Shanmugan Murugavel / 2016 ஜூன் 06 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், கலெண்டர் கிரான்ட் ஸ்லாமைக் கைப்பற்ற முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயை எதிர்கொண்டிருந்த ஜோக்கோவிச், 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, தனது முதலாவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றிருந்தார்.
இதன்மூலம், நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டதோடு, தனது 12ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றிருந்தார்.
இந்நிலையில், நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம் போட்டிகளையும் ஒரே ஆண்டில் வெல்லும் (கலெண்டர் கிரான்ட் ஸ்லாம்) தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு, அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
'திமிர்த்தனத்துடன் கதைப்பதாக எண்ணப்பட விரும்பவில்லை, ஆனால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடையலாம்" என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிகள் மூன்றில் பங்குகொண்ட அவர், அவற்றில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இந்த வெற்றி, அதிக மகிழ்ச்சியையும் நிறைவு உணர்வையும் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒற்றையர் போட்டிகளில் கலெண்டர் கிரான்ட் ஸ்லாமை இறுதியாக, றொட் லேவர் 1969ஆம் ஆண்டிலேயே வென்றிருந்த நிலையில், தனது வாய்ப்புகள் குறித்து, கருத்துகளை ஜோக்கோவிச் வெளிப்படுத்தினார்.
'கலெண்டர் ஸ்லாமை இறுதியாக, றொட் லேவரே வெற்றிகொண்டார் என்பதை அறியும் போது, மிகவும் புகழ்ச்சியாக உள்ளது. டென்னிஸ் வீரரொருவராக, உங்களுக்குக் காணப்படும் உச்சக்கட்ட சவால்களில் இதுவுமொன்று" எனத் தெரிவித்தார்.
நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்கும் சாதனையையும், இதற்கு முன்னர் றொட் லேவரே படைத்திருந்த நிலையில், ஜோக்கோவிச்சின் சாதனை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவித்தார். 'எல்லா நான்கு பெரிய பட்டங்களையும் வென்றமைக்காக, நொவக்குக்கு வாழ்த்துகள். விம்பிள்டன், ஐ.அமெரிக்க பகிரங்கத் தொடர்களில் உள்ள போட்டிகளுக்காக உங்களுக்கு வாழ்த்த விரும்புகிறேன்" என அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .