Shanmugan Murugavel / 2016 ஜூன் 12 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த யூரோ 2016 தொடரில், இரசிகர்களுக்கிடையிலான வன்முறைகள், பாரிய அளவில் ஏற்பட்டுள்ளதோடு, அவை அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளன.
இரண்டாவது நாளான சனிக்கிழமை, பிரான்ஸின் இரண்டாவது நகரத்துக்கும் அந்த வன்முறைகள் பரவியதோடு, பாதுகாப்புத் தொடர்பான கேள்விகளும் ஏற்பட்டுள்ளன.
மார்சிலேயில் இங்கிலாந்து இரசிகர்களுக்கும் ரஷ்ய இரசிகர்களுக்குமிடையில் மோதலேற்பட்டது. இதன்போது, பியர் போத்தல்களும் கதிரைகளும் வீசப்பட்டதோடு, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
பின்னர், ரஷ்யாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான போட்டி நிறைவடைந்ததும், மைதானத்துக்குள்ளேயே வைத்து, ரஷ்ய இரசிகர்களால் இங்கிலாந்து இரசிகர்கள் தாக்கப்பட்டனர்.
இரசிகர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து, ரஷ்ய அணிக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி காணப்படுகிறது. இதற்கு முன்னர் போலந்தில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணப் போட்டிகளில், இரசிகர்களின் நடவடிக்கை காரணமாக, ரஷ்ய அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, ஒத்திவைக்கப்பட்ட 6 புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்தன.
மறுபுறத்தில், மத்தியதரைக் கடற்கரைப் பக்கமாக, வட அயர்லாந்து அணியின் இரசிகர்களுக்கும் உள்ளூர் இரசிகர்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஏழு பேர் காயமடைந்தனர். பொலிஸாரின் தகவலின்படி, இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, பிரான்ஸில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு மத்தியிலும் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பொலிஸார், படைவீரர்கள், தனியார் பாதுகாப்பு அதிகாரிகளென 90,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .