George / 2016 ஜூன் 18 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவையிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ்
இலங்கையில் பௌதீக ரீதியாக பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் பயங்கரவாத சிந்தனை சிலரிடமிருந்து இன்னும் மறையவில்லையென பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அத்துடன் இந்தப் பயங்கரவாத சிந்தனை தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.
தியதலாவை இராணுவ அகாடமியில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் இராணுவ கெடட் அதிகாரிகளின் 89ஆவது பிரியாவிடை அணிவகுப்பு தியதலாவை இராணுவ முகாமில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"இந்த இராணுவ முகாமில் பயிற்சிப்பெற்று வெளியேறும் இராணுவ அதிகாரிகள் உணர்ச்சிபூர்வமானதும் தொழிநுட்பத்தால் வளர்ச்சியடைந்த சமூகத்துக்குள் செல்லவுள்ளனர். இதுபோன்ற இராணுவ முகாமில் பயிற்சிப்பெறும் போது, வெளியுலகத்துடனான தொடர்பு மட்டுப்படுத்தப்படுகின்றது.
பயிற்சிகளை முடித்து வெளியேறும் அதிகாரிகளான நீங்கள் பல சாவால்கள் நிறைந்த உலக சூழலுக்குள் இன்றிலிருந்து பிரவேசிக்கின்றீர்கள்.
இவ்வாறு இங்கிருந்து பயிற்சிகளை பெற்று வெளியேறும் இராணுவ வீரர்கள் சுற்றுச்சூழல் அரசியல், சமூக - கலை - கலாசாரம் தொடர்பில் புரிதலை கொண்டிருக்கும் போதே பரிபூரணமாக சேவையை மக்களுக்கும் நாட்டுக்கும் வழங்கமுடியும்.
அண்மைகாலமாக முப்படை பொலிஸ் போன்ற பாதுகாப்பு தரப்புகள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு இராணுவம் உட்பட பாதுகாப்புதரப்பு மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை ஊடாக வழங்கிய சேவையை எக்காலத்திலும் மறக்கமுடியாது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாகவே இன்று சமாதானம் நிலவுகின்றது. அவ்வாறு பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவ வீரர்களாகிய உங்களையும் சார்ந்தது.
பௌதீக ரீதியாக தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் தீவிரவாத சிந்தனை சிலரிடமிருந்து இன்னும் மறையவில்லை. ஆகவே, பாதுகாப்பு தரப்பினராகிய நாம் மிகவும் அவதானத்துடன் இருந்து இந்நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும்.
இராணுவ அதிகாரிகள் தொடர்பில் இன்று பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் இராணுவ அதிகாரிகளிடம் நேர்மையானதும், ஒழுக்கமானதுமான சேவையினை எதிர்ப்பார்க்கின்றோம் அத்தோடு, அனைத்து பாதுகாப்பு தரப்புகள் ஒழுக்ககோவைகளுக்கு புறம்பாக செயற்படாமல் இராணுவத்தின் கௌரவத்தையும், நாட்டின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்' என பாதுகாப்பு செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .