Shanmugan Murugavel / 2016 ஜூன் 15 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அரசியல் வாழ்வில் தனது 44ஆவது கௌரவ கலாநிதிப் பட்டத்தை இந்த மாதம் பெற்றுக்கொண்ட துருக்கி ஜனாதிபதி றெசெப் தய்யீப் எர்டொவான், தனது உண்மையான கல்விப் பட்டங்கள் குறித்துப் பொய் சொல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2003-04 காலப்பகுதியில் பிரதமராகப் பதவி வகித்து, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் எர்டொவானின் கல்விப் பட்டங்கள், வெறுமனே அரசியல் பிரச்சினையன்று. துருக்கியின் அரசியலமைப்பின்படி, நான்கு ஆண்டுகள் நீடித்த பல்கலைக்கழகப் பட்டமொன்றைப் பூர்த்திசெய்து, அதில் சித்தியடைந்தவரே அந்நாட்டு ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியானவராவார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சுயசரிதையின்படி, 1981ஆம் ஆண்டு, தனது பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள மார்மரா பல்கலைக்கழகத்தில் பொருளாதார மற்றும் நிர்வாக பீடத்தில் அவர் தனது கல்வியைப் பூர்த்திசெய்துள்ளார்.
ஆனால், துருக்கியின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் சங்கத்தின் கருத்துப்படி, எர்டொவானிடம் பல்கலைக்கழகப் பட்டம் கிடையாது. மாறாக, கல்லூரியில் பெறப்பட்ட டிப்ளோமா மாத்திரமே உண்டு. அவர் கல்விகற்ற நிறுவனம், 1983ஆம் ஆண்டில் - தான் பட்டம்பெற்றதாக ஜனாதிபதி கூறும் 1981க்கு 2 ஆண்டுகளின் பின்னர் - தான், மார்மரா பல்கலைக்கழகத்தின் அங்கமாக மாறியது.
இதன் காரணமாக, ஜனாதிபதிப் பதவியிலிருந்து தய்யீப் எர்டொவான் விலக்கப்பட வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.
தனக்குக் கிடைத்த கௌரவ கலாநிதிப் பட்டங்களைத் தவிர, வெளியிடங்களில் தன்னை ஓர் அறிவியலாளராகவே காட்டிக்கொள்ளும் எர்டொவானுக்கு, இந்த புதிய சர்ச்சை, அவமானகரமானதாகவும் அதே நேரத்தில் பதவிக்கு ஆப்பு வைக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்ற குரல்கள் அதிகரித்துவரும் அதேநேரத்தில், இதை வைத்து ஜனாதிபதியைக் கேலி செய்யவும், எதிர்க்கட்சிகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சட்டபீட பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்து, சிவில் உரிமைகளுக்கான சட்டத்தரணியாகவும் அதேநேரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவராகவும் உள்ளபோதிலும், அவருக்கு வெறுமனே 6 கௌரவ கலாநிதிப் பட்டங்களே காணப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், எர்டொவானை மேலும் அவமானப்படுத்துமுகமாக, புதிய சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கலாமென அறிவுரை கூறியுள்ளன.
இந்த விடயத்தில், தெளிவான விளக்கத்தை வழங்க ஜனாதிபதி தவறியுள்ளார் எனத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியின் பிரதித் தலைவரான முராட் எமிர், துருக்கியின் நற்பெயருக்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, ஜனாதிபதியாக வருவதற்குத் தேவையான கல்வியறிவு என்ற விடயத்தை நீக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கலாம் என, நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
குர்திஷ் போராளிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகயை எதிர்க்கும் பல்கலைக்கழகச் சமூகங்கள் உட்பட அறிவியலாளர்களை, ஜனாதிபதி எர்டொவான், கடுமையாக விமர்சித்திருந்த பின்னணியிலேயே, இந்தச் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .