Thipaan / 2016 ஜூன் 16 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
உலகத்தில், அதிகம் பாகுபாட்டுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்ற சிறுபான்மைக் குழுமமாக, சமபாலுறவாளர்கள் காணப்படுகிறார்கள் என்றால், அது மிகையில்லை. சாதாரண எள்ளலில் ஆரம்பித்து, அவர்களின் 'வித்தியாசமான' பாலியல் தெரிவுக்காக, 'சட்டங்களினால்' அல்லது சமுதாயக் கட்டமைப்புகளால் கொலை செய்யப்படுவது வரை, அவர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லன்டோவில் காணப்படும் சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில், ஆயுததாரியொருவர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலால், குறைந்தது 50 பேர் உயிரிழந்து, 53 பேர் காயமடைந்தார்கள் என்ற செய்தி, ஒரு வகையில் கோபத்தையும் ஒரு வகையான இயலாமையையும் ஏற்படுத்தியிருந்தது.
அந்தத் தாக்குதலை மேற்கொண்டவரின் பெயர் ஓமர் என ஆரம்பிக்கிறது என்ற தகவல் வெளியானதும், உலகில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்ற முஸ்லிம்களில் ஒரு பிரிவினரின் அல்லது இஸ்லாமைப் பின்பற்றுவோரில் ஒரு பிரிவினரின் நடவடிக்கை தொடர்கிறதோ என்ற ரீதியில், விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையில் தான், ஒர்லன்டோ தாக்குதல் தொடர்பான கருத்துகளையும் அதில் ஈடுபட்ட நபரது பின்புலங்கள் தொடர்பான விடயங்களையும் ஆராய்வது முக்கியமானது.
மேற்கத்தேய நாடுகளின் அண்மைக்கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், முஸ்லிம் ஒருவரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல், உடனடியாகவே 'பயங்கரவாதத் தாக்குதல்' என, மேற்கத்தேய ஊடகங்களால் முத்திரை குற்றப்பட்டு விடுகிறது. மறுபுறத்தில், வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அவ்வாறு அழைக்கப்படுவதற்குச் சிறிது காலமெடுக்கும், இல்லாவிடின், 'மனநிலை பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட தாக்குதல்' என வர்ணிக்கப்படும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அவ்வூடகங்களால் வர்ணிக்கப்படுவதைப் போலவே, பயங்கரவாதத் தாக்குதல்களாக மாறிவிடுகின்றன. கொலராடோவில் 'பிளான்ட் பேரன்ஹூட்' அமைப்பின் மீது, கருக்கலைப்புக்கெதிரான கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின ஆணால் கடந்தாண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவிர, அண்மைக்காலத்தில் வெள்ளையினத்தவரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் எதையும் குறிப்பிடும்படியாக இல்லை.
இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதற்கு, பயங்கரவாதத்தின் வரைவிலக்கத்தைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். சர்வதேசரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஐ.நாவின் வரைவிலக்கணமெதுவும் இதுவரை கிடையாது என்ற போதிலும், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விமர்சனமாக, 'அரசியல், சமய, கொள்கை மாற்றமொன்;றுக்காக, வன்முறையை அல்லது வன்முறை அச்சுறுத்தலைப் பயன்படுத்துதல், பயங்கரவாதமாகும்' என்பது காணப்படுகிறது. பாடசாலையில் சென்று சிறுவர்களைக் கொல்பவனுக்குக் கொள்கை மாற்றமோ, அரசியல் தேவையோ இருக்காது. ஒன்றில் தனிப்பட்ட பகையாக இருக்க வேண்டும், இல்லையெனில், மனநிலையில் குழப்பமாக இருக்க வேண்டும். மறுபுறத்தில், சமபாலுறவாளர்களுக்கு எதிரான எண்ணத்தால் அவர்களை இலக்கு வைப்பதிலோ அல்லது கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டால் அச்சேவையை வழங்கும் நிலையங்களைத் தாக்குவதிலோ, கொள்கை, அரசியல் அல்லது சமயம் காணப்படுகிறது. எனவே, அது பயங்கரவாதமே.
ஒர்லான்டோ போன்ற தாக்குதல்களை நிறுத்துவதற்கு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காரணங்களை அறிவது முக்கியமானது, அவசியமானது. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், 1. தாக்குதலுக்கு முன்னர் தாக்குதலாளி 911க்கு அழைத்து, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கு ஆதரவு தெரிவித்தார். 2. சமபாலுறவுக்கு எதிரானவர் அவர். 3. அவருக்கு மனநிலைப் பிறழ்வு காணப்படுகிறது ஆகிய 3 காரணங்கள் அல்லது அனுமானங்கள் காணப்படுகின்றன.
அவருக்கு மனநிலைப் பிறழ்வு காணப்படுகிறது என்பது, அனேகமாக உண்மையாக இருக்கும். இரக்கமேதுமின்றி, அப்பாவிகளை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்வதென்பதே, மனநிலைப் பிறழ்வு தான். ஆகவே, அடுத்த காரணங்கள் தான் முக்கியமானவை.
இரு ஆண்கள் முத்தமிட்டதைக் கண்டு கோபமடைந்திருந்தார் என அவரது தந்தை தெரிவித்தமை, சமபாலுறவாளர்களுக்கு எதிரானவர் என அவரது முன்னாள் மனைவி தெரிவித்தமை ஆகியன, இந்தத் தாக்குதல் சமபாலுறாவளர்களை இலக்குவைத்ததாக இருந்திருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. அவரது நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்த இவர்கள் தெரிவித்த கருத்துகள், உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், நேற்றுமுன்தினம் வெளியான தகவல்கள், இதற்கு மாறானவையாக இருக்கின்றன. தாக்குதலாளி ஓமர் மட்டீனே, ஒரு சமபாலுறவாளராக இருக்கலாம் என்பது தான் அந்தத் தகவல். 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதிகளுக்கு அவர் சென்று வருவதாகவும், சமபாலுறவாளர்களுக்கான அலைபேசிச் செயலிகளை அவர் பயன்படுத்தி, ஆண்களோடு நெருங்க முற்பட்டார் என்பதும், மிக முக்கியமான தகவல்கள். இந்த விசாரணையின் போக்கையே மாற்றிப் போட வைக்கக்கூடியன.
மூன்றாவது காரணமான ஐ.எஸ்.ஐ.எஸ் விசுவாசம் அல்லது தொடர்பு என்பது, ஓரளவு சாத்தியமானதாகக் காணப்படுகிறது. பாதுகாப்பு நிறுவனமொன்றில் ஆயுதந்தாங்கிய அதிகாரியாகக் கடமையாற்றிய ஓமர், இணையத்தளங்கள் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ் மேற்கொண்டுவரும் பிரசாரங்களால் ஈர்க்கப்பட்டிருக்க முடியும். தன்னுடன் இருந்தபோது அவர், மதத்தை அதி தீவிரமாகப் பின்பற்றியதில்லை என்ற அவரது முன்னாள் மனைவியின் கூற்று முக்கியமானது என்ற போதிலும், 2011ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்ற பின்னர் நடந்தவை குறித்து, அவருக்குத் தெரிந்திருக்காது. இதற்கு முன்னர் சான் பெர்னான்டினோவில் தாக்குதலை மேற்கொண்ட தம்பதியினரும், நீண்ட காலமாக தீவிர மத அடிப்படைவாதிகளாக இருந்திருக்கவில்லை என்பது, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஆனால், சமபாலுறவாளராக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் கொண்ட ஓமர், எதற்காக அந்த இரவு விடுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பது முக்கியமான, பதில் தேட வேண்டிய கேள்வி. அவருக்குப் பழக்கமான இடம் என்பதால் அதைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். இல்லாவிடின், என்னதான் சமபாலுறவாளராக இருந்தாலும், தனது மதத்தில், அவர்களைக் கொல்லுமாறு சொல்லப்படுகிறது என்ற பிரசாரத்தினால் அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாம். இதைக் கண்டுபிடிக்க வேண்டியது, புலனாய்வாளர்களின் பொறுப்பு.
அவருடைய காரணம் என்னவாக இருந்தாலும், ஆயுதங்களைப் பெறுவதற்கு அமெரிக்காவில் காணப்படும் இலகு தன்மையென்பது, இவ்வாறான பேரழிவுகளுக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. ஆயுதங்கள் இல்லாதுவிடின், என்னதான் வெறுப்பாக இருந்தாலும், இவ்வளவிலான பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால், அமெரிக்காவிலுள்ள பழைமைவாதிகள், அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தத்தைத் தலையில் வைத்துக் கொண்டு, ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
இந்தத் தாக்குதல் இவ்வாறிருக்க, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், சாதாரணமானவையன்று. குறிப்பாக, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகளைக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்புவதன் மூலம், தீவிரக் கொள்கைகளையுடைய வெள்ளையினத்தவர்களைத் தன்வசப்படுத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல், அவரை மேலும் பலப்படுத்தும். முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், இத்தாக்குதலின் பின்னர் அவர், தனது கொள்கை சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையில், ஆப்கானிஸ்தான் பூர்வீகத்தைக் கொண்டிருந்தாலும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஓமர், வெளியிலிருந்து முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற ட்ரம்ப்பின் கொள்கையால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இந்த விடயத்தை அரசியற்படுத்தி, முஸ்லிம்களுக்கெதிரான சூழலை உருவாக்கும் ட்ரம்ப்பின் முயற்சிக்கு, ஆழமாகச் சிந்திக்கக்கூடியவர்கள் ஆதரவு வழங்குவதில்லை. மாறாக, யாரும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வோரே ஏற்றுக்கொள்கிறார்கள். இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், அனைத்து நாடுகளின் சனத்தொகையிலும் கணிசமானளவு சதவீதமானோர், மேற்கூறப்பட்ட வகையினராகவே இருக்கின்றனர்.
முஸ்லிம்கள் அனைவருமே, இந்தத் தாக்குதல் மட்டுமல்ல, எந்தவொரு தாக்குதலுக்கும் ஒட்டுமொத்தமாகப் பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது. ஆனால், சுய விமர்சனம் என்ற ஒன்று, மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற ஒன்று.
ஷரியா சட்டத்தை ஆதரிப்போர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாடுகளில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் என, கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒர்லன்டோ தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என, அதே தரப்பினர் கூற முடியாது. ஏனெனில், ஷரியா சட்டத்தின்படி, சமபாலுறவாளர்களுக்கு மரண தண்டனை என்பது காணப்படுகிறது. ஆக, சட்டத்தின்படி சமபாலுறவாளர்களுக்கு மரணம் வழங்குவதை ஆதரித்துக்கொண்டு, அதே கொள்கையைத் தனிநபர் கடைப்பிடிக்கும் போது மாத்திரம் எதிர்ப்புத் தெரிவிப்பது, இரட்டைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகும்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்ட ஓமருக்கு, சமபாலுறவாளர்களின் வெறுப்பு இருந்திருந்தாலோ அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான விசுவாசம் இருந்திருந்தாலோ, அது அவரது மதத்தினாலேயே அல்லது கலாசாரத்தினாலேயே தூண்டப்பட்டிருக்கும். அந்தப் பொறுப்பிலிருந்து, அந்த மதத்துக்குரியவர்கள் விலகிவிட முடியாது. ஆனால் அதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான வெறுப்பென்பது, ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்று. மதம் சார்பான விமர்சனங்கள், அந்த மதத்துடன் நிறுத்தப்பட வேண்டும். அந்த மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பொதுமைப்படுத்தும்படியான விமர்சனங்கள், அந்த மக்களைப் பொறுத்தவரை அநியாயமானது என்பது மாத்திரமல்லாமல், அந்த மக்களைத் தம்வசம் இழுக்க நினைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஆயுதக்குழுக்களுக்கு, வசதியாக அமைந்துவிடும். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அல்லது உள்ளாகுமென உணர்ந்த இனங்கள், ஆயுதங்களின் பக்கம் சாய்ந்த வரலாறும் அவற்றினால் உண்டான இரத்தக் களரிகளும், நாமெல்லாரும் கண்டு வந்தது தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .