2026 ஜனவரி 03, சனிக்கிழமை

நமது நாட்டில் 45,900 பேர் நவீன அடிமைகள்

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

நவீன அடிமைகள் தொடர்பான சுட்டியான பூகோள அடிமைத்தனச் சுட்டியை, 'சுதந்திரமாக நடமாடுங்கள்' (Walk Free) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தகவலின்படி, இலங்கையில் 45,900 பேர், நவீனகால அடிமைகள் என்ற வரையறைக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 216 பக்கங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், உலகின் அடிமைச் சந்தை தொடர்பாகவும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அடிமைத்தனமானது, உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான நாடுகளில் சட்டரீதியற்றதாகக் காணப்படுகின்ற போதிலும், அடிமைத்தனத்தின் தாக்கம், இன்னமும் காணப்படுகிறது. உள அல்லது உடல்ரீதியான அச்சுறுத்தல் மூலமாகப் பணியாற்றக் கட்டாயப்படுத்தல், அவ்வாறான அச்சுறுத்தல் மூலமாக உரிமையாளர்ஃ தொழில் வழங்குநரால்  உரிமைப்படுத்தப்படல் அல்லது கட்டுப்படுத்தப்படல், பண்டம் போலப் பயன்படுத்தப்பட்டு விற்றல் அல்லது வாங்குதல், சுதந்திர நடமாட்டத்துக்குத் தடைவிதித்தல் அல்லது உடல்ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், கட்டாயப்படுத்தப்பட்ட திருமணங்கள், சிறுவர் ஊழியம் போன்றன, நவீனகால அடிமைத்தனத்தினை அடையாளங்காண உதவுகின்றன.

இதன்படி, உலகம் முழுவதிலும் 45.8 மில்லியன் பேர், அடிமைகளாகக் காணப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்பட்டுள்ளோரில் பெரும்பான்மையானோர், தங்களுக்கு நன்றாக அறிந்தவராலேயே, அடிமைத் தொழிலுக்குள் கொண்டுசெல்லப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

167 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், 42,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு, அதன் முடிவுகள், அதிர்ச்சிகரமானவையாக அமைந்துள்ளன.

இதன்படி வெளியிடப்பட்டுள்ள சுட்டியின் அடிப்படையில், அடிமைத்தனத்துக்கு ஏதுவான அல்லது அது அதிகம் நிகழும் நாடாக, வடகொரியா அமைந்துள்ளது. அந்நாட்டின் 4.373 சதவீதமானோர், நவீன அடிமைத்தனத்துக்குள் சிக்குண்டுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான், கம்போடியா ஆகியன 2ஆம், 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. நான்காம் இடத்தைப் பிடித்துள்ள இந்தியா, தனது சனத்தொகையில் 1.403 சதவீதமானோரை, நவீன அடிமைத்தனத்துக்குள் கொண்டுள்ளது. எனினும், இந்தியாவின் சனத்தொகை மிக அதிகமானது என்பதால், அந்நாட்டின் 18,354,700 பேர், இவ்வாறு அடிமைகளாக உள்ளரெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிக எண்ணிக்கையான அடிமைகளைக் கொண்ட நாடாக, இந்தியா மாறியுள்ளது.

5ஆவது இடத்தில் கட்டார் காணப்படுவதுடன், 6ஆவது இடத்தை பாகிஸ்தான், கொங்கோ, சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான், யேமன், சிரியா, தென் சூடான், சோமாலியா, லிபியா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகியன பகிர்ந்துகொண்டுள்ளன.
பங்களாதேஷில் 1,531,300 பேர் அடிமைகளாகக் காணப்படுவதுடன், அடிமைச் சுட்டியில் 10ஆவது இடத்தில் காணப்படுகிறது.

சீனாவில் 3,388,400 பேர் அடிமைகளாகக் காணப்படுகின்ற போதிலும், அந்நாட்டின் உயர் சனத்தொகை காரணமாக, 40ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதன்படி, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் மாத்திரம் ஒன்றுசேர்ந்து, உலகில் காணப்படும் மொத்த அடிமைகளில் 58 சதவீதமானோரைக் கொண்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையின் சனத்தொகையில் 0.221 சதவீதமானோர், நவீன அடிமைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்படுவதோடு, நூறில் 36.26 பேர், அடிமைத்தனத்துக்குள் சிக்குவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிமைத்தனத்தை நிறுத்துவதற்கு, அரசாங்கங்கள் எடுக்கும் நடவடிக்கை தொடர்பான தரப்படுத்தலில், இலங்கைக்கு டீ கிடைத்துள்ளது. இது, உயர் நிலையிலிருந்து (AAA) 6ஆவது நிலைத் தரப்படுத்தலாகும். அந்தத் தரப்படுத்தலை விட, CCC, CC, C, D ஆகியன, மோசமான தரப்படுத்தல்களாக உள்ளன.

ஆசியாவிலிருந்தும் சஹாராவுக்கு அண்மையான ஆபிரிக்கப் பிராந்தியங்களிலிருந்தும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்குச் செல்வோர், தொடர்ந்தும் வருந்துவதாகத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உட்படச் சில நாடுகளைச் சேர்ந்த பெண்கள், தனியார் வீடுகளில் வைத்து துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X