2024 மே 02, வியாழக்கிழமை

சமீரவுக்குப் பதில் புதுமுக வீரர்

Shanmugan Murugavel   / 2016 மே 25 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியின் பின்னர் காயமடைந்து இலங்கைக்குத் திரும்பியுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்குப் பதில், பெரியளவில் அறியப்பட்டிருக்காத வீரரான சமிந்த பண்டார சேர்க்கப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சமிந்த பண்டார, இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடுபவராவார். அவருக்கு 29 வயதாகும்.

காயமடைந்த சமீரவுக்குப் பதிலாக, இங்கிலாந்துத் தொடருக்கான உத்தேச 20 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்த கசுன் ராஜித அல்லது விஷ்வா பெர்ணான்டோவே தெரிவுசெய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சனத் ஜெயசூரிய தலைமையில் ஒன்றுகூடிய தேர்வாளர்கள் குழு, சமிந்த பண்டாரவைத் தெரிவுசெய்துள்ளனர்.

இதுவரை 51 முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள சமிந்த பண்டார, 29.85 என்ற சராசரியில் 141 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இனிங்ஸொன்றில் அவர் பெற்றுக்கொண்ட 68 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற பெறுமதி, அவர் இறுதியாக இவ்வாண்டு மார்ச் மாதத்தில் விளையாடிய போட்டியில் பெறப்பட்டதாகும். அவரது இறுதி 3 போட்டிகளில், 2 தடவைகள் 5 விக்கெட் பெறுதிகளைக் கைப்பற்றியுள்ள அவர், 24 விக்கெட்டுகளை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளார். அத்தோடு, இப்பருவகால முதற்தரப் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் 15 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளர் இவராவார்.

தற்போது இங்கிலாந்தில் அவர் கழக மட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் நிலையில், அவரை அணியில் இணைப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .