2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ இல்லமில்லை

Kogilavani   / 2016 ஜூன் 16 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று இல்லை.

அவர், கொழும்பிலுள்ள தொடர்மாடியிலுள்ள வீடொன்றிலேயே வசித்து வருகின்றார் என அவ்வீடு தொடர்பான விவரங்களை, இந்துனில் உச்சகொட ஆரச்சி என்ற எழுத்தாளர் ஒருவர், தனது பேஸ்புக் கணக்கில், பதிவொன்றை ஏற்றியுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது,
'இன்று (14.06.2016) மாலை, தரிந்துவும் நானும், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தங்கியுள்ள தொடர்மாடி வீட்டைத் தேடிச் சென்றோம். அவர் தங்கியுள்ள தொடர்மாடிக் குடியிருப்பைக் கண்டுபிடிக்க முடியாமல், அவ்வீதியிலேயே நாம் பலமுறை பயணித்தோம். பின்னர், அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலரிடம், நாம் தேடும் வீட்டின் இலக்கத்தைக்கூறி விசாரித்தோம். அதற்கு அவர்கள், „நீங்கள் கூறும் இலக்கத்திலான வீடுகள், இந்த வீதியில் இறுதியிலேயே அமைந்துள்ளன. யாருடைய வீட்டைப் பற்றிக் கேட்கிறீர்கள்?... என்று வினவினர். அதற்கு நாம், 'இரா.சம்பந்தரின் வீடு" என்றோம்.

"ம்ம்ம், அந்தப் பக்கமாகப் போய் பாருங்கள். கீழ்மாடி வீடாக இருக்கவேண்டும்' என்ற அவர்கள், வீதியின் ஒருபுறத்தை நோக்கி கையை நீட்டினர். அவர்கள் காட்டிய திசையை நோக்கிப் பயணித்த நாம், தொடர்மாடி வீடொன்றுக்கு அருகில் நின்றோம். அங்கு நின்றுகொண்டு, எதிர்க்கட்சித் தலைவரின் வீடு எதுவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், மேல் மாடியொன்றிலிருந்து, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கீழே இறங்கி வருவதை அவதானித்தோம். அவரின் உதவியுடனேயே, மேல் மாடியில் தான் சம்பந்தரின் வீடு அமைந்துள்ளதை அறிந்துகொண்டோம்.

சில படிகளைத் தாண்டிப் பயணித்து, மூன்றாவது மாடியை அடைந்தோம். அங்கு மிகச் சிறிய, சாதாரண வீட்டுக்குள் நுழைந்தோம். அவ்வீட்டை அடைந்ததும், எமக்குள் பல கேள்விகள் உருவாகின. அக்கேள்விகளுக்கு பதில் தேட எண்ணினோம். அக்கேள்விகளை, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடம் தொடுத்தோம். „இந்த மாடிக்குடியிருப்புக்கு லிப்ட் வசதி இல்லையா? முதியவர் ஒருவர், இந்த மாடிக் குடியிருப்பில், படிகளில் ஏறி இறங்குவதென்பது கடினமானதென்பதை நாம் அறிவோம். அதற்கும் மேலாக, இலங்கை போன்ற அழகான நாடொன்றுக்குள், அரசியல் தலைவர் ஒருவர், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் தங்கியிருப்பார் என்பதை நாம் நினைத்தும் பார்க்கவில்லை என்றோம்'.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .