவ்வாறானதொரு நிலைமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களின் மீதும் சுமத்தப்பட வேண்டியதில்லை.

அதாவது, இறுதி மோதல்களின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை தமிழ் மக்கள் கோரி நின்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களின் மீது புலிகளின் அடையாளம் அவசியமற்றது. அதன்மீது புலிக்கொடி அடையாளம் போர்த்தப்பட வேண்டுமாயின், அதற்கான காலங்களுக்கான காத்திருத்தல்கள் அவசியமானவை.

ஏனெனில், மோதலில் ஈடுபட்ட தரப்புக்கள் என்கிற வகையில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும், அங்கு நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு உண்டு என்று சர்வதேச நியமங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட நிலையில், இறுதி மோதல்களின் பலிவாங்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி, விடுதலைப் புலிகள் என்கிற அடையாளப்படுத்தல்களினால் தவிர்க்கப்படும் வாய்ப்புக்களை உருவாக்கும். ஆகவே, தற்போதைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் மீது புலிக்கொடி போர்த்தப்பட வேண்டியதில்லை. இது, உணர்வு ரீதியாக சில ஏமாற்றங்களைத் தர வல்லதுதான். ஆனால், சில அடைவுகளுக்காக சிலவற்றை சில காலத்துக்கு தவிர்ப்பதுவும் அரசியல் போராட்ட வழிமுறைகளே என்று கருதிக்கொள்ளப்பட வேண்டும்.

மாவீரர் தினம் என்பது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்கான தினம். அங்கு புலிக்கொடி அடையாளம் அவசியமானது. அது, சிக்கல்களை ஏற்படுத்தாது. புலிக்கொடி ஏற்றுதலையும் போர்த்துகையையும் அனுமதிக்கும் பிராந்தியங்களில், மாவீரர் தினம் அந்த அடையாளத்தோடு முன்னெடுக்கப்பட வேண்டியதுதான் அவசியமானது.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, மாவீரர் தினத்துக்காக புலம்பெயர் தேசங்களில் ஒருங்கிணையும் மக்கள் தொகைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஒருங்கிணையும் மக்கள் தொகைக்கும் இடையிலான பாரிய இடைவெளி சார்ந்தது அது. மாவீரர் தினத்தில் பல்லாயிரக்கணக்கில் ஒருங்கிணையும் மக்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் நூற்றுக்கணக்கில் மாத்திரம் ஒருங்கிணைவதற்கான காரணம் என்ன?

தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை பாரிய தோல்வியொன்றின் கணமாகக் கருதிக் கொண்டே அணுகுகின்றார்கள். அதில், குறிப்பிட்டளவு உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால், அது இறுதித் தோல்வி என்கிற உணர்நிலைக்குள் சென்று சேர்வது அச்சுறுத்தலானது.

ஏனெனில், முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து முன்னோக்கி பயணிப்பதற்கான பெரும் உழைப்பினையும் அர்ப்பணிப்பினையும், தமிழ்த் தேசிய அரசியல் வேண்டி நிற்கின்ற தருணம் இது. அப்படிப்பட்ட நிலையில், முள்ளிவாய்க்காலை மீள் எழுச்சியின் களம் எனும் உணர்நிலையை தமிழ் மக்கள் பெறுவதற்கான செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்தக் கருமங்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாறாக, அதிகாரத்துக்கான சண்டையில் மக்களை அலைக்கழிக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் தாண்டி, புலிக்கொடியின் கீழ் தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்ச்சியான அடையாளப்படுத்தல்களைப் பெற வேண்டுமாயின், தமிழ் மக்களும் அமைப்புக்களும் நீண்ட உரையாடல்களையும் விட்டுக்கொடுத்தல்களையும் மன்னிப்புக்கோருதல்களையும் மறத்தல்களையும், தமக்கிடையில் செய்ய வேண்டும். ஏனெனில், ஆயுதப் போராட்டங்கள் உள்ளிட்ட அரசியல் போராட்டங்களில் தம்மை அர்ப்பணித்து உயிர்நீத்தவர்களை, ஓர் இயக்க அடையாளம் சாராமல் தேசிய வீரர்களாக உணர்ந்து, புலிக்கொடியைத் தேசியக் கொடியாக முன்னிறுத்துவதற்கான தருணம் என்பது, கனிவதற்கான காலத்தின் பக்கத்தில் நாம் இன்னும் நெருக்கமாக நகர வேண்டும்.

அதாவது, விடுதலைப் புலிகளினால் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக இருந்த, பல முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்கள்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டமை மாதிரியானது அது. அங்கு, புலிகளுக்கும், புலிகளோடு ஒன்றினைந்தவர்களுக்கும் இடையில் பரஸ்பரம் மனிப்புக் கோருதல்களும், மறத்தல்களும் இருந்தன. அதனை, வெளிப்படையாக செய்யவில்லை என்றாலும், புலிகளும் மற்றைய இயக்கங்களும் தமக்கிடையில் அரசியல் காரணங்களுக்காகவேனும் செய்து கொண்டன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

போராடுகின்ற ஓர் இனம், தன்னுடைய விடுதலையின் அடையாளமாகக் கொடியொன்றை முன்னிறுத்துவது இயல்பானது. அதன்போக்கில் புலிக்கொடியை, தமிழ் மக்கள் முன்னிறுத்துவது அடிப்படை உரிமைகள் சார்ந்ததுதான். அது, சர்வதேச நியமங்களுக்குள்ளும் உள்ளடங்கும்.

ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் சார்ந்து புலிக்கொடி மீது விழுந்திருக்கின்ற சில அடையாளங்களைக் கழைத்து, தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அடையாளமாகக் கொண்டு சேர்ப்பதற்கான பயணமும் நீண்ட தூரம் கொண்டது. அது, சில விவாதங்களோடும் தொலைக்காட்சிச் சண்டைகளோடும் நிகழ்ந்துவிடக் கூடியது அல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .