2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்த காங்கேசன்துறை இடைத்தேர்தல்

Thipaan   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 44)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்து வைத்த சிறிமாவோ

அரசாங்கத்தின், தமக்கெதிரான திட்டமிட்ட தொடர் அநீதிகளாலும் ஓரவஞ்சனையினாலும் கொதித்தெழுந்த தமிழர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம், பிரதமர் சிறிமாவுக்கு ஏற்பட்டிருந்தது. தெற்கிலும் சிறிமாவோ அரசாங்கத்தின் பிரபல்யம் குறைவடைந்து கொண்டே வந்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, டட்லி சேனநாயக்கவின் மரணத்தின் பின்னர் அதன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கீழ் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை உருவாக்குவது தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் என, சிறிமாவோ அரசாங்கம் எண்ணியிருக்கலாம். அதிரடி வேகத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அமைத்த பரமேஸ்வராக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக வளாகமாக மாற்றியமைக்கப்பட்டு, 1974 ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கியது. அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க 1974 ஒக்டோபர் 6ஆம் திகதி, பிரதமர் சிறிமாவோ, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

சிவகுமாரனின் மரணம், சத்தியசீலனின் கைது, குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோர் தமிழ்நாட்டுக்குத் தலைமறைவாகியமை என்பவற்றைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர்களின் ஆயுதக்குழுக்களில் பெரும்பாலானவை செயற்படாத சூழல் காணப்பட்டது. இச்சூழலில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான டி.என்.டி என்றழைக்கப்பட்ட தமிழ் புதிய புலிகள் அமைப்பு மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. இக்குழு 'பிரபாகரனின் குழு' என்றறியப்பட்டது. இக்குழு, பிரதமர் சிறிமாவோவின் யாழ்ப்பாண வருகையின் போது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்தது. கறுப்புக் கொடிப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்ததுடன், அதிரடியான குண்டுத்தாக்குதல்களையும் நடத்தி, தமது எதிர்ப்பைக் காட்டத் தீர்மானித்தது.

'ஈழத்துக் காந்தி' என்று, அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்ட செல்வநாயகம் தலைமையிலான தமிழ் ஐக்கிய முன்ணியிடமிருந்து இவற்றுக்கு எந்த நேரடி எதிர்ப்பும் வரவில்லை. மாறாக, இந்த அழைப்புக்கு இசைவாகவே தமிழ் ஐக்கிய முன்னணியும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டனர். தமிழ் புதிய புலிகள் அமைப்பின் மறைமுக இயக்கு கரமாக, தமிழ் ஐக்கிய முன்னணியின் சில தலைவர்கள் இருந்தார்கள் எனக்குறிப்பிடுவோரும் உள்ளனர். எது எவ்வாறாயினும், இக்காலப்பகுதியில் தமிழ் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் இந்த ஆயுதக்குழு இளைஞர்களுடன் முரண்படவில்லை அல்லது முரண்பாட்டைக் காட்டிக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம்.

பிரதமர் சிறிமாவோவுக்கு அதிரடியான வரவேற்பை, தமிழ் புதிய புலிகள் அமைப்பினர் வழங்கினார்கள். யாழ்ப்பாணச் சந்தை, ரயில் நிலையம், காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் வி.பொன்னம்பலத்தின் இல்லம் (இவரே பிரதமரின் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டார்) உட்பட, யாழெங்கும் ஏறத்தாழ ஆறு இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டன. இக்குண்டு வெடிப்புக்களால் உயிரிழப்போ, பெருஞ்சேதங்களோ விளையவில்லை. எனினும், இவை கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் கறுப்புக் கொடி போராட்டங்களும் நிகழ்த்தப்பட்டது. ஆங்காங்கே பஸ்களுக்குக் கல்லெறிவும் இடம்பெற்றது. பிரதமர் சிறிமாவோவுக்கு வரவேற்பளிக்க, பெருந்தொகை மக்கள் திரளவில்லை. தமிழ் மக்களும் பிரதமரின் வருகையைப் புறக்கணிக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடாக இது இருக்கலாம். முன்பு டட்லி சேனநாயக்க, யாழ்ப்பாண வருகை தந்தபோது அவருக்கு அமோக வரவேற்பினை தமிழ்த் தலைமைகளும், தமிழ் மக்களும் வழங்கியிருந்தனர்.

ஆனால், தற்போது நிலைமை வேறாக இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் பிரதமர் சிறிமாவோவுக்கு வரவேற்பளிப்பதற்கு ஆட்சேர்க்க அமைச்சர் குமாரசூரியரும், அல்‡ப்றட் துரையப்பாவும் பகீரதப் பிரயத்தனம் செய்தும் பெருமளவு வெற்றி கிட்டவில்லை. சுருக்கமாகச் சொன்னால், பிரதமர் சிறிமாவோவின் யாழ். விஜயம் வெற்றியளிக்கவில்லை. தமிழ் மக்களின் எதிர்ப்பு ஆணித்தரமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதேவேளை ஆங்காங்கே நடந்த சிறு குண்டுவெடிப்புக்கள் தமிழ் இளைஞர்கள் செல்லத் தயாராக இருந்த வன்முறையும் அழிவும் நிறைந்த பாதையை உணர்த்துவதாக இருந்தது. 'தனிச்சிங்கள'ச் சட்டம் முதல் ஏறத்தாழ இரண்டு தசாப்தகாலமாக தமிழ்த் தலைமைகளின் அஹிம்சை வழிப் பயணத்தை அலட்சியம் செய்ததன் விளைவை எதிர்நோக்க வேண்டிய சூழலில் அரசாங்கம் இருந்தது.

எது எவ்வாறாயினும், தமிழ் மக்கள் நீண்டகாலமாக வேண்டிய தமிழர் பிரதேசத்தில், ஒரு பல்கலைக்கழக வளாகம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதொரு விடயம். இந்த யாழ். பல்கலைகழக வளாகமானது, 1979இல் தன்னாட்சிகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 

காங்கேசன்துறை இடைத்தேர்தல்

முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசியலமைப்பின் கீழ் சத்தயிப்பிரமாணம் செய்து தேசிய அரசு சபையின் உறுப்பினர்களானமை தொடர்பில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பினைச் சமாளிக்கும் வகையிலும் சா.ஜே.வே.செல்வநாயகம் 1972ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி. தனது தேசிய அரசு சபை உறுப்பினர் பதவியை (நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை) இராஜினாமாச் செய்திருந்தார்.

அன்றைய தேர்தல் நடைமுறைகளின் கீழ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகுமிடத்து, அந்த குறித்த தொகுதியிலே இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், சிறிமாவோ அரசாங்கம் செல்வநாயகத்தின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் இடைத் தேர்தலை நடத்துவதைத் தாமதித்தது. ஏறத்தாழ இரண்டரை வருடங்களின் பின்னர் காங்கேசன்துறைத் தொகுதியில் 1975 பெப்ரவரி 6ஆம் திகதி இடைத்தேர்தலை நடத்த சிறிமாவோ அரசாங்கம் முடிவெடுத்தது.

இதற்கிடையில், தமிழ் மக்களிடையே தமது அரசாங்கத்துக்கெதிராக ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பலையைச் சாந்திப்படுத்த வேறும் சில நடவடிக்கைகளை சிறிமாவோ முன்னெடுக்கத் தலைப்பட்டார். அப்போது பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் நடைமுறையிலிருந்த 'தரப்படுத்தல்' முறையை ஆராய்ந்து மாற்றியமைக்க பீற்றர் கெனமன் தலைமையிலான குழுவினர் முன்மொழிந்திருந்த 'மாவட்ட ஒதுக்கீடு' அடிப்படையிலான 'தரப்படுத்தல்' முறையை சிறிமாவோ அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை பாதிப்படைந்தாலும், தமிழ் பேசும் ஏனைய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் அளவு அதிகரித்திருந்தது. ஆயினும், ஒட்டுமொத்தமாகப் பார்ப்பின் 'தரப்படுத்தலுக்கு' முன் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்ற அளவை விட, 'தரப்படுத்தலுக்கு'ப் பின், தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்ற அளவு பெரிதளவு குறைந்திருந்தது.

ஆனால், தமிழர் பிரதேசத்தில், யாழ்ப்பாணத்தைத் தாண்டி ஏனைய மாவட்ட மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை தாம் அதிகப்படுத்தினோம் என சிறிமாவோ அரசாங்கம் சார்பில் கூறப்பட்டது. மேலும், தமிழ் பரீட்சகர்கள், தமிழ் மாணவர்களுக்கு அதிக புள்ளிகள் வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த கெனமன் குழு, தனது அறிக்கையில் 'பித்தலாட்ட வகையில் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட மொழிப்பிரிவு முழுவதற்கும் புள்ளிகளைத் திரிபுபடுத்தி வழங்குதல் என்பது சாத்தியமானதோ, நடைறைச்சாதகமானதோ இல்லை' என்று குறிப்பிட்டதுடன் 'மொழிவாரித் தரப்படுத்தலானது, சமூகங்களிடையே பொதுப்பரீட்சையின் நேர்மை, நம்பிக்கை பற்றி ஐயத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஆழப்படுத்திவிட்டது' என்றும் குறிப்பிட்டது.

தனி அரசுக்கான மக்களாணையை வேண்டுதல்

காங்கேசன்துறைத் தொகுதி இடைத் தேர்தலில், தமிழ் ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக 'வீட்டுச் சின்னத்தில்' சா.ஜே.வே.செல்வநாயகம் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலை செல்வநாயகமும், தமிழ் ஐக்கிய முன்னணியும் தமிழ் மக்கள் தம் மக்களாணையை முழுநாட்டுக்கும், முழு உலகுக்கும் சொல்லத்தக்கதொரு சந்தர்ப்பமாகக் கருதினர். இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி, தமிழ் மக்களின் ஆணையை செல்வநாயகம் வேண்டினார். முதலாவது, தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பினை முற்றாக நிராகரிக்கின்றனர் என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் தமக்கான தனி அரசு ஒன்றை ஸ்தாபிக்கத் தீர்மானித்திருக்கின்றார்கள் என்பது. ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக ஒற்றையாட்சிக்குள் குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வுக்காக ஹர்த்தால் நடத்தி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என அஹிம்சை வழியில் போரிட்டு, பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒப்பந்தங்கள் போட்டு, எல்லாம் தோல்வியடைந்து தமிழ்மொழியும், தமிழ் மக்களும் கையறு நிலையில் இருந்த பொழுதில், தமிழ் இளைஞர்கள் இந்த பிரச்சினையை தம் கையில் எடுத்துக்கொள்ளத் தொடங்கிய பொழுதில் சா.ஜே.வே.செல்வநாயகம், 'பிரிவினை' அதனால் வரும் 'தனியரசு' என்ற விடயத்தை மக்களாணைக்காக முன்வைக்கிறார்.

செல்வநாயகம் 'பிரிவினை' கோரியது தவறு என்றால், 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது யார் தவறு, 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாது ஏமாற்றியது யார் தவறு, பெரும்பான்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை கூட நடத்தாது சிறிமாவோ அரசாங்கம் எதேச்சாதிகரமாக நடந்தது யார் தவறு, தமிழ்மொழிக்கு எந்தவித அந்தஸ்தும் அளிக்காத, 'தனிச்சிங்களச்' சட்டத்தில் சொன்னவற்றுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது யார் தவறு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முற்றாக நிராகரித்த, புறக்கணித்த முதலாவது அரசியல் யாப்பை, தமிழ் மக்களின் எந்தவொரு கோரிக்கையையும் மதிக்காது நிறைவேற்றியமை யார் தவறு, பல இனக்கலவரங்களை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்தது யார் தவறு, தரப்படுத்தல் மூலம் தமிழ் மக்களின் உயர் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறித்தது யார் தவறு, இத்தனையும் தவறு என்றால், செல்வநாயகம் 'பிரிவினை' கோரியது தவறு எனலாம். இத்தனை தவறுகளுக்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பொறுப்பேற்குமென்றால், 'பிரிவினை' என்ற தவறுக்கும் செல்வநாயகம் பொறுப்பெடுக்கலாம். இங்கு ஒரு விடயம் சுட்டிக் காட்டப்பட்டே ஆக வேண்டும், 'பிரிவினையோ', 'தனியரசோ' (அல்லது 'தனிநாடோ') இதுநாள் வரை தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கவில்லை.

'அடங்காத் தமிழன்' சி.சுந்தரலிங்கம் உட்பட சில தரப்பினர் தனிநாட்டுக்கான கோரிக்கையை பலமுறை வைத்தும் தமிழ் மக்கள் அதன்பால் ஈர்ப்புக்கொள்ளவில்லை. ஒருநாட்டுக்குள் சுயமரியாதையுடன், சமவுரிமைகளுடன் வாழவே தமிழ் மக்கள் விரும்பினார்கள், இன்றும் விரும்புகின்றார்கள். அதனைச் செய்வதற்கு எந்த சமரசத்துக்கும் தமிழ்த் தலைமைகள் தயாராகவே இருந்தார்கள். 'பண்டா-செல்வா', 'டட்லி-செல்வா' ஒப்பந்தங்கள் எல்லாம் தனிநாடு கேட்பதற்கான அல்லது சமஷ்டியைக் கேட்பதற்கான ஒப்பந்தங்கள் அல்ல, மாறாக மிகக்குறைந்தபட்ச தீர்வுகளையே அவை வேண்டின. அந்த அற்புதமான சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தால் கிழித்தெறியவும், தூக்கியெறியவும் பட்டபின்னர். தமிழ் மக்களின் நிலைப்பாட்டைக் கேட்கக்கூட சிறிமாவோ அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், 'பிரிவினையை' செல்வநாயகம் முன்வைக்க வேண்டி ஏற்படுகிறது.

செல்வநாயகத்துக்கு மாற்றாக ஒரு பலமான போட்டியாளரை தேர்தல் களத்தில் இறக்க வேண்டிய தேவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் வி.பொன்னம்பலத்தை களமிறக்க ஐக்கிய முன்னணி தீர்மானித்தது. ஆனால் 'தனியரசு' கோரி களமிறங்கியிருக்கும் செல்வநாயகத்துக்கு மாற்றாக இறங்குவதாயின் நியாயமான தீர்வொன்றையாவது மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும் என வி.பொன்னம்பலம் கருதினார். பிராந்திய தன்னாட்சி என்ற மாற்றை வழங்கவேண்டும் என்பதே வி.பொன்னம்பலத்தின் கோரிக்கை.

இது நியாயமானதும் கூட. 'பண்டா-செல்வா'-விலும், 'டட்லி-செல்வா'-விலும் தமிழரசுக்கட்சி கோரியதும் பிராந்திய தன்னாட்சி அடிப்படையிலான தீர்வொன்றைத்தான். வி.பொன்னம்பலத்தின் அழுத்தமான கோரிக்கையைத் தொடர்ந்து, அவரது கட்சியின் அரசியற்குழு உத்தியோகபூர்வமற்றமுறையில் பிராந்திய தன்னாட்சி என்பதை மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க அனுமதி தந்தது. அதைக்கூட உத்தியோகபூர்வமற்றவகையிலேயே செய்ய வேண்டியதாக இருந்தது.

இதிலிருந்து ஒன்று மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. தமிழரசுக் கட்சி 'பிராந்தியத் தன்னாட்சி' அடிப்படையிலான தீர்வொன்றைக் கோரியபோது, அதனை வழங்கத் தயாரில்லாதவர்கள், தமிழ் ஐக்கிய முன்னணி 'தனியரசு' கோரும் போது 'பிராந்தியத் தன்னாட்சியை' தாம் பரிசீலிக்கத் தயார் எனும் நிலைக்கு வந்திருந்தார்கள். இலங்கை இனப்பிரச்சினை வரலாறு முழுவதும் இந்த பேரம் பேசும் பலப்பரீட்சை நடந்துகொண்டே இருந்தது. ஆனால், அதில் கொடுமையான விடயம், இருதரப்பும் தக்க சமயத்தில் சாணக்கியமாகச் செயற்பட்டு சாத்தியமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. அந்த தவறின் விளைவை அப்பாவி மக்களின் உயிரையும், உதிரத்தையும் காவுகொண்டது.

(அடுத்தவாரம் தொடரும்... )

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X