2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சச்சினின் சாதனையை குக் முறியடிக்க முடியும்: கவாஸ்கர்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 01 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றமை என்ற இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டென்டுல்கரின் சாதனையை, இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக் முறிடிக்க முடியும் என, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

31 வயதான அலஸ்டெயர் குக், இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, 10,000 ஓட்டங்களைக் கடந்த 12ஆவது வீரராக மாறியிருந்தார். இந்த மைல்கல்லை அடைந்த, இளைய வீரராக, குக் மாறியிருந்தார். இதற்கு முன் காணப்பட்ட சச்சின் டென்டுல்கரின் சாதனையை, 5 மாதங்களால் குக் முறியடித்திருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், 'டென்டுல்கரின் டெஸ்ட் ஓட்டங்களுக்கான சாதனையை, குக் முறியடிக்க முடியும். அவருக்கு வயது உள்ளதோடு, அதிக டெஸ்ட்களில் இங்கிலாந்து விளையாடுகிறது" என்றார்.

'ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த 7 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து போர்மில் குக் இருப்பாரானால், டென்டுல்கரை அவர் முந்த முடியும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது, 10,042 ஓட்டங்களைப் பெற்றுள்ள அலஸ்டெயர் குக், சச்சின் டென்டுல்கரின் சாதனை ஓட்டங்களான 15,921 ஓட்டங்களைப் பெறுவதற்கு, இன்னமும் 5,879 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், ஆண்டொன்றுக்குச் சராசரியாக 12.4 டெஸ்ட்களில் விளையாடுகிறார். அக்காலத்தில் அவர், 44.66 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெறுகிறார். அதைவிட முக்கியமாக, இனிங்ஸ் ஒன்றில் அவர், தலா 42.292 ஓட்டங்களைப் பெறுகிறார். போட்டியொன்றில் அவர், சராசரியாக 1.822 இனிங்ஸ்களில் (சில நேரங்களில் இனிங்ஸ் வெற்றி, சில நேரங்களில் மழையால் பாதிப்பு என, ஒரு போட்டியில் 2 இனிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாட முடியாது) துடுப்பெடுத்தாடுகிறார்.

இதன்படி, இனிங்ஸொன்றில் அவர் பெறும் 42.292 ஓட்டங்களின்படி, இன்னமும் 139 இனிங்ஸ்களில் விளையாட வேண்டியிருக்கும். அவ்வாறு 139 இனிங்ஸ்களில் விளையாடுவதற்கு, 76.295 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும். சராசரியின்படி, அந்தளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட, குக்குக்கு 6.15 ஆண்டுகள் எடுக்கும். தற்போது 31 வயதான குக், அப்போது 37 வயதானவராக இருப்பார். எனவே, கவாஸ்கரின் கருத்தின்படி, சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு, குக்குக்கு உள்ளது. ஆனால், அவர் போர்மில் இருப்பது தான், அதற்கு முக்கியமாக உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X