2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழாராய்ச்சி மாநாட்டில் விழுந்த அடி

Thipaan   / 2016 மே 30 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 42)

இளைஞர்களும் ஆயுதக்குழுக்களும்

1969ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, இளைஞர்களைக் கொண்ட சிறு சிறு விடுதலைக் குழுக்கள் ஆங்காங்கே உருவாகியிருந்தன. சிறிமாவோவின் ஆட்சியின் கீழ் முதலாவது குடியரசு யாப்பு, தரப்படுத்தல் என்பவற்றின் பின், தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட எழுச்சியும், எதிர்ப்புணர்வும் இந்த விடுதலைக் குழுக்களுக்கு வலுச் சேர்த்தன. 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புக்கு, சில தமிழ்த் தலைவர்கள் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அந்தத் தலைவர்களின் சிலரைக் கொல்லும் முயற்சிகள் சில ஆயுதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வி கண்டதாக சில பதிவுகள் உண்டு.

தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய, இந்த விடுதலை வேண்டும் ஆயுதக் குழுக்கள், ஒரு திட்டமிட்ட வகையில் உருவாகியிருக்கவில்லை. ஆங்காங்கே வேறுபட்ட குழுக்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியிருந்தன. இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம் தமிழர்தம் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றை ஆராய்வது அல்ல, மாறாக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான அரசியல் வரலாற்றை மீட்டிப்பார்ப்பதாகும். ஆனால் அந்த அரசியல் வரவாற்றில் ஆயுதப் போராட்டத்தின் பங்களிப்பை நாம் கருத்திற்கொள்வது அவசியம்.

1972இன் பின், தமிழ் இளைஞர்கள், கிராம மட்டத்திலான சிறு கூட்டங்களை நடாத்தத் தொடங்கினர். இந்தக் கூட்டங்களில் விடுதலை வேட்கைக்கான குரல் முன்னிறுத்தப்பட்டது. அத்தகைய கூட்டங்களில் காசி ஆனந்தன் போன்ற உணர்ச்சிமிகு பேச்சாளர்கள், அன்று சிறிமாவோவின் ஆதரவாளராக இருந்த அல்ப்ரட் துரையப்பா, அருளம்பலம், சுப்ரமணியம் ஆகியோரைத் தமிழினத் துரோகிகள் என பகிரங்கமாக முத்திரைகுத்தியதுடன், அவர்கள் இயற்கையாகவோ, விபத்தொன்றின் மூலமோ மரணமடையத் தகுதியற்றவர்கள்.

அவர்கள் எப்படி மரணிக்க வேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற பாணியில் பேசினார்கள். இது அன்றைய தமிழ் அரசியல் பரப்பில் புதிய பாணி. 'துரோகி' முத்திரைக் கலாசாரம் தமிழர் அரசியலுக்கு புதியதல்ல ஆனால் 'துரோகிகள் கொல்லப்பட வேண்டும்' என்ற வன்முறைச்சிந்தனை தமிழர் அரசியலுள் புதிதாக நுழைந்திருந்தது. இதற்கு தமிழரசுக் கட்சியும் தமிழர் ஐக்கிய முன்னணியும் முக்கிய காரணம். இவை தமது அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துடையவர்களை 'தமிழினத் துரோகிகளாக', 'தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாக' சித்திரித்தன. இதுவும் தமிழ் இளைஞர்களிடையே குறித்த நபர்கள் மீது அதீத வெறுப்புத் தோன்ற முக்கிய காரணமாகும்.

ஆனால், தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பாதையைத் தேடியமைக்குத் தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களும் முக்கிய காரணமாகும். ஜீ.ஜீ.பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம் போன்ற தலைவர்களின் தீர்வு முயற்சிகள் தோல்வி கண்டதன் அல்லது அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டதன் விளைவுதான், இன்று தமிழ் இளைஞர்களை, மற்றவரையும் அதனுடன் சேர்த்து தம்மையும் அழிக்கவல்ல வன்முறைப் பாதையொன்றை நோக்கி அழைத்து வந்தது. அடுத்த மூன்று தசாப்தங்களில் இலங்கையில் பாய்ந்த இரத்த வெள்ளத்துக்கு இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் தலைமைகளுமேதான் பொறுப்பாளிகள்.

இந்த இளைஞர்கள் கூட்டங்கள் அதிகளவில் நடைபெறத் தொடங்கின. இது இலங்கை அரசாங்கத்துக்கு அச்ச உணர்வுமிக்க ஒரு சவாலாக இருந்தது. ஜே.வி.பி-யின் புரட்சியிலிருந்து, இளைஞர்களின் ஆயுதப் புரட்சி பற்றிய அனுபவப் பாடமொன்றை அரசாங்கம் பெற்றிருந்தது. ஆகவே, தமிழ் இளைஞர்களின் எழுச்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கிருந்தது. 1973 முதல் 1976க்குள், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் அன்றைய தமிழ் இளைஞர் முன்னணியின் செயலாளரான சோமசுந்தரம் 'மாவை' சேனாதிராஜா, காசி ஆனந்தன், ஈ.எஸ். 'பேபி' சுப்ரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

1960களின் பிற்பகுதியிலிருந்து குட்டிமணி எனப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரன், நடராஜா தங்கதுரை, கண்ணாடி எனப்பட்ட செல்லையா பத்மநாதன், செட்டி எனப்பட்ட செல்லையா தனபாலசிங்கம், பெரிய சோதி, வேலுப்பிள்ளை பிரபாகரன், ஸ்ரீ சபாரட்ணம், பொன்னுத்துரை சிவகுமாரன் போன்ற இளைஞர்கள் ஆயுதக்குழுக்களாக உருவாகத்தொடங்கியிருந்தனர். இந்த இளைஞர்கள்தான், தமிழர்களின் எதிர்கால அரசியலின் கொண்டு நடத்துபவர்களாக இருப்பார்கள் என்பதை அன்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966இல் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்றது. அன்றைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆரம்பித்து வைத்த மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்களும், அதிதிகளும் கலந்துகொண்டனர். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உருவாக்கியதில் முன்னின்று உழைத்தவர், இலங்கையின் புகழ்பூத்த தமிழ் அறிஞர் வண. சேவியர் தனிநாயகம் ஆவார். இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968ஆம் ஆண்டு ஜனவரியில் மதராஸ் (சென்னை), இந்தியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு அன்றைய இந்திய குடியரசுத் தலைவர்

ஸாகிர் ஹுசைனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970இல் பரிஸ், ‡பிரான்ஸில் இடம்பெற்றது. அம்மாநாட்டின் நிறைவில், நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கையில் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் வண. சேவியர் தனிநாயகம்; உள்ளிட்ட ஒழுங்கமைப்புக் குழுவினர், மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதெனத் தீர்மானித்தனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் மாநாட்டை நடத்துவதை விட தமிழர்கள் நிறைந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தவதுதான் சாலப்பொருத்தமானது என அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு இம்முடிவு மகிழ்ச்சியைத் தரவில்லை. சிறிமாவோ அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஒரேயொரு தமிழ் அமைச்சரான செல்லையா குமாரசூரியர், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஒழுங்கமைப்புக்குழுவினர் இதனை கருத்திற்கொள்ளாது, தமது திட்டத்தின் படி உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த நடடிவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு உதவியையும், ஆதரவையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் அமர்வுகள், 1974 ஜனவரி 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பமாகி, ஜனவரி மாதம் 9ஆம் திகதி நிறைவுற்றன. அறிஞர் பெருமக்களின் கருத்துக்களை வெகுஜனங்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக ஜனவரி மாதம் 10ஆம் திகதி பொது நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அந்நிகழ்வில், தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வந்திருந்த பல அறிஞர்களும் பேசுவதாக இருந்தது. அந்த நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தில் நடப்பதாக இருந்தது.

நிகழ்வினைக் காண பெருந்தொகையான தமிழ் மக்கள் திரண்டிருந்தார்கள். மக்களின் அளவு அதிகரித்தமையால், ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்விளை, வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியில், மண்டப வளாகத்தில் திறந்தவெளி நிகழ்வாக நடத்தினர். தமிழகத்திலிருந்து வந்திருந்த அறிஞர்களின் உரைகளும் அங்கு இடம்பெறவிருந்தது. குறித்த நிகழ்வினை 10ஆம் திகதி நடத்துவதற்கான அனுமதியை மாநாட்டு ஒழுங்கமைப்புக்குழுவின் பிரதானி கலாநிதி மகாதேவா, யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்யட்சகர் சந்திரசேகரவிடம் பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால், இந்தியாவிலிருந்து வந்த அரசியல் பிரமுகர் ஜனார்த்தனன் நிகழ்வில் பேசமுடியாது என்ற நிபந்தனை இருந்தது. ஏற்கெனவே, சிறிமாவோ அரசாங்கம், தமிழாராய்ச்சி மாநாட்டுக்கென தமிழ்நாட்டிலிருந்து வந்த நான்கு பிரமுகர்களை நாட்டினுள் அனுமதிக்காது திருப்பியனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வை யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான திறந்தவெளி அரங்கில் நடத்தவே ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 9ஆம் திகதி மழை பெய்தமையால், நிகழ்வை 10ஆம் திகதி, வீரசிங்கம் மண்டபத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதாலும் மழை பெய்யாததாலும் ஒழுங்கமைப்புக் குழுவினர் நிகழ்வை திறந்தவெளி அரங்குக்கு மாற்ற முடிவெடுத்தனர். அதற்கான அனுமதியைப் பெற அன்றைய நகரபிதாவான அல்‡ப்றட் துரையப்பாவை தொடர்புகொள்ள முயன்ற போது அது சாத்தியப்படவில்லை. அதனால் உடனடியாக வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியில் ஒரு தற்காலிக மேடை அமைக்கப்பட்டு திறந்தவெளி நிகழ்வாக குறித்த நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

ஏறத்தாழ 50,000 பேரளவில் வீதியெங்கும் அமர்ந்து நிகழ்வுகளைக் கண்டதாக கலாநிதி ராஜன் ஹூல் தன்னுடைய 'இலங்கை: அதிகாரத்தின் திமிர்' (ஆங்கிலம்) என்ற நூலில் குறிப்பிடுகிறார். நிகழ்வு குறித்த நாளில் இரவு 8 மணியளவில் ஆரம்பமாகியது. தமிழகத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர் நைனா முகமதுவின் உரையை மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் பொலிஸாரின் அதிரடி ஆரம்பிக்கத் தொடங்கியது. சனத்திரளை நோக்கி வந்த பொலிஸார், மக்களை அடித்துக் கூட்டத்தைக் கலைக்கத் தொடங்கினர்.

கலவரத் தடுப்புப் பொலிஸாரினால் கலவரம் ஒன்று அங்கு உண்டாக்கப்பட்டது. மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடிகள் நடத்தப்பட்டன. வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பொலிஸாரின் வன்முறையில் அப்பாவி மக்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 50 பேர் படுகாயமடைந்தனர். இத்தனை அராஜகமும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் நடந்தேறியது. பொலிஸ் தாக்குதலின் விளைவாக கூட்டம் கலைந்தோடியது. தமிழர் மண்ணில் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் இது.

இது ஏன் நடந்தது என்ற கேள்விக்குத் தெளிவான பதிலில்லை. ஏனென்றால், அன்றை சிறிமாவோ அரசாங்கம் உண்மையைக் கண்டறிய நாட்டங்கொண்டிருக்கவில்லை. தமிழர் ஐக்கிய முன்னணியினர் (தமிழர் விடுதலைக் கூட்டணி) இந்த கலவரத்துக்குக் காரணம் அல்‡ப்றட் துரையப்பா என்று கூறினர். அதேநாள் இரவு, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. அல்ப்றட் துரையப்பா சிறிமாவோ அரசாங்கத்தின் ஆதரவாளராக இருந்தமை, அவர் மீது இந்தப் பழி விழ முக்கிய காரணங்களில் ஒன்று. தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுக்கு, யாழ். நகரபிதா அல்‡ப்றட் துரையாப்பா அழைக்கப்படவில்லை. அதனாலேயே, அவர், பொலிஸாரை ஏவி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் தீயாகப் பரவியது. தமிழர் ஐக்கிய முன்னணி இந்தச் சம்பவத்தைக் கண்டித்ததுடன், இதற்கு அல்‡ப்றட் துரையாப்பாவும் உதவி பொலிஸ் அத்யட்சகர் சந்திரசேகரவுமே காரணம் என்றது. அத்தோடு, இதனை மையப்படுத்தி ஹர்த்தால் போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. கலாநிதி ராஜன் ஹூல் இதனை மக்களின் இறப்பை தமது அரசியலுக்காகப் பயன்படுத்தும் 'பிண அரசியல்' என வர்ணிக்கிறார்.

ஆனால், தமிழ் மக்களின் தாயகத்தின் மத்தியிலே இந்தக் கொடும் வன்முறைச் செயல் இடம்பெற்றதை தமிழ்க் கட்சிகள் கண்டிக்காது விட்டால்தான் அது பிழையாகும். உண்மையில் சிறிமாவோ அரசாங்கம் நியாயமாக நடந்திருந்தால் உடனடியாக ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிந்து இருக்கலாம், ஆனால், சிறிமாவோ அரசாங்கமோ இந்த விடயத்தில் மெத்தனப்போக்கைக் கையாண்டது. அது மட்டுமல்லாது, குறித்த வன்முறையில் ஈடுபட்ட பொலிஸார், சில காலத்திலேயே, தண்டனை பெறுவதற்குப் பதிலாக பதவியுயர்வு பெற்றனர். இப்படிச் செய்ததனூடாக தமிழ் மக்களுக்கு தாம் வழங்கும் இரண்டாந்தர நிலையை சிறிமாவோ அரசாங்கம் சொல்லாமல் சொல்லியது. இது ஏற்கெனவே பிரிவினையையும் ஆயுத வன்முறையையும் வேண்டிய தமிழ் இளைஞர்களுக்கும் மேலும் சினத்தை உருவாக்கியிருக்கும் என்பதே யதார்த்தம். அல்ப்றட் துரையப்பாவுக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த வன்முறைக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை, சம்மந்தமிரப்பதற்கான எந்த ஆதாரமுமில்லை என கலாநிதி ராஜன் ஹூல் வாதிடுகிறார். ஆனால், இதற்கு அல்ப்றட் துரையப்பாதான் காரணம் என்ற பிரசாரத்தினதும் வதந்தியினதும் கனதி, உண்மையை மறைத்துவிட்டது என்கிறார் அவர். இதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அல்‡ப்றட் துரையப்பா மீது கடும் வெறுப்பு உருவாகியிருந்தது.

அடுத்து வரும் வருடங்களில் தமிழ் மக்கள் நிறைய கலவரங்களைச் சந்திக்கவும் நிறைய அடிகளை வாங்கவும் நிறைய இழப்புகளுக்கு ஆளாவதற்கும், இதுவோர் ஆரம்பமாக இருந்தது.

(அடுத்தவாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .