புகைப்பழக்கம் எமக்கு வேண்டாம்
30-05-2016 11:43 AM
Comments - 0       Views - 66

எனதருமை மாணவர்களே, நாளை செவ்வாய்க்கிழமை (31), 'உலக புகையிலை எதிர்ப்பு தினம்' ஆகும். இந்த நாளைப் பற்றிய சிறிய அறிவுறுத்தல் ஒன்றைச் சொல்லப் போகிறேன் கேளுங்கள். நீங்கள் பாடசாலைக்குச் செல்லும் வழியிலோ அல்லது தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதோ, புகைப்பிடிக்கும் காட்சிகளைக் கண்டிருப்பீர்கள். அக்காட்சிகளைப் பார்க்கும் போது, உங்கள் மனங்களில் எவ்வாறான எண்ணங்கள் தோன்றியிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

'புகைப்பழக்கம், உடல்நலத்துக்கு கேடு' எனும் வாசகத்தை வாசித்த அல்லது கேட்ட அனுபவமுள்ள நீங்கள், 'உடல்நலத்துக்கு கேடான விடயத்தை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? புகைப்பது சரியில்லை எனும்போது, இவர்கள் ஏன் புகைக்கிறார்கள்?' என்று நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா?

உண்மையில், உடல்நலத்துக்கு கேடான, சூழலையும் சுற்றியுள்ளோரையும் பாதிக்கும் விடயத்தையே அவர்கள் செய்கிறார்கள். இப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அவர்கள் நன்றாக அறிந்திருந்தும், அவர்கள் அந்தத் தவறைச் செய்கிறார்கள். புகைப்பழக்கம் என்பது, தன்னையும் கொன்றுவிட்டு, தன்னைச் சார்ந்தவர்களையும் கொன்றுவிடக்கூடிய கொடிய பழக்கமாகும். இதன் பிடியில் சிக்குண்டவர்கள், பல்வேறு நோய்களை எதிர்கொண்டு வெகு விரைவிலேயே தங்களுடைய வாழ்வை அழித்துக்கொள்கிறார்கள்.

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் 'புகைத்தல் நல்லது' என்று கூறவில்லை. அண்மையில் வெளியாகியிருந்த ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகளில், புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளின் குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவமனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வானது, குழந்தைகள் மற்றும் இளம் வயதுடையவர்கள், புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது. ஆஸ்துமா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை, இந்தப் புகை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனஇந்த ஆய்வை நிகழ்த்திய டாக்டர் கிம்பர்லி யோல்டன் தெரிவித்துள்ளார்.

நிக்கோட்டினின் இணைப் பொருளான 'கோடினின்' ஆனது, குருதியில் கலந்துள்ள அளவை வைத்தே இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக மற்றுமொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி, வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே. புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களா என்று தெரியவில்லை. ஆதலால் மாணவர்களே, புகைப்பவர்களை நெருங்காதீர்கள். அவ்வாறு புகைப்பவர்கள், புகைத்துக்கொண்டிருக்காத சந்தர்ப்பத்தைப் பார்த்து, அவர்களிடத்தில் தைரியமாகச் சென்று, 'புகைப்பழக்கம் கேடானது, ஆகவே இனியும் புகைக்காதீர்கள். அது உங்களையும் கெட்டு, உங்கள் வீட்டிலுள்ளோரையும் அழித்துவிடும்' என்பதை அன்பாகச் சொல்லுங்கள். அவ்வாறு புகைப்பவர்கள் உங்கள் தந்தையாக இருக்கலாம். பாட்டனாக இருக்கலாம். அல்லது உங்களது சகோதரரோகவோ, உறவினராகவோ, அயலவராகவோ அல்லது வீதியில் செல்லும்போது காணக்கூடியவராகவோ இருக்கலாம். இவர்களில் எவராக இருப்பினும், அவர்களிடத்தில் சென்று இந்த உண்மையைப் புரியவையுங்கள். சுயபுத்தியில் திருந்தாதவர்கள், சொல் புத்தியிலாவது திருந்தட்டும்.

"புகைப்பழக்கம் எமக்கு வேண்டாம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty