2024 மே 11, சனிக்கிழமை

யதார்த்தவாதிகளின் உலகம்

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

'யதார்த்தவாதி வெகுஜன விரோதி' என்கிற பழமொழி பொதுவானது. ஆனாலும், ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பழமொழி மிக நன்றாகப் பொருந்தும். உண்மையை பேசும்போதும் எழுதும்போதும் ஓர் ஊடகவியலாளன் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் ஏராளமானவை. அதிலும் அதிகாரத்தினையும் ஆயுதங்களையும் சுமந்து கொண்டிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள், ஒரு கட்டத்தில் உயிர் ஆபத்தைக் கூட எதிர்கொள்ள நேரிடுகின்றனர்.

தனது ஊடகச் செயற்பாட்டுக்காக இந்தக் கட்டுரை எழுதப்படும்போது, உலகில் பலி கொள்ளப்பட்ட இறுதி நபர் சாஹர் அல் சுர்கத். சிரியாவைச் சேர்ந்த இவர் துருக்கியில் வைத்து, முகத்தை மறைத்துக் கொண்டுவந்த துப்பாக்கிதாரியால் தலையில் சுடப்பட்டுப் பலியானார்.

'ஹலப் ருடே' என்கிற தொலைக்காட்சியில் சாஹர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். ஹலப் என்பது சிரியாவிலுள்ள மிகப்பெரிய நகராகும். மேற்படி தொலைக்காட்சியில் சாஹர் வழங்கிய 'தீக் கோடுகள்' என்கிற நிகழ்சி முக்கியமானது. சிரியாவில் இடம்பெறும் ஆயுத மோதல்கள் தொடர்பான வாதப் பிரதிவாதங்களை அந்த நிகழ்ச்சி முன்வைத்து வந்தது. மேலும் 'அகழிகளிலிருந்து: ஜிஹாத் எனும் கருத்தியல்' என்கிற நிகழ்ச்சியொன்றையும் அவர் தயாரித்து வழங்கினார். இவை தவிர, இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காகப் போராடும் ஆயுதக் குழுக்களின் தலைவர்களையும் அவர் பேட்டி கண்டு ஒளிபரப்பி வந்தார்.

சாஹருக்கு 36 வயதே ஆகிறது. கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி தென் துருக்கியின் கெய்சன்ரீப் நகர வீதியால் சாஹர் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து கொண்டுவந்த ஒருவன், சாஹரை மிக நெருங்கி தனது கையிலிருந்த துப்பாக்கியால் சாஹரின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பி ஓடினான். துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் சாஹர் அனுமதிக்கப்பட்டார். ஆயினும், சிகிச்சைகள் பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் ஏப்ரல் 12ஆம் திகதி  அவர் உயிரிழந்தார்.

சாஹர் சுடப்பட்ட மறுதினம் ஏப்ரல் 11ஆம் திகதி, அவர் மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் சாஹரின் வேலைக்கான பதிலடியாகவே,  அவர் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

சாஹர், ஒரு முன்னாள் ஆயுதப் போராளி. சில வருடங்களுக்கு முன்னர் சிரிய ஆயுதக்குழு ஒன்றில் இணைந்து செயற்பட்டுவந்தார். இந்த நிலையில், 2013ஆம் ஆண்டு சாஹர் இருந்த சிரிய நகரை ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பு கைப்பற்றியதை அடுத்து, அவர்  ஆயுத இயக்கத்திலிருந்து விலகி 'ஹலப் ருடே' என்கிற தொலைக்காட்சியில் இணைந்துகொண்டார். பின்னர் 2015ஆம் ஆண்டு  அவர் துருக்கிக்கு இடம்பெயர்ந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர், துருக்கியில் வைத்து சிரியாவைச் சேர்ந்த 04 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சாஹர் அல் சுர்கத் நான்காவது நபராவார்.

ஏற்கெனவே, 'ஹலப் ருடே' தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவரை 2015ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்திக் கொன்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 'ஹலப் ருடே' தொலைக்காட்சியின் ஒளிபரப்பாளரான ஹுமாம் நஜ்ஜார் என்கிற ஊடகவியலாளர் கார் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

இவ்வாறு ஊடகத்துறையில் இணைந்து செயற்பட்ட காரணத்துக்காக தமது உயிரைப் பலி கொடுத்தவர்களின் எண்ணிக்கை ஏராளமாகும். இந்த வருடம் ஜனவரி தொடக்கம் மே 25ஆம் திகதிவரை மட்டும் 16 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கான நோக்கம் அறியப்பட்டுள்ளன. 06 பேரின் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த ஆண்டு முதன்முதலில் இரண்டு ஊடகவியலாளர்கள் ஒரே இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஜனவரி 12ஆம் திகதி ஈராக்கின் பகுபா நகரின் தியலா மாகாணத்தில் சைப் தலால் மற்றும் ஹசன் அல் அன்பகி ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அடையாளம் தெரியாத ஒரு துப்பாக்கிதாரி, அவர்களின் வாகனத்தை மறித்து அவர்களை வாகனத்திலிருந்து வெளியேற்றினான். பின்னர், சரமாரியாக அவன் சுட்டதில், குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் பலியாகினர்.

இப்படி பலி கொள்ளப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியல் மிக நீண்டதாகும். 1992ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை 1,190 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது. இவர்களில் மிக அதிகமானோர் (174 பேர்) ஈராக்கில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 16 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

கொலைகாரர்களுக்கு ஆண் - பெண் என்கிற பேதங்களில்லை. தங்கள் மோசடிகளையும் தவறுகளையும் யார் அம்பலப்படுத்தினாலும், அவர்களை தமது எதிராளிகளாகவே கொலையாளிகள் பார்க்கின்றார்கள். 1992ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேற்றைய தினம்வரை கொலைப்பட்ட 1190 ஊடகவியலாளர்களில் 80 பேர் பெண்களாவர்.

மரியா ஜோஸ் பிறாவோ, இவ்வாறு கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளர்களில் ஒருவர். 2004ஆம் ஆண்டு இறக்கும்போது அவருக்கு 26 வயது. நிகரகுவா நாட்டைச் சேர்ந்த அவர், பத்திரிகையாளராகக் கடமையாற்றினார். தேர்தல் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் வந்த கொலையாளி, அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டான். உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், பிறாவோ இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

தனது ஊடகப் பணிக்காக உயிரைப் பலி கொடுத்த மற்றொரு பெண் அன்னா பொலிற்கொவ்ஸ்கயா என்கிற ரஷ்ய நாட்டு பத்திரிகையாளர். அப்போது அன்னாவுக்கு 48 வயதே ஆகியிருந்தது.

ரஷ்யாவின் நொவாயா கசற்றா என்கிற பத்திரிகையில் புலனாய்வுச் செய்தியாளராக அன்னா பணியாற்றி வந்தார். மட்டுமன்றி, மேலும் பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் செய்திகளை வழங்கி வந்தார். இவ்வாறானதொரு நிலையில், 2006 ஒக்டோபர் 07ஆம் திகதியன்று துப்பாக்கிதாரி ஒருவனால் அன்னா சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட இடத்தில் பிஸ்டல் ரக துப்பாக்கிக்கான 04 தோட்டாக் கோதுகள் கண்டெடுக்கப்பட்டன.

செச்னியாவில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அடிக்கடி அன்னா எழுதி வந்தார். அன்னாவின் எழுத்துகள் ரஷ்ய ஆட்சியாளர்களைப் கோபப்படுத்தியது. அன்னாவின் எழுத்துகள் காரணமாக அவர் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். மட்டுமன்றி, அன்னா ஒரு முறை நஞ்சூட்டப்பட்டார். இவை எதற்கும் அச்சப்படாமல் அன்னா தொடர்ந்து எழுதி வந்தார். அதனால், அவரைக் கொன்றுவிடுவதே அவரின் எழுத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி முடிவாகத் தெரிந்தது. அதை அவர்கள் செய்து முடித்தார்கள்.

இந்த இடத்தில் நற்றாலியா எஸ்ரிமிரோவா பற்றியும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அன்னா பணியாற்றிய நொவாயா கசற்றா என்கிற ரஷ்ய நாட்டுப் பத்திரிகையில்தான் இவரும் பணியாற்றி வந்தார். 2009ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் திகதியன்று, தனது வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்படுவதற்காக நற்றாலியா வெளியே வந்தபோது, நான்கு பேரைக் கொண்ட ஒரு குழுவினரால் கார் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டார்.

பின்னர், அதே தினம்  பக்கத்து பிரதேசமொன்றில் நற்றாலியா சடலமாக மீட்கப்பட்டார். நற்றாலியாவின் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன. நற்றாலியாவுக்கு அப்போது 50 வயதாகியிருந்தது.
உலகளவில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் தரவுகளை வைத்து, உலகில் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட 20 நாடுகளின் கொலைப்பட்டியல் ஒன்றினையும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்திலும் சிரியா இரண்டாமிடத்திலும் பிலிப்பீன்ஸ் மூன்றாமிடத்திலும் உள்ளன. ஆஜன்டீனா, சோமாலியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 04, 05, 06, மற்றும் 07ஆவது இடங்களில் உள்ளன. இந்தியா 09ஆவது இடத்திலும் இலங்கை 16ஆவது இடத்திலும்; இருக்கின்றன.

ஊடகவியலாளர்களின் எல்லைகளற்ற அமைப்பானது 180 நாடுகளை, அந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரத்துக்கேற்ப பட்டியலிட்டுள்ளது. இதன்படி உலகில் ஊடக சுதந்திரமுள்ள நாடாக  முதலாது இடத்தில் பின்லாந்து உள்ளது. ஊடக சுதந்திரம் மிகக் குறைந்த நாடாக அல்லது ஊடக அச்சுறுத்தல் அதிகமுள்ள நாடாக எரித்ரியா உள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 141ஆவது இடத்தில் இருக்கிறது.

மேற்படி அமைப்பு 2015ஆம் ஆண்டு வெளியிட்ட 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில், இலங்கை 165ஆவது இடத்தில் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களின் எல்லைகளற்ற அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியல் வெளிப்படுத்தி நிற்கின்றபோதும், இலங்கை பெற்றிருக்கின்ற 'இடம்' மகிழ்ச்சியானதாக இல்லை.

ஊடகவியலாளர்கள் முன்வைக்கின்ற கருத்துகளையும் எழுத்துகளையும் அவற்றினூடாகவே எதிர்கொள்கின்ற ஒரு சமூக மாற்றம் உருவாக வேண்டும். பல தசாப்தங்கள் ஆயுத முரண்பாடுகள் நிலவிய இலங்கை போன்றதொரு நாட்டில், அவ்வாறானதொரு மாற்றத்தினை, நினைத்த மாத்திரத்தில் ஏற்படுத்தி விட முடியாது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்களே, உலகில் மிகப்பெரும் கோழைகளாவர்
   
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .