Shanmugan Murugavel / 2016 ஜூன் 15 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் மீது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுச் சமத்தப்பட்டுள்ளது.
அவனது செயற்பாடுகள் தொடர்பாக, சமூக ஊடக இணைத்தளப் பகிர்வுகளூடாக அறிந்துகொண்ட பொலிஸார், சிட்னியிலுள்ள அவனது வீட்டில் வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கைது செய்தனர்.
'பயங்கரவாத நடவடிக்கைக்குத் தயார்படுத்தினார் அல்லது திட்டமிட்டார் என்ற அடிப்படையில், அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பாரிய குற்றத்தைப் புரியும் நோக்குடன் தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என, நியூ சௌத் வேல்ஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
அவனுக்கான பிணை மறுக்கப்பட்டதோடு, சிறுவர்களுக்கான நீதிமன்றமொன்றில், இன்று மாலையில் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.
இந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டதையடுத்து, மேலதிக ஆபத்துகள் காணப்படுமா என்பது தொடர்பான அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும், அவ்வாறான எந்தவொரு நிலைமையும் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளுக்கும் இந்தச் சம்பவத்தும் தொடர்பில்லை எனவும் இது தனித்த சம்பவம் எனவும் உறுதிப்படுத்தினர்.
அவுஸ்திரேலியாவின் உள்ளூர்ப் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை, 2014ஆம் ஆண்டு செப்டெம்பரில் 'உயர்வு" என்ற நிலைக்கு மாற்றப்பட்டிருந்தது. அத்தோடு, வெளிநாட்டு ஜஹாதிக் குழுக்களில் போரிடுவதற்காக, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 110 பேர், இதுவரை நாட்டைவிட்டு வெளியே சென்றுள்ளதாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .