2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றில் ஒலித்தவை

Kogilavani   / 2016 ஜூன் 10 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, பொது எதிரணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்க்கிழமை (09) இடம்பெற்றது. அதில் உரையாற்றிய உறுப்பினர்களில் சிலரின் உரைச்சுருக்கங்கள்

'தூஷணத்தைக் கொண்டு வர முடிந்தது'- ரணில் விக்கிரமசிங்க

'ஜனாதிபதி  மைத்திரபால சிறிசேனவின் ஜனநாயக ஆட்சியிலேயே  நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை  கொண்டு வர முடிந்தது' என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'இது தூஷணம் இதனை  தோற்கடிப்போம்' என்றார்.

மஹிந்த ராஷபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்  நிதியமைச்;சு, ஜனாதிபதியின் கீழ் இருந்தமையால், நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியாது போனது. அந்நிலைமை இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அதனையிட்டு சந்தோஷமடைய வேண்டும். ஜனாதிபதியின், வெளிநாட்டு விஜயங்களின்போது, கூடுதலான சலுகைகள்  கிடைத்தன. அதற்கு நீங்கள் எதிர்ப்பா? கடந்த ஆட்சிக்காலத்தில்  பஸ்களில், மிதிப் பலகைகளில்  பயணித்தோரே இந்த பிரரேரணையை கொண்டுவந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது பெற்றுக்கொண்ட ஒரு இலட்சம் கோடிக்கு அதிகமான  பணம், கணக்குகளில்  இல்லையென்றால் அது தொடர்பில்  நிதி  விசாரணைக் குழுவில் முறையிடலாம். அதில்  தோற்றிருந்தால்  மஹிந்த எம்.பி ஒரு வருடத்துக்கு அவைக்கு சமூமளிக்கக் கூடாது.

கார்களை இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்ய வேண்டும். உங்களுக்கு லம்போகினி வேண்டுமாயின் நான் என்ன செய்ய முடியும்' என்றார்.

'கையெழுத்திட்டோரே பொறுப்பு'- சம்பந்தன்

'நாட்டின் கடன் சுமை, இன்று நேற்று இருப்பது ஒன்றல்ல. அரசாங்கம் மாறியதனால்; இது ஏற்பட்டதல்ல' என்று தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் 'சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டோரே, கடன் சுமைக்கு பொறுக்கூற வேண்டும்' என்றார்.

மக்களின் பணத்தை தனிப்பட்ட நோக்கத்துக்காக செலவழிக்க இடமளிக்க முடியாது. நிதியை கையாள்தல் தொடர்பிலான அதியுயர் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றது.

முறைகேடாகவும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் நிதியை பயன்படுத்தியமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அம்பலத்துக்கு வருகின்றது.
பாதீடு (வரவு-செலவுத்திட்டம்) உள்ளிட்ட நிதி தொடர்பான விவகாரங்களை உரிய முறையில் தயாரிக்க வேண்டும். அது செயற்றிரன்மிக்கதாக அமைய வேண்டும்.

இந்த அரசாங்கத்தினால், இலங்கை மீதான சர்வதேச கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கம் கொள்கை மற்றும் அதனை கடைபிடிக்கும் முறையானது சகல மக்களின் மத்தியிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

'மைத்திரியே சு.க தலைவர்'- மஹிந்த அமரவீர

'இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவே கொண்டு வரப்பட்டதாக நான் நினைக்கின்றேன். சுதந்திரக்கட்சியை மஹிந்த விட்டுச் சென்றாலும் மைத்திரி விட்டுச் சென்றாலும் நான் விட்டுச் செல்லமாட்டேன்' என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

'மஹிந்த யுத்தத்தை முடித்தார். ஆனால், அடுத்தடுத்த தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த
ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர் பெற்றுக்கொடுக்காத வாக்குகளை  ஏன்? மஹிந்தவின் தொகுதியிலேயே பெறாத வாக்குகளை நான் பெற்றுக்கொடுத்தேன். அதேபோல, மத்திய வங்கியின் ஆளுநருக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதிலும் ஐ.தே.க.வுக்கு நான் சோரம் போகவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது.

சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு அமைவாக செயற்படாதவர்களை, எம்முடன் எவ்வாறு இணைத்துக்கொண்டு செயற்படுவது? கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படுவோரை எம்முடன் இணைத்துக்கொள்ள முடியாது. ஆகையால்தான் நாங்கள் இன்னும் மக்களுடன் மக்களாக இருக்கின்றோம்' என்றார்.

'நிதியமைச்சர் பதவி விலக வேண்டும்'- தினேஷ் குணவர்தன

'நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது சுமையேற்றப்படுகின்றது. ஆகையால் நிதியமைச்சர், நாட்டையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்றாது பதவி விலக வேண்டும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரி நின்றார்.

நம்பிக்கையில்லாப் பிரரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையினால் நாடு அதாள பாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றது. 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி பல தடவைகள் திருத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு செய்வதற்கு நிதியமைச்சருக்கு எவ்விதமான அதிகாரமும் கிடையாது. நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றுக்கே இருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப வரவு-செலவுத் திட்டம் திருத்தப்பட்டது. தாய்நாட்டை நிதியமைச்சர் காட்டிக்கொடுத்துள்ளார். ஆகையால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

அதுமட்டுமன்றி பொருளாதார நெருக்கடி உயர்ந்து செல்கையில், அளவுக்கு அதிகமான பணம் அச்சிடப்படுகின்றது' என்றும் கூறினார்.

'மஹிந்தவுக்கு 20 நிமிடங்கள் தாரோம்'- லக்ஷ்மன் கிரியெல்ல

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவதற்கு வந்தால், மேலும் 20 நிமிடங்களை நாங்கள் தருகின்றோம். ஆனால், நம்பிக்கையில்லாப் பிரேரணையிலேயே அவர் கைச்சாத்திடவில்லை' என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, கூறி பொது எதிரணியின் வாயை அடைத்தார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போது, பொது எதிரணிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தொடர்பில் கேள்விகளை எழுப்பினார். தங்களுடைய பொது எதிரணிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானது அல்ல என்றும் இது அசாதாரணமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட புதன்கிழமைதான் சபையும் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய(நேற்று) விவாதத்துக்கு இரண்டரை மணிநேரம் ஒதுக்கப்பட்டது. எனினும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவானது என்றார். குறிக்கிட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, 'இந்தப் பிரேரணையில் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிடவில்லை. அவர் உரையாற்ற வந்தால் 20 நிமிடங்கள் தருகின்றோம்' என்றார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த சபாநாயகர் கருஜயசூரிய, 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்சிக்குள் நேரம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனை நீங்கள்தான் தீர்த்து வைக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

'பிரேரணை புஸ்வானமாகிவிட்டது'- ரவூப் ஹக்கீம்

அரசாங்கத்தை கவிழ்ப்பதானால் அதிலுள்ள பலமான ஒருவரை வீழ்த்த வேண்டும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை புஸ்வானமாகிவிட்டது' என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

லக்ஷ்மன் கதிர்காமர்,எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோருக்கு எதிராக 1994களில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. உயர்ந்த தலைவர்களை விமர்சிக்கவே இவ்வாறு பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பிரேரணையும் இவ்வாறே கொண்டுவரப்பட்டது.
2005ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் நாட்டின் வருமானம் கட்டம் கட்டமாக குறைவடைந்து வந்தது. அதிலிருந்து நாட்டை மீட்கவே முயன்று வருகிறோம். இது 2005ல் 20 வீதமாக இருந்தது.

யுத்தத்தின் பின்னராக 5 வருட காலத்தில் எதுவித நிதி முகாமைத்துவமுமின்றி கூடுதல் வட்டிக்கு கடன்பெறப்பட்டது. வரி மீள்செலுத்துவது கட்டுப்பாடின்றி செயற்படுத்தப்பட்டது. இந்த நிலைமையை மாற்ற சில நடவடிக்கைகள் முன்னெடுத்துவரும் நிலையிலே இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. வற்வரி உயர்வினூடாக அரசின் வருமானத்தை உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

'நாகரீகமல்லாத பிரேரணை'- ரிஷாட் பதியுதீன்

குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் பேதங்களை மறந்து எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்' என்று கோரிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,  இணையாத இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள நல்லாட்சியில் பிரிந்திருந்த சகல உள்ளங்களும் ஒன்றுபட்டுள்ளன' என்றும் கூறினார். 'தேர்தல்முறையை மாற்றுவது, அழிந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது பற்றி சகலரும் ஓரிடத்திலிருந்து பேசி வருகின்றோம்.

இவ்வாறான நிலையில், ஒருவருட காலத்துக்குள் நிதி அமைச்சருக்கு எதிராக நாகரீகம் அல்லமால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து வருத்தமடைகிறோம். இதற்கு முன்னர் இவ்வாறான வாய்ப்பு இருக்கவில்லை. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஜனாதிபதியே நிதியமைச்சராக பதவியாற்றிவந்தார். நிதியமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக கடன்சுமை இருக்கின்றபோதும் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளது.

குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படாது, நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்வதற்காக எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இணைந்துகொள்ள வேண்டும்' என்றும் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் தேவையற்ற வெளிநாட்டு கடன்களே நாட்டை பாரிய கடன்சுமைக்குத் தள்ளியுள்ளது. ஒரு தனிக் குடும்பம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 வீதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இக்குடும்பம் கடும் உயர்ந்த வட்டியில் பாரிய கடன்களைப் பெற்றிருந்தது. இந்த அரசாங்கத்துக்கு கடன்களை மீளச்செலுத்தவேண்டியுள்ளது.

'பலர் பல்கலைக்கழகம் செல்லவில்லை'- ராஜித சேனாரட்ண

'நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை கல்வித் தகைமையை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

'அடிப்படை கல்வித்தகைமை இல்லாத உறுப்பினர்கள் சிலர், சபையில் எவ்வாறு நடந்துகொள்வது, எவ்வாறு பேசுவது என்பது கூடத் தெரியாத நிலையில் இருக்கின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு எம்.பிக்களுக்கு அடிப்படை கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும்' என சபாநாயகரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

'மஹிந்தராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் அவரே நிதியமைச்சராக இருந்தார். எனினும், நல்லாட்சி அரசாங்கம் நிதியமைச்சராக ஜனாதிபதியை அல்லாது வேறு ஒருவரை நியமித்துள்ளது. இதனால்தான் அவருக்கு எதிராக பேச முடிந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள் தற்பொழுது வாய் திறந்துள்ளனர்.

வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூக்குரல் இடுகின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் எதனோல் உள்ளிட்ட பல பொருட்கள் நாட்டுக்குள் எந்தவரி அறவீடுகளும் இன்றி கொண்டுவரப்பட்டன. இவற்றுக்கு வரி அறவிட்டு சுங்கத்திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், பொது மக்களின் தேவைகளுக்கு கூடுதலான நிதியை ஒதுக்குவதற்கும் நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான

நிதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நிதி நிர்வாகம் பற்றிப் பேசும் பலர் பல்கலைக்கழகம் செல்லவில்லை. நிதி தொடர்பான அறிவு இல்லாதவர்கள் இன்று பெரிதாகப் பேசுகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X