2024 மே 02, வியாழக்கிழமை

மலையகத்தில் நிலவுரிமை, வீட்டுரிமைக்கான கோஷம் வலுப்பெற்றுள்ளது

Sudharshini   / 2016 மே 30 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இலங்கையில் 200 வருடகால வரலாறு கொண்ட மலையகத் தமிழ் மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமைக்கான கோஷம் தற்போது வலுப்பெற்றுள்ளமைக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயற்பாடுகளே காரணமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உப-தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பலாங்கொடை, மாரத்தென்ன தோட்டத்தில் தனிவீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மலையகத் தமிழ் சமூகம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. நீண்டகாலமாக எமது சமூகம் அரசியல் அநாதைகளாக இருந்தோம். எமது சமூகத்தை தலைமை வகித்த தலைவர்களால் எமக்கான  உரிமைகள் பெற்றுக் கொடுக்காத வரலாறே உள்ளது. நிலவுரிமை, வீட்டுரிமை குறித்து வலுவான கோஷம் நீண்டகாலமாக முன்வைக்கப்படவில்லை.

தற்போதைய நல்லாட்சியில் இந்தக்கோஷங்கள் வலுப்பெற்று நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் லயன் வாழ்க்கை ஒழிக்கப்பட்டு புதிய கிராமங்களை ஏற்படுத்துவதற்காக மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டு, அந்தப்பொறுப்பு அமைச்சர் திகாம்பரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று தோட்டங்களில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நிதியுதவியில் வீடொன்று கிடைக்குமென்ற நம்பிக்கை எற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை கடந்த காலங்களில் எமது மக்களிடத்தில் காணப்படவில்லை.

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களின் ஏகத் தலைமையாக தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தோட்டத் தொழிலாளர்களை வீதிக்கு இழுக்காமல் தலைமைகள் களத்தில் இறங்கி போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்கின்ற அதேவேளை, கம்பனிக்கெதிரான போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இன்று மலையகத் தமிழ் மக்கள் நலன்சார்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது போல மலையகத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ' என அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .