2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மஹிந்த புறக்கணித்து விட்டார்'

Sudharshini   / 2016 மே 31 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு கொடுக்க வேண்டிய நீதியுடன் கூடிய உரிமையை கொடுக்கத் தவறி விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் 4ஆம் குறிச்சி எல்லை நகர் பகுதியில் திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், 'மஹிந்த யுத்த வெற்றியை மட்டும் சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக்கொண்டு தொடர்ச்சியாக ஆட்சிக் கதிரையில் இருக்கலாம் என்று கனவு கண்டார்.

ஆனால், அது பகல் கனவாக மாறிவிட்டது. எமது சிறுபான்மை மக்களின் வாக்குப்பலமும் நாட்டின் பெரும்பான்மை மக்களின் அரைவாசிக்கு மேற்பட்டோரின் வாக்குப் பலமும் கொடுமை ஆட்சி நடத்திய மஹிந்த அரசை விரட்டியடித்து புதிய நல்லாட்சி என்ற அரசை கொண்டு வந்தது.

ஆனால், புதிய நல்லாட்சி அரசும் மஹிந்தவின் பாணியில் பல முக்கியமான நல்ல வேலைகளை உடனடியாகச் செய்யத் தவறி விட்டது.

நாட்டில் ஒரு புதிய அரசு வந்த குறுகிய காலத்தினுள் மாற்றத்தை விரும்பிய நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த நல்லாட்சி அரசும் மக்களுக்கு அதில் பெரிதாக முன்னுரிமை கொடுத்து அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் தமது தேவைகளையும் நீண்டகாலக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களின் தேவைகளையும் குறைபாடுகளையும் முடிந்தளவு  முடித்துத் தருவதற்கு நான் முழு முயற்சி எடுப்பேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .