2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

NBA: அதிரடி மீள்வருகையால் சம்பியனானது கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 20 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (NBA) தொடரின் வரலாற்றில், மிகச்சிறந்த மீள்வருகைகளில் ஒன்றை நிகழ்த்திய கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புச் சம்பியன்களான கோல்டன் ஸ்டேட் அணியை 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, தனது முதலாவது பட்டத்தை கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி பெற்றுக்கொண்டது.

தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத் தொடரின் மேற்குச் சம்பியன்களுக்கும் கிழக்குச் சம்பியன்களுக்குமிடையில் 7 போட்டிகள் கொண்ட தொடராக இடம்பெறும் இறுதிப் போட்டித் தொடரில், நான்கு வெற்றிகளைப் பெறும் அணி, சம்பியனாகத் தெரிவாகும்.

இந்த இறுதிப் போட்டித் தொடரின் முதல் 2 போட்டிகளின் தோல்வியடைந்த கவாலியேர்ஸ் அணி, 4 போட்டிகளின் நிறைவில், 1-3 என்ற கணக்கில் காணப்பட்டது. எனவே, சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு, அடுத்த 3 போட்டிகளையும் வெல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதில், 5ஆவது, 6ஆவது போட்டிகளை வென்ற கவாலியேர்ஸ் அணி, 7ஆவது போட்டியை, தீர்மானமிக்க போட்டியாக மாற்றியது.

கலிபோர்னியாவின் ஓக்லான்ட்டின் ஒராக்கிள் எரினா அரங்கில் இடம்பெற்ற இப்போட்டி, அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. முதலாவது காற்பகுதியில், 23-22 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்ற கவாலியேர்ஸ் அணி, இரண்டாவது காற்பாதியை 19-27 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தது. இதன்படி, 42-49 என்ற பின்னிலையில் காணப்பட்டது.

மூன்றாவது காற்பகுதியில் முன்னேற்றகரமான விளையாட்டை வெளிப்படுத்திய கவாலியேர்ஸ் அணி, 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் அந்தக் காற்பகுதியைக் கைப்பற்றியது. எனினும், ஒட்டுமொத்த புள்ளிகள் நிலையில் 75-76 என்ற புள்ளிகள் கணக்கில் அவ்வணிக்குப் பின்னிலையே காணப்பட்டது.

முக்கியமான நான்காவது காற்பகுதியில் மேலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாலியேர்ஸ் அணி, 18-13 என்ற புள்ளிகள் கணக்கில் அந்தக் காற்பகுதியைக் கைப்பற்றியதோடு, 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வென்று, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

போட்டியில் அதிக புள்ளிகளை, கோல்டன் ஸ்டேட் வொரியர்ஸ் அணியின் ட்ரேமொன்ட் கிறீன் பெற்றுக் கொடுத்தார். அவர், 32 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். கவாலியேர்ஸ் அணிக்காக லெப்ரோன் ஜேம்ஸ், 27 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் மிகவும் பெறுமதிமிக்க வீரராக, கவாலியேர்ஸ் அணியின் லெப்ரோன் ஜேம்ஸ் தெரிவானார். போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த லெப்ரோன் ஜேம்ஸ், 'கிளீவ்லான்ட், இது உங்களுக்காக" என, கண்ணீருடன் உரத்த குரலில் சத்தமிட்டார். '1-3 என்ற கணக்கில் பின்னிலையில் இருந்த பின்னர், சிறந்த விளையாட்டுகளை விளையாட எங்களால் முடிந்திருந்தது. இது சிறப்பானது" என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X