Gavitha / 2016 ஜூன் 19 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகரித்த இதயத்துடிப்புக் காரணமாக, இலங்கையணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமின்ட எரங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதே தினத்தில், விதிமுறைகளுக்கு புறம்பான பந்துவீச்சுபாணியைக் கொண்டிருப்பதால், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச எரங்கவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான பந்துவீச்சுப்பாணியை எரங்க கொண்டிருப்பதாக, கடந்த மாதம் இடம்பெற்ற, இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இம்மாதம் ஆறாம் திகதி லொக்போரௌவில் வைத்து எரங்க சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இதன் முடிவுகள், தற்போது வெளியாகியுள்ள நிலையிலேயே, எரங்கவின் அனைத்து பந்துவீச்சுக்களிலிலும் முழங்கையின் விரிவானது, 15 பாகைக்கும் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறைகளின்படி, விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீச்சுபாணியைக் கொண்டிருக்கின்றார் என்று கருதப்படும் ஒரு பந்துவீச்சாளர், சோதனை முடிவுகள் வெளிவரும் வரையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்ற நிலையில், இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற எரங்க, அப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், அயர்லாந்துக்கெதிராக, இரண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடி, முதலாவது போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன், இரண்டாவது போட்டியில் பந்துவீசியிருக்கவில்லை.
தனது பந்துவீச்சுபாணியை மாற்றி, சர்வதேச கிரிக்கெட் சபையால் அனுமதிக்கப்பட்ட சோதனை நிலையமொன்றினால் அனுமதிக்கப்படும் வரை இலங்கைக்காக எரங்க பந்துவீச முடியாதென்றபோதும், இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அதிகரித்த இதயத்துடிப்புக் காரணமாக, அயர்லாந்தின் டப்பிளினில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள எரங்க, சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், எனினும் நிலையான நிலையில் இருப்பதாகவும் இன்று வரை அயர்லாந்திலேயே இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .