2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எல்லோரும் பிழையாக நடந்து கொண்டு ஒருவரையொருவர் குறைகூறுகின்றனர்

Thipaan   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நிகழ்வொன்றின் போது, கடற்படையின் உயர் அதிகாரியொருவரைக் கடுமையான வார்த்தைகளால், பகிரங்கமாகத் திட்டித் தீர்த்தமைக்காக, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சகலரிடமும் அந்தக் கடற்படை அதிகாரியிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதேவேளை, முதலமைச்சருக்கு எதிராக, பாதுகாப்புப் படையினர் விதித்திருந்த 'தடையும்' நீக்கப்பட்டுள்ளது.

இது, அச்சர்ச்சையின் முடிவா அல்லது அது மேலும் தொடருமா என்பதை, இப்போதைக்குக் கூற முடியாது. ஏனெனில், சிறுபான்மையின அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக, போர் பிரகடனப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பத்தை, பேரினவாத அரசியல்வாதிகளும் குழுக்களும் ஊடகங்களும் இலகுவில் கைவிட மாட்டார்கள்.

இப்போது நடந்த சம்பவம், எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்த போதிலும் அதனை ஆராய்வதற்கு வசதியாக அதனை மீண்டும் எடுத்துரைப்பது பொருத்தமாகும். கிண்ணியாவில் நடைபெற்ற ஒரு வைபவத்தில், முதலமைச்சரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்து கொள்கின்றனர். அது முடிவடைந்தவுடன், சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்; கலந்து கொள்வதற்காக, அவர்கள் புறப்படுகின்றனர்.

முதலமைச்சர், இந்தச் சர்ச்சை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பியுள்ள கடிதமொன்றின் படி, இந்த நிகழ்வு சம்பூர் மகா வித்தியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அப்பாடசாலை, கிழக்கு மாகாணத்தின் கீழ் இயங்கும் பாடசாலையொன்றாகும்.

இந்த வைபவத்துக்கு, கிண்ணியாவிலிருந்து ஹெலிகொப்டரிலேயே ஆளுநர் புறப்படுகிறார். முதலமைச்சரும், அதே ஹெலிகொப்டரில் வர விரும்புகிறார். ஆனால், அதில் இடமில்லை என்றும் கிண்ணியா வைபவம் முடிவடையும் முன்னரே, அங்கிருந்து புறப்பட்டு, காரில் சம்பூருக்குச் செல்லுமாறும் ஆளுநர் முதலமைச்சருக்குக் கூறுகிறார்.

ஹெலிகொப்டரில் ஆளுநரும் காரில் முதலமைச்சருமாக, இருவரும் சம்பூருக்கு வந்து சேர்கின்றனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப்பும் அங்கு வருகிறார்;. அங்கு, பாடசாலை வைபவம் ஆரம்பமாகிறது. அப்போது நிகழ்ச்சி அறிவிப்பாளர், ஆளுநரையும் அமெரிக்கத்

தூதுவரையும் மேடைக்கு அழைக்கிறார். முதலமைச்சருக்கு அழைப்பில்லை. ஆனால், மேடைக்கு வருமாறு ஆளுநர், முதலமைச்சருக்குச் சைகை காட்டுகின்றார். அதன் பிரகாரம் முதலமைச்சர் மேடையை நோக்கிச் செல்கிறார். அப்போது அங்கிருந்த கடற்படை உயர் அதிகாரியொருவர் அதனைத் தடுக்கிறார்.

முதலமைச்சர் பொறுமையை இழக்கிறார். 'வெளியே போ' போன்ற கடுமையான வார்த்தைகளால், ஆங்கில மொழியில் அமெரிக்கத் தூதுவர் முன்னிலையிலேயே அந்தக் கடற்படை அதிகாரியை முதலமைச்சர் திட்டித் தீர்க்கிறார். அது சமூக வலைத்தளங்களூடாக உலகமெங்கும் பறக்கிறது. சில பெரும்பான்மையின அமைப்புக்கள்;, முதலமைச்சர், கடற்படை அதிகாரியைச் சாடியதை எதிர்த்து குரல் எழுப்புகின்றன.

சில பௌத்த பிக்குகளும் முதலமைச்சரின் அலுவலகத்துக்குச் சென்று, அவருக்குத் தமது எதிர்ப்பை கடுமையான வார்த்தைகளில் தெரிவிக்கின்றனர். 'எமது' படை வீரர்களை அவமானப்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர்கள் அங்கு மிரட்டலாகக் கூறிவிட்டு வருகின்றனர். அதனையடுத்து, முப்டையினரும் முதலமைச்சருக்கு எதிராக ஒரு தடையை விதிக்கின்றனர்.

அதன்படி, முதலமைச்சர் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் முப்படை அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை என்றும் எக்காரணம் கொண்டும் கடற்படை தளங்களுக்குச் செல்ல முதலமைச்சருக்கு இடமளிப்பதில்லை என்றும் படையினர் முடிவு செய்கின்றனர். இது இலங்கை வரலாற்றில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தொழிற்சங்கப் பாணியிலான நடவடிக்கையாகும்.

சம்பவம் தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்படையினரிடமிருந்தும் முதலமைச்சரிடமிருந்தும் இரண்டு அறிக்கைகளைக் கோருகிறார். ஜீ 7 மாநாடு நடைபெறும் நேரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னால், நாட்டை அசௌகரியத்துக்குள்ளாக்கும் ஏதாவது நோக்கம் இருந்ததா என்பதை ஆராய வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியான மாகாணத்தின் முதலமைச்சரான தாம், இந்நிகழ்ச்சியின் போது அவமானப்படுத்தப்பட்டதனாலேயே, தாம் கடுமையான வார்த்தைகளைப் பாவித்ததாகவும் அது நியாயமாக இருந்த போதிலும் தமது செயலால் மன வேதனை ஏற்பட்டிருப்பின் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட சகலரிடமிருந்தும் தாம் மன்னிப்புக் கேட்பதாகவும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பியுள்ள கடிதமொன்றில் முதலமைச்சர் குறிப்பிடுகிறார்.

அதேவேளை, ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன், முதலமைச்சருக்கு விதித்த தடையை படையினர், கடந்த திங்கட்கிழமை நீக்கிக் கொள்கின்றனர்.

முழுக் கதையையும் பார்க்கும் போது, முதலமைச்சர் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதும் அந்த மனநிலையில் இருந்த முதலமைச்சர், கடற்படை அதிகாரியை அவமானப்படுத்தியிருக்கிறார் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இதைப் பற்றிய ஊடக விமர்சனங்கள் அனைத்துமே, ஒரு பக்கத்தின் அவமானத்தை மட்டும் கண்டு எழுதப்பட்டுள்ளமையும் தெளிவாகத் தெரிகிறது.

சம்பூர் மகா வித்தியாலயம், மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலையாக இருந்தால், அதில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் வெளிநாட்டுத் தூதுவரொருவர், அதிலும் அமெரிக்கத் தூதுவர் கலந்து கொள்வதாக இருந்தால், அந்நிகழ்ச்சியை எவர் ஏற்பாடு செய்தாலும், மாகாண முதலமைச்சர் கட்டாயம் அதற்கு அழைக்கப்பட வேண்டும். அழைக்கப்படவில்லை என்றால், முதலமைச்சர் அங்கே செல்லவும் கூடாது. மாறாக, அவர் அதனை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கையாள வேண்டும்.

ஏனெனில், ஆளுநருக்கு தமது அதிகாரத்தை பாவித்து முதலமைச்சரின் பணிகளை முடக்க முடிந்த போதிலும், அதிகாரப் பரவலாக்கல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றின் பார்வையில், ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரை விட, மக்களின் பிரதிநிதியான முதலமைச்சருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதன்படி, வடக்கு, கிழக்கு தவர்ந்த ஏனைய மாகாணங்களின் ஆளுநர்கள், அபிவிருத்திசார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதேயில்லை.

ஆனால், அந்த மாகாணங்களிலுள்ள மக்கள், ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கலைக் கோரவில்லை. அதிகாரப் பரவலாக்கலைக் கோரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரை பொருட்படுத்தவதில்லை. முதலமைச்சர்களும், அதிகாரப் பரவலாக்கலின் வரம்புகளைத் தாம் மீறுவதில்லை என்ற உத்தரவாதத்தை எப்போதும் வழங்க வேண்டும்.

கிழக்கு முதலமைச்சர், சம்பூர் மகா வித்தியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தால் அவர் காரில் போவதா ஹெலிகொப்டரில் போவதா என்று, தமது பயணத்தை ஏற்கெனவே திட்டமிட்டிருக்க வேண்டும். இடைநடுவில் ஹெலிகொப்டரில் செல்ல நினைப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியதே.

ஆளுநர், ஏற்கெனவே ஹெலிகொப்டரை ஏற்பாடு செய்திருந்தால், அவர், முதலமைச்சரை மதித்து அவரையும் அதில் அழைத்துச் செல்வது பெருந்தன்மையும் ஒரு வகையில் கடமையுமாகும். ஏனெனில், கிண்ணியாவிலிருந்து ஹெலிகொப்டரில் சம்பூக்குச் செல்லவிருந்த அனைவரும், முதலமைச்சரை விட உயர்ந்த அந்தஸ்த்துள்ளவர்கள் அல்ல. ஆயினும், அவர் அவ்வாறு அழைத்தால் மட்டும் முதலமைச்சரும் அதில் சென்றிருக்கலாம். அவ்வாறில்லாமல், தம்மை ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லவில்லை என்று வருத்தப்படுவது அர்த்தமற்ற செயல். 

முதலமைச்சர், சம்பூர் மகா வித்தியாலயத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தால், அவர் கட்டாயம் மேடைக்கும் அழைக்கப்பட வேண்டும்.

முறைப்படி அழைக்கப்படாவிட்டால், அது முதலமைச்சர் பதவிக்கு அவமானமாகும். எனவே, அவரும் மேடையில் ஏறக்கூடாது. அதனை அவர், பின்னர் அரசியல் ரீதியாகத் தான் கையாள வேண்டும். ஆளுநரின் சைகையினாலோ தன்னிச்சையாகவோ, முதலமைச்சர் மேடை அறிவிப்பாளரின் அழைப்பின்றி மேடையில் ஏறுவதாக இருந்தால், எவரும் அதனை தடுப்பதும் மரியாதையற்ற செயலாகும். ஏனெனில், அவர் மாகாணத்தின் முதலமைச்சர்.

கடற்படை அதிகாரிக்கு, முதலமைச்சரைத் தெரியாமல் இருக்க முடியாது. அவரை தெரிந்திருந்ததனால் தான், முதலமைச்சர் அந்தளவு கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போதும் சிரித்தபடி, அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார். அவர், முதலமைச்சரைத் தடுத்தது தவறாக இருந்த போதிலும், முதலமைச்சர் திட்டும் போது, பொறுமையுடன் நடந்து கொண்டமை பாராட்டுக்குரியது. இல்லாவிட்டால், இதை விட மிகவும் மோசமான நிலைமை அங்கு தோன்றியிருக்கும்.

முதலமைச்சர், கடற்படை அதிகாரியைத் திட்டும் காட்சி மட்டுமே அந்தச் சூழலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டிருந்தது. கடற்படை அதிகாரி அவரைத் தடுக்கும் காட்சி, அதற்கு ஒரு சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்கு முன்னர் தான் இடம்பெற்ற்றிக்க வேண்டும். ஆனால், அது அந்த வீடியோவில் உள்ளடக்கப்படவில்லை. அது தான் இலங்கையின் ஊடக கலாசாரம்.

அந்தத் திட்டுதல் மிகவும் மோசமான நடத்தை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதனை எதிர்த்து, பேரின ஊடகங்களும் அமைப்புக்களும் எழுப்பிய குரல் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

இதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவரைத் திட்டும் வீடியோ காட்சியொன்றும். சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியது. அதனை பிரதான பிரவாகத்தின் ஊடகங்கள் வெளியிடவேயில்லை. அது சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிய பின்னர் எந்தவொரு தேசப்பற்றாளரும் அதனை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. அதற்கு எதிராக பொலிஸார் தொழிற்சங்க பாணியிலான நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை.

அண்மையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் மேஜர் ஜெனரல் சாகி கால்லகேவுக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. அதனை அடுத்து கால்லகே, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அப்போதும் எவரும் மங்களவைச் சாடவில்லை. மங்களவின் வீட்டுக்குச் சென்று, அவரை மிரட்டவுமில்லை.

அரசியல் காரணங்களுக்காக, மேஜர் ஜெனரல்களான லக்கீ அல்கம மற்றும் ஜானக பெரேரா ஆகியோரது பாதுகாப்புக் குறைக்கப்பட்டது. அவர்கள், புலிகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். எவரும் படை வீரர்களுக்கு செய்த அநீதியாக அதனைக் கருதி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. நஸீர் அஹமட் முஸ்லிம் என்பதனாலேயே, பலர் தற்போதைய சம்பவத்தை ஊதிப் பெருக்கினார்கள் என்றும் அவரது இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்றும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜப்பானுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியே அங்கு நகோயா நகரில் நடைபெற்ற பேட்டியொன்றின் போது தமிழ் ஊடகவியலாளர் ஒருவரிடம் கூறியிருந்தார்.

கடற்படை அதிகாரி பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது. முப்படைகளில் ஒன்றின் அதிகாரி ஒருவரின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக, கடற்படையினரும் ஏனைய படையினரும் முன்வருவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், அவர்கள் அதனைச் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவுமே கையாண்டிருக்க வேண்டும். அந்த நோக்கத்துக்காக அவர்கள் தொழிற்சங்கப் பாணியிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல. படையினர், அரசியல் ரீதியாகச் சிந்திப்பதன் விளைவை, பாகிஸ்தான் நீண்ட காலமாக அனுபவித்து வருகிறது.

மொத்தத்தில், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட ஆளுநர், முதலமைச்சர், கடற்படை அதிகாரி, படையினர், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் போன்ற அனைவரும் பிழையாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால், எல்லோரும் ஒரு பக்கத்தை மட்டுமே குறை காண்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .