2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஹம்மட் அலி: 1942 - 2016: ஓய்ந்தார் 'அதிசிறந்தவர்'

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 05 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலகில் தோன்றிய விளையாட்டு வீரர்களில் பலர், தங்களுடைய விளையாட்டுகளில் மிகப்பெரும் நட்சத்திரங்களாக இருந்திருக்கின்றனர். ஆனால், விளையாட்டையும் தாண்டி, மக்களின் வாழ்வில் இரண்டறக் கலக்கும் வாய்ப்பு, வெகுசிலருக்கே வாய்த்திருக்கிறது. அவ்வாறானவர்களில், முஹம்மட் அலி முக்கியமானவர்.

உலகில் தோன்றிய மிகச்சிறந்த மிகுஎடைக் குத்துச்சண்டை வீரராகக் கருதப்படும் முஹம்மது அலி, மிகுஎடைப் பிரிவில் மூன்றுமுறை சம்பியன் பட்டம் வென்ற முதலாமவராகக் காணப்படுகிறார். ஆனால், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை), தனது 74ஆவது வயதில் அவர் உயிரிழந்த செய்தி வெளிவந்தபோது, அவர் மீதான நினைவுகள், வெறுமனே விளையாட்டு வீரராகக் காணப்பட்டிருக்கவில்லை. மாறாக, பலருடைய வாழ்வின் தூண்டுகோலாக இருந்த மனிதனொருவரின் இறப்பாகவே கருதப்பட்டது.

ஜனவரி 17, 1942இல் கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே (இளையவர்) என்ற பெயரில், அமெரிக்காவின் கென்டக்கியில் பிறந்தவரே, பின்னாளில் முஹம்மது அலியாகவும் உலகில் 'அதிசிறந்தவராகவும்" மாறினார். பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா சுதந்திரமடைந்தது 1776ஆம் ஆண்டு என்பதோடு, அதற்கு முன்னரிருந்தே, அமெரிக்காவில் அடிமைகளின் வருகை காணப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஏபிரஹாம் லிங்கன், 1863ஆம் ஆண்டு விடுத்த ஜனாதிபதி ஆணையைத் தொடர்ந்தும் 1865ஆம் ஆண்டு, அமெரிக்க அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலமாகவும், அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. ஆனால், 1942ஆம் ஆண்டு கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே பிறந்தபோதும் கூட, கறுப்பின அமெரிக்கர்கள், இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர். அவ்வாறான சூழலிலிருந்து உருவானமை தான், அவரை மாபெரும் நட்சத்திரமாக, உலகம் முழுவதும் அறியப்படும் ஒருவராக மாற்றியது.

தனது 12 வயதில் குத்துச்சண்டைப் போட்டிகளுக்காகப் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்த கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே, படிப்பில் அவ்வளவு ஆர்வம் காட்டியிருக்கவில்லை. 1960ஆம் ஆண்டு தனது பாடசாலையிலிருந்து அவர் வெளியேறும் போது, 391 பேரைக் கொண்ட பாடசாலையில், 376ஆவது நபராக அவர் தரப்படுத்தப்பட்டிருந்தார்.

குத்துச் சண்டைப் போட்டிகளில் அவர் எவ்வாறு பங்குபற்ற ஆரம்பித்தார் என்பதும் சுவாரசியமான ஒரு கதை. 1954ஆம் ஆண்டில், அவருக்கு மிகவும் பிடித்தமான அவரது சைக்கிள், காணாமல் போனது. அதுகுறித்து அவர், வெள்ளையின பொலிஸ் அதிகாரியான ஜோ மார்ட்டினிடம் முறையிட்டார். அந்த சைக்கிள் கிடைத்திருக்கவில்லை, ஆனால், குத்துச்சண்டைக் கழகம் ஒன்றின் ஏற்பாட்டாளரான மார்ட்டினால், குத்துச்சண்டைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மார்செலஸ் கிளே.

1960ஆம் ஆண்டு, றோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலகு மிகுஎடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் கிளே. இதன்மூலம், உலகுக்கு அறிமுகமானார். ஆனால், அவரது வாழ்வை மாற்றிய முக்கிய போட்டி, 1964ஆம் ஆண்டு நடந்தது. மார்செலஸ் கிளே தனது 22ஆவது வயதில் அமெரிக்காவைச் சேர்ந்த சொனி லிஸ்டனை, உலக மிகுஎடை குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சந்தித்தார்.


இந்த சொனி லிஸ்டன், சாதாரணமானவர் கிடையாது. தனது பயமுறுத்தக்கூடிய உடலமைப்புக்காகவும் குத்தும் திறனுக்காகவும் வலிமைக்காகவும் அறியப்பட்டவர். இதற்கு முன்னர் இடம்பெற்ற உலக மிகுஎடை குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் சம்பியனாகி, நடப்புச் சம்பியனாகவே, கஸ்சியுஸ் மார்செலஸ் கிளேயை எதிர்கொண்டார். எனவே, சொனி லிஸ்டனுக்கு இலகுவான வெற்றி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது.

ஆனால், நடந்ததோ அனைவரும் எதிர்பார்த்தமைக்கு மாறாக. 32 வயதான நடப்புச் சம்பியனான சொனி லிஸ்டன், 22 வயதான ஆபிரிக்க அமெரிக்கரான கஸ்சியுஸ் மார்செலஸ் கிளேயால் தோற்கடிக்கப்பட்டார். அந்த வெற்றி, வெறுமனே விளையாட்டில் கிடைத்த வெற்றி கிடையாது. மாறாக, தொடர்ந்தும் அடக்குமுறைக்கு முகங்கொடுத்துவந்த ஆபிரிக்க அமெரிக்க மக்கள், தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதினர். அதுவும், வெற்றிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே, 'நான் தான் அதிசிறந்தவன்" என்று தெரிவித்தமை, கறுப்பின மக்கள், கட்டமைப்புரீதியான ஒடுக்குமுறைகளைத் தாண்டி, வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியது. அமெரிக்கா முழுவதுமே அறியப்பட்ட பெயராக கஸ்சியுஸ் மார்செலஸ் கிளேயின் பெயர் மாறியது. வெறுமனே விளையாட்டு வீரனாக இல்லாமல், கறுப்பின மக்களின் உரிமைக்கான குரலை வழங்கும் ஆளுமையாக கஸ்சியுஸ் மார்செலஸ் கிளே நோக்கப்பட்டார்.

அதேபோல், சர்ச்சைகளை ஏற்படுத்துவதிலும் அவர் குறைந்தவரல்லர் என்பதையும் அது வெளிப்படுத்தியது.
சர்ச்சைகளின் ஓர் அங்கமாக, உலக மிகுஎடை சம்பியனாகத் தெரிவாகி இரண்டே இரண்டு நாட்களில், சர்ச்சைக்குரிய இஸ்லாமியப் பிரிவான இஸ்லாமிய தேசத்தில் (Nation of Islam) இணைந்து கொண்ட மார்செலஸ் கிளே, தனது பெயரை முஹம்மட் அலி என மாற்றிக் கொண்டார். இந்தப் பெயரே, இன்றுவரை அவர் அறியப்படும் பெயராக மாறியது. குறித்த சமயப் பிரிவு, மிகவும் சர்ச்சைக்குpயதாகக் காணப்பட்டது. அதன் தலைவர்களாக எலிஜா முஹம்மட், மல்கொம் எக்ஸ் ஆகியோர் காணப்பட்டதோடு, அப்பிரிவு, வெள்ளையின ஆண்களை, தீமையான அரக்கர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்தது. அதன்காரணமாக, இனவாதக் குற்றச்சாட்டுகள், அவ்வமைப்பு மீது காணப்பட்டன.

இவற்றுக்கு மத்தியிலும், விளையாட்டின் பக்கம் அவரது கவனம் விட்டுப் போயிருக்கவில்லை. 1967ஆம் ஆண்டில் அவர், மீண்டும் உலக மிகுஎடை சம்பியனாக மாறினார். ஆனால், வியட்னாம் போர் ஆரம்பித்திருந்த நிலையில், அமெரிக்க இராணுவத்தில் சேர்வதற்கு, முஹம்மட் அலி எதிர்ப்புத் தெரிவித்தார். 'வியட் கொங்குடன் (வியட்னாமின் தேசிய விடுதலை முன்னணிஃஅதன் உறுப்பினர்கள்) எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. எந்தவொரு வியட் கொங்கும் என்னை நிகர் (கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும் வார்த்தை) என அழைத்ததில்லை" என, பகிரங்கமாகவே தெரிவித்த அலி, வியட்னாம் போரில் இணையாமை மட்டுமல்லாது, அந்தப் போருக்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். தவிர, இஸ்லாமியத் தேசத்தின் கடுமையான போக்கும் அவரது, கருத்தில் வெளிப்பட்டது. 'எனது எதிரி, வெள்ளையின மக்களே, வியட் கொங் கிடையாது" என்று அவர், சர்ச்சைக்குரிய விதத்தில் தெரிவித்திருந்தார். வியட்னாம் போருக்கு, அமெரிக்காவில் பெரும்பான்மை ஆதரவு காணப்பட்டிருந்த நிலையில், அதை நிராகரித்து, அதற்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டமை, அவரது துணிச்சலையும் தன் கொள்கைகளில் அவருக்கிருந்த உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது.

இராணுவத்தில் இணைய மறுத்தமை காரணமாக, அவருக்கு 5 ஆண்டுகள் சிறையும் 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்தோடு, குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அனுமதிப்பத்திரமும் பறிபோனது. தனக்கான அபராதத்தைச் செலுத்திய அவர், தனக்கெதிரான தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்தார். இவற்றுக்கு மத்தியில், மார்ச் 1967 முதல் 1970இன் பெரும்பகுதி வரை, அவரால் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை.

அவருக்கான அனுமதி, 1970இன் இறுதிப் பகுதியில் அவருக்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட, 1971ஆம் ஆண்டில், அவருக்கெதிரான தீர்ப்பும், அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் மாற்றப்பட்டிருந்தது. தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிய அவர், 1974ஆம் ஆண்டு, மீண்டும் சம்பியன் பட்டம் வென்றார்.

ஆனால், அதைத் தொடர்ந்து, தனது உறுதித்தன்மையை அவர் இழக்கத் தொடங்கினார். அத்தோடு, அவருக்கு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கின. 1979ஆம் ஆண்டு அவர் ஓய்வுபெற்றார். எனினும், லாரி ஹோம்ஸூக்கு எதிராக அதிபாரக் குத்துச்சண்டைப் போட்டி சம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வதற்காக, ஓய்விலிருந்து அலி வெளியே வந்தார். இந்தப் போட்டி, ஒக்டோபர் 2, 1980இல் நடந்தது. இதில், அலி தோல்வியடைந்ததோடு, அவரது எதிர்கால உடல்நலத்தை அதிகமாகப் பாதிக்குமாறும் அமைந்தது. 1981ஆம் ஆண்டு டிசெம்பரில் அவர், ஓய்வுபெற்றார்.

அவரது குத்துச்சண்டை வரலாற்றில், 61 போட்டிகளில் பங்குபற்றிய முஹம்மட் அலி, 56 போட்டிகளில் வென்றிருந்தார். அவற்றில் 37 போட்டிகளில், நொக் அவுட் முறையில் வென்றிருந்தார்.

அலிக்கு, நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் காணப்படுவதாக, 1984ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னரே குறிப்பிட்ட லாரி ஹோம்ஸூக்கெதிரான போட்டி, அதற்குப் பங்களிப்புச் செய்ததாகக் கருதப்படுகிறது. இந்த நோய் காரணமாக, அவரது இயக்கத்திறன், பேச்சு உட்பட உடலின் செயற்பாடுகள், பாதிக்கப்பட்டன.

அவரது குத்துச்சண்டைப் போட்டிகளின் இறுதிக் காலம் நெருங்கிய போதே, அலியின் கொள்கைகளில் மென்மைத் தன்மை ஏற்பட்டது. முன்பைப் போன்று, அதிரடியான, சர்ச்சையான கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்துவதை, அவர் குறைத்துக் கொண்டார்.

ஆனால், உலக விடயங்கள் தொடர்பான அவரது ஈடுபாட்டுக்குக் குறைவிருக்கவில்லை. குறிப்பாக, ஐ.நாவின் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த அவர், 2002ஆம் ஆண்டு, மூன்று நாட்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையில், நான்கு முறை திருமணம் முடித்த முஹம்மட் அலிக்கு, 7 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அதில், அவரது மகள் லைலா அலி, தான் பங்குபற்றிய 24 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தோற்கடிக்கப்படாதவராக, குத்துச்ண்டையிலிருந்து ஓய்வுபெற்றார்.

முஹம்மட் அலி, தனது சமய வாழ்விலும், இஸ்லாமிய தேசத்திலிருந்து சுன்னி இஸ்லாம் பிரிவுக்கு 1975ஆம் ஆண்டில் மாறிய அவர், 2005ஆம் ஆண்டில் சூபித்துவத்துக்கு மாறினார். ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட் சஞ்சிகையால் 'இந்த நூற்றாண்டில் சிறந்த விளையாட்டு வீரன்" எனவும் பி.பி.சி நிறுவனத்தால் 'இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு ஆளுமை" எனவும் கௌரவிக்கப்பட்ட முஹம்மட் அலியின் உடல்நிலை, மோசமடைந்து வந்தது. சுவாசப் பிரச்சினை காரணமாக ஜூன் 2ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஜூன் 3ஆம் திகதி, தனது உயிரைவிட்டுப் பிரிந்தார்.

எதிரிகளை குத்துச்சண்டை வளையத்துக்குள் வெற்றிகொண்ட அலி, வளையத்துக்கு வெளியே, அவர்களைத் துச்சமாக எண்ணினார். அதேபோல் தான், குத்துச்சண்டை வளையத்துக்கு வெளியே, தனது கொள்கைகள் பற்றி உரத்துச் சத்தமேற்படுத்துவதையும் அவர், வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு விளையாட்டின் சம்பியன், தனது விளையாட்டுக்கு வெளியே, உலகம் குறித்த பிரக்ஞையுடன் இயங்கும்போது, அவன் எவ்வாறு மதிக்கப்படுவான் என்பதற்கு, முஹம்மட் அலி ஒரு சாட்சி.

 'அதிசிறந்தவரின்' பொன்மொழிகள்

முஹம்மட் அலியின் குத்துகளைப் போல, அவரது கருத்துகளும், மிகவும் சுவாரசியமானவை. அவற்றை, பொன்மொழிகள் என்றுகூட அழைக்கலாம். அவ்வாறான சில கருத்துகள்:

'பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால், நான் (எனக்குச்) சொன்னேன், 'கைவிடாதே. இப்போது வருந்திய, பின்னர் உன் வாழ்வின் எஞ்சிய காலத்தைச் சம்பியனாக வாழ்".

'நான் தான் அதிசிறந்தவன். நான் அதிசிறந்தவன் என்பதை நான் அறியுமுன்பே, நான் அதைத் தெரிவித்தேன்"
'கற்பனையில்லாத மனிதனொருவனுக்கு, சிறகுகள் இல்லை'.

'வண்ணத்துப்பூச்சி போன்று மிதந்து செல், தேனீ போல கொட்டு'.

'நட்பைப் பாடசாலையில் நீங்கள் கற்பதில்லை. ஆனால், நட்பின் அர்த்தத்தை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையெனில், நீங்கள் எதையும் கற்றிருக்கவில்லை'.

'ஆபத்தான விடயங்களைச் செய்வதற்குத் தைரியமில்லாதவன், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டான்'.

'என்னைத் தோற்கடிப்பதாக நீங்கள் கனவு கண்டாலும் கூட, நீங்கள் நித்திரையிலிருந்து எழுந்து, மன்னிப்புக் கேட்பது சிறந்தது' .

'நான் எப்படி இருக்க வேண்டுமென நீங்கள் நினைப்பது போல, நான் இருக்கத் தேவையில்லை'.

'பூஞ்சணம் பிடித்த பாணிலிருந்து அவர்களால் பென்சிலின் உருவாக்க முடியுமெனில், உங்களிடமிருந்தும் அவர்களால் எதையாவது எடுக்க முடியும்'.

'வாழ்ந்தவர்களிலேயே அதிசிறந்தவன் நான். இந்த உலகின் அரசன் நான். நான் மோசமான மனிதன். வாழ்ந்தவர்களிலேயே அழகான விடயமும் நான் தான்'.

'எனது மனது திட்டமிட முடியுமெனில், அதை எனது இதயம் நம்புமெனில், நான் அதை அடைய முடியும்'.

'மக்களை அவர்களது தோல் நிறத்துக்காக வெறுப்பது தவறானது. எந்த நிறம் வெறுத்தாலும், அது மிகவும் தவறானது'.

'உடற்பயிற்சிக் கூடங்களில் சம்பியன்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்களுக்குள்ளே ஆழமாகக் காணப்படும் ஒன்றால் அவர்கள் உருவாக்கப்படுகின்றனர் - ஒரு ஆசை, ஒரு கனவு, ஒரு தூரநோக்கு. அவர்களிடம் திறமை இருக்க வேண்டும், அதேபோல் விருப்பும். ஆனால், திறமையை விட விருப்புப் பலமாக இருக்க வேண்டும்'.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .